2016, பிப்ரவரி மாதம் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்த உமர் காலித் ஆர்.எஸ்.எஸ் பாஜக நடத்தி வரும் வெறுப்பு அரசியலை தோலுரித்து ஆற்றிய நீண்ட உரை மிகத் தெளிவான பார்வை கொண்டது. அவரை ஏன் பாஜக அரசு ஊபா சட்டத்தில் கைது செய்து காராகிருகத்தில் தள்ளி இருக்கிறது என்பதை இந்த உரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
"என் பெயர் உமர் காலித் தான்; ஆனால் நான் பயங்கரவாதி அல்ல."
முதலில், கடந்த பல நாட்களாக வளாகத்திற்குள்ளும் வெளியிலும் போராட்டங்களில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், இந்தப் போராட்டட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் என் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் போராட்டம் நாங்கள் ஐந்து அல்லது ஆறு பேருக்காக மட்டும் நடத்தப்பட்ட ஒன்று அல்ல என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். இன்று இது நம் அனைவருக்குமான போராட்டம். இது இந்தப் பல்கலைக் கழகத்திற்கான போராட்டம். இது ஜே.என்.யு.வின் போராட்டம் மட்டுமல்ல; இந்த நாட்டின் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்குமான போராட்டம். உண்மையில், பல்கலைக் கழகங்களைத் தாண்டி, இது முழு சமூகத்திற்குமான போராட்டம். வருங்காலத்தில் நாம் எப்படிப்பட்ட சமூகத்தை உருவாக்கப் போகிறோம் என்பதற்கான போராட்டம்.
ஊடகங்களிடமிருந்து நான் கற்றுக் கொண்டவை: கடந்த பத்து நாட்களில் என்னைப் பற்றிய பல விஷயங்களை நான் ஊடகங்களின் மூலமாகவே அறிந்து கொண்டேன். நான் அறியாத விஷயங்களைக் கூட அவர்கள் எனக்குத் தெரிவித்தனர். உதாரணமாக, நான் இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றதாக அறிந்தேன். என்னிடம் பாஸ்போர்ட் கூட இல்லை; இருந்தாலும் நான் இரண்டு முறை பாகிஸ்தான் சென்றுவிட்டதாகக் கூறப்பட்டது.
பிறகு, நான் இந்த முழு நிகழ்ச்சியின் "மாஸ்டர் மைண்ட்" என்று கூறப்பட்டது. ஜே.என்.யு. மாணவர்களிடம் நல்ல சிந்தனைத்திறன் இருப்பதாக சொல்வார்கள்; ஆனால் இந்த நிகழ்ச்சியையே நான் திட்டமிட்டதாகவும், 17-18 பல்கலைக்கழகங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்ததாகவும் கூறினர். எனது செல்வாக்கு இவ்வளவு பெரியது என்பதை நானே அறிந்திருக்கவில்லை.
பின்னர், இந்தக் கூட்டத்தை நான் இரண்டு அல்லது மூன்று மாதங்களாகத் திட்டமிட்டு வந்ததாக கூறினர். ஜே.என்.யுவில் ஒரு பொது நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய இவ்வளவு காலம் எடுத்துக்கொண்டால் பல்கலைக் கழகமே மூடப்பட்டுவிடும்.
இதையும் மறுக்கப்பட்டபோது, கடந்த சில நாட்களில் நான் 800 தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டதாக கூறினர். இன்று ஊடகங்களுக்கு எந்த ஆதாரமும் தேவையில்லை; "கூறப்படுகின்றது" என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தத் தேவையில்லை. அவர்கள் சொன்னபடி, அந்த அழைப்புகள் வளைகுடா நாடுகளுக்கும் காஷ்மீருக்கும் செய்யப்பட்டதாம். ஆனால் அதற்கான ஆதாரம் எங்கே? கருத்து கேட்கப்படவில்லை, விளக்கம் பெறப்படவில்லை; எதுவும் இல்லை. அவர்களுக்கு வெட்கமே இல்லை. அவர்கள் வெட்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதே நம்முடைய முட்டாள்தனம். எங்களைப் பற்றிய பொய்யான சித்தரிப்புகள், ஊடக விசாரணைகள், எங்களைச் சிக்கவைக்க முயற்சித்த விதம் - இவை அனைத்தும் மிகவும் ஆபத்தானவை.
அரசாங்கமும், உளவுத்துறையும் (IB) கூட ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிவிட்டன. இருந்தும் மன்னிப்பு கேட்கவோ, விளக்கமளிக்கவோ, மறுப்புச் செய்தி வெளியிடவோ யாருக்கும் தேவையாகத் தெரியவில்லை.
முதலில் இதைக் கேட்டபோது எனக்குச் சிரிப்பு வந்தது. என்னைப் போன்ற ஒருவரை ஜெய்ஷ்-இ-முகம்மதுடன் இணைத்துக் கூறுவதை அந்த அமைப்பே அறிந்தால் என்ன செய்வார்கள் என்று நினைத்தேன். ஒருவேளை அவர்கள் தாங்களே ஜந்தேவாலனில் (ஆர் எஸ் எஸ் தலைமையகம் இருக்கும் இடம்) ஊர்வலம் நடத்தி எதிர்ப்புத் தெரிவிப்பார்களோ!
பொய்கள் பரப்பிய ஊடகங்கள்: ஆனால் அவர்கள் அதைவிடச் சிறப்பாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எங்களைப் பற்றிப் பொய்களைப் பரப்பிய விதம், பலவிதமான குற்றச்சாட்டுகளைச் சுமத்திய விதம் அவற்றைச் செய்த ஊடக நிறுவனங்கள் தப்பித்து விடலாம் என்று நினைத்தால் அது நடக்காது. ஊடக விசாரணைகள் மூலம் இந்த நாட்டின் மக்களுக்கு எதிராக நீங்கள் ஒரு ஆபத்தான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளீர்கள். ஒரு ஆதிவாசியை "மாவோயிஸ்ட்" என்றும், ஒரு முஸ்லிமை "பயங்கரவாதி" என்றும் முத்திரை குத்தி, முழு அரசின் இயந்திரத்தையும் அதற்காகப் பயன்படுத்துகிறீர்கள்.
பலர் உதவியற்றவர்களாக இருப்பதால், அவர்களுக்காகப் பேச யாரும் இல்லாததால், நீங்கள் இதை எளிதாகச் செய்து வந்திருக்கலாம். ஆனால் இந்த முறை நீங்கள் தவறான மக்களுடன் மோதி இருக்கிறீர்கள். ஜே.என்.யு. மாணவர்கள் இதற்கான கணக்கை உங்களிடம் கேட்பார்கள். இந்தப் பொய்களைப் பரப்பிய ஒவ்வொரு ஊடக நிறுவனமும் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.
சில நாட்களுக்குப் பிறகு, என்னைப் பற்றிய கவலை எனக்குக் குறைவாக இருந்தது. ஏனெனில் ஆயிரக்கணக்கான நீங்கள் அனைவரும் எங்களுக்காக நிற்பீர்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். ஆனால் என் சகோதரிகள், என் தந்தை பற்றிய செய்திகளைப் பார்த்தபோதுதான் நான் உண்மையில் கவலைப்படத் தொடங்கினேன்.
என் சகோதரிகளை குறிவைத்து சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட விஷயங்கள், விடுக்கப்பட்ட மிரட்டல்கள், ஒருவரிடம் பாலியல் வன்முறை செய்யப்படும் என்று கூறப்பட்டது; மற்றொருவருக்கு அமிலத் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டப்பட்டது; இன்னொருவரை கொன்று விடுவோம் என்று கூறப்பட்டது. அப்போது எனக்கு கந்தமால் சம்பவம் நினைவுக்கு வந்தது. அங்கு ஒரு கிறிஸ்தவ கன்னியாரை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய சிலர் "பாரத் மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டதாகச் செய்தி வெளியானது.
பிப்ரவரி 11 அன்று தோழர் கண்ணையா குமார் கூறியதை நான் நினைவு கூர்கிறேன்: "இப்படிப்பட்டவர்களே உங்கள் பாரத் மாதாவாக இருந்தால், அவர் எங்களுடைய பாரத் மாதா அல்ல. அதைச் சொல்லுவதில் எங்களுக்கு எந்த வெட்கமும் இல்லை." என் தந்தையையும் குறி வைத்தனர்; என் தந்தை ஊடகங்களிடம் பேச முயன்றபோது, அவரிடம் உரையாடவில்லை; அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். அவரது கடந்த காலத்தை ஆராய்ந்து, ஏதோ ஒரு தொடர்பு இருப்பது போல காட்ட முயன்றனர்.
எப்படியாவது எங்களை சிக்கவைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது. ஜீ நியூஸிலும், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிலும் உள்ள சில பத்திரிகையாளர்கள், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட விரும்பவில்லை. மேலும் அவர்களுடன் பணிபுரியும் சிலர், இவ்வளவு வெறுப்பையும் விஷமத்தையும் எங்கிருந்து பெறுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை. ஜே.என்.யு. மாணவர்கள் மீது இவ்வளவு கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் எவ்வாறு வளர்த்துக் கொண்டார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை.
தேசபக்தி என்றால் என்ன? கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த வளாகத்தில் நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். இந்த காலத்தில் நான் என்னை ஒருபோதும் ஒரு முஸ்லிமாக மட்டுமே அடையாளப்படுத்திக் கொண்டதில்லை. நான் என்னை அப்படிப் பிரதிபலித்ததுமில்லை. ஏனெனில், இன்று இந்த சமூகத்தில் ஒடுக்கப்படுபவர்கள் முஸ்லிம்கள் மட்டுமல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். ஆதிவாசிகள் ஒடுக்கப்படுகிறார்கள்; தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள்; பல்வேறு விளிம்புநிலை சமூகங்கள் ஒடுக்கப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்து வரும் நாம், நம் உடனடி அடையாளங்களைத் தாண்டி, இந்த ஒடுக்குமுறைகளை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் நான் முதன்முறையாக "நான் ஒரு முஸ்லிம்" என்று உணர்ந்தது இந்த பத்து நாட்களில்தான். ஏனெனில், ரோஹித் வேமுலா கூறியதைப் போல, என்னை என் உடனடி அடையாளத்திற்குள் மட்டுமே சுருக்கி விட்டனர். இது மிகவும் அவமானகரமான விஷயம்.
அவர்கள் என்னை "பாகிஸ்தான் முகவர்" என்று அழைக்கிறார்கள். அதனால் நான் இங்கு ஒரு பாகிஸ்தானியக் கவிஞரின் இரண்டு வரிகளை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:
"அரே பாய், ஹிந்துஸ்தான் பி மேரா ஹை, அவுர் பாகிஸ்தான் பி மேரா ஹை,
பர இன் தோனோ முல்கோன் மே அமெரிக்கா கா டேரா ஹை."
அதாவது: "இந்தியாவும் என்னுடையது; பாகிஸ்தானும் என்னுடையது; ஆனால் இந்த இரு நாடுகளிலும் தன் முகாமை அமைத்திருப்பது அமெரிக்காதான்."
அமெரிக்காவின் முகவர்கள் நீங்கள் தான். இந்த நாட்டின் கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக் கொண்டு இருக்கும் அரசு நமக்கு தேசபக்தியைப் போதிக்க முயல்கிறது. கல்வித்துறையிலும் அதே நிலைமைதான்; உலக வர்த்தக அமைப்பின் (WTO) முன் முழுமையாக சரணடைந்துவிட்டனர். அப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு தேசபக்தியின் அர்த்தத்தை கற்பிக்க முயல்கிறார்கள்.
தேசவிரோதிகள் யார்? "உலகின் அனைத்து தேசவிரோதிகளும் ஒன்றிணைவோம்" அவர்களுக்கு தேசபக்தி என்றால் என்ன என்பதே தெரியாது. எனவே, இங்கே நான் உங்களிடம் சொல்ல விரும்புவது இதுதான்: "தேச விரோதிகள்" என்று அழைக்கப்படும் அனைவரிடமும் நான் கூறுகிறேன். உலகின் அனைத்து தேச விரோதிகளும் ஒன்றிணைவோம்!
மக்கள் மீதான எங்கள் அன்புக்கும், எங்கள் போராட்டங்களுக்கும் எல்லைகளோ, எல்லைக் கோடுகளோ கிடையாது. உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடன் நாம் ஒன்றுபடுவோம். எந்த நாட்டின் அரசாக இருந்தாலும், அது அநீதியைச் செய்தால் அதை எதிர்க்க நாம் தயங்க மாட்டோம்.
இத்தகைய அருவருப்பான குற்றச்சாட்டுகளாலும் மிரட்டல்களாலும் அவர்கள் எங்களை அச்சுறுத்த முடியாது, எங்களை மௌனமாக்க முடியாது. "அவர்கள் கோழைகள்" இதை நான் உங்களிடம் சொல்லத் தேவையில்லை. ஆனால் இன்று யாரும் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. இந்த மக்களிடம் பெரும்பான்மை இருக்கலாம், அவர்கள் பல இடங்களில் ஆட்சியில் இருக்கலாம், ஊடகங்கள் அவர்களிடம் இருக்கலாம், அரசின் அதிகார அமைப்புகள், காவல்துறை, மற்றும் பல்வேறு அதிகார கருவிகள் அவர்களிடம் இருக்கலாம். ஆனால், அவர்கள் கோழைகள்.
அவர்கள் எங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள், எங்கள் போராட்டங்களைக் கண்டு பயப்படுகிறார்கள். அதைவிட முக்கியமாக, நாங்கள் சிந்திப்பதைக் கண்டு பயப்படுகிறார்கள். என் நண்பர் அனிர்பான் பட்டாச்சார்யா பிப்ரவரி மாதத்தில் ஊடகங்களிடம் கூறிய ஒரு கருத்து எனக்கு நினைவிருக்கிறது: "இந்த நாட்டில் தேசவிரோதி ஆகுவது மிகவும் எளிது. நீங்கள் சிந்திக்கத் தொடங்கும் நொடியே உங்களுக்கு 'தேச விரோதி' என்ற முத்திரை குத்தப்படும்."
அவர்கள் எங்களைப் பயமுறுத்தலாம் என்று நினைத்தால், அது அவர்களின் மிகப்பெரிய தவறான கணிப்பு. அவர்கள் தவறான பல்கலைக் கழகத்துடன் மோதி இருக்கிறார்கள்.
முன்பும் பல பல்கலைக் கழகங்களுடன் அவர்கள் மோதி இருக்கிறார்கள். திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் (FTII) நடத்திய போராட்டம், ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தில் (HCU) ரோஹித் வேமுலாவும் அவரது நண்பர்களும் நடத்திய போராட்டம், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சந்தீப் பாண்டே தொடர்பான போராட்டம். இவற்றில் அனைத்திலும் நாங்கள் தோள் கொடுத்து நின்றிருக்கிறோம். அந்தப் போராட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருக்கிறோம். எங்கள் பொறுப்பை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால், ஜே.என்.யு. தான் உங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் தெரிகிறது. அதை முற்றிலும் அழித்துவிடலாம் என்று நீங்கள் நினைத்தால், உங்களைப் போன்ற பலர் இதற்கு முன்பும் வந்திருக்கிறார்கள், போயிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவேளை நீங்கள் இந்திரா காந்தியை மறந்திருக்கலாம். அவசரநிலை (EMERGENCY) முடிந்தபின் அவர் ஜே.என்.யுவிற்கான வந்தபோது, மாணவர்கள் அவரை ஏற்க மறுத்தனர். ஒருவேளை நீங்கள் மன்மோகன் சிங்கையும் மறந்திருக்கலாம். நேரு சிலை திறப்பு விழாவிற்கு அவர் வந்த போது, அவரது அரசாங்கம் நாட்டின் வளங்களை தனியார் மயமாக்கியதற்கு எதிராக மாணவர்கள் கருப்புக்கொடி காட்டினர். அதேபோல், ப.சிதம்பரம் இங்கு வந்தபோதும், மாணவர்கள் அவருக்கு வரவேற்பு அளிக்கவில்லை. மாறாக, அவர்கள் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுடனும் புறக்கணிக்கப்பட்ட மக்களுடனும் தான் இருப்பார்கள் என்பதை தெளிவாகக் காட்டினர்.
உங்களின் இந்த அடக்குமுறை முயற்சிகள் எவரையும் அச்சுறுத்த முடியாது. இவை அனைத்தும் வெறும் மன நிலையைச் சோதிக்கும் விளையாட்டுகள். நாம் பயப்படுவோமா என்பதைப் பார்க்க அவர்கள் முயல்கிறார்கள். அந்தச் சவாலை நாம் ஏற்றுக்கொள்வோம். நாம் பயப்பட மாட்டோம். ஒவ்வொரு தளத்திலும் நாம் எதிர்த்து நிற்போம். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், இந்த வளாகத்தின் ஒவ்வொரு மாணவருக்கும் அச்சமின்றி தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை உண்டு.
குரங்கு படை: நண்பர்களே, இவர்கள் கோழைகள். அவர்களுடைய மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) இந்த வளாகத்தின் "குரங்கு படை" என்று நான் கூறுவேன். அவர்களின் அரசியல் நோக்கங்களை முன்னெடுக்க முடியாத இடமெல்லாம் சென்று குழப்பம் ஏற்படுத்தும் பொறுப்பை ஏற்றுள்ளது. எந்த சவாலுக்கும், எந்த விமர்சனத்திற்கும் பதில் அளிக்க முடியாதபோது, அவர்கள் செய்யும் முதல் வேலை ரவுடித்தனத்தையும் குழப்பத்தையும் உருவாக்குவதுதான். மேலும், பல்கலைக் கழக துணைவேந்தர் முதல் பதிவாளர் வரை, காவல்துறை முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் தங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சம்பவத்திலும் ஒரே மாதிரியான கதைதான் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. ஹைதராபாத் மத்தியப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அப்பா ராவை ஜே.என்.யுவின் துணைவேந்தர் ஜகதீஷ் குமாரால் மாற்றுங்கள்; மத்திய அமைச்சர் தத்தாத்ரேயாவை எம்.பி. மகேஷ் கிரியால் மாற்றுங்கள் - கதையின் வடிவம் மாறாது.
ஆனால் இனி இன்னொரு ரோஹித் வேமுலா உருவாக அனுமதிக்க மாட்டோம். எங்களை எங்கள் உடனடி அடையாளங்களுக்குள் மட்டும் சுருக்கிவிட முடியாது. நாங்கள் விண்மீன் தூசிகள் போன்றவர்கள். காற்றில் பரவி, எங்கும் சென்று, மீண்டும் மீண்டும் எதிர்த்து எழுவோம். நாங்கள் யார் என்பதை அறிவோம், இந்த வளாகத்தை அறிவோம், இந்த இடத்தை நேசிக்கிறோம். இந்தச் சுதந்திரமான அறிவுப் பரப்பை நாங்களே உருவாக்கியிருக்கிறோம். இதனை நீங்கள் அழிக்க அனுமதிக்க மாட்டோம். ஒரு அங்குலம் கூட உங்களுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். இந்த வளாகத்தின் ஒவ்வொரு அங்குலத்திலிருந்தும் உங்களை விரட்டியடிப்போம்.
மக்களிடம் செல்ல முடியாத அரசியல் நண்பர்களே: ஏன் ABVP எங்கு சென்றாலும் குழப்பம் உருவாக்குகிறது? ஏனெனில், அவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும் - அவர்களால் மக்களிடம் சென்று ஆதரவைப் பெற முடியாது. கடந்த பத்து நாட்களாக ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்தன. எங்களைப் பற்றிய ஊடக விசாரணைகள் நடந்தன. "தேசபக்தி" என்ற பெயரில் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்ட முயன்றனர். ஆனால், அவர்கள் நடத்தும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் சிலரே பங்கேற்றனர்.
ஒற்றுமை பேரணி: அதே நேரத்தில், பிப்ரவரி 18 (2016) அன்று நடந்த ஒற்றுமைப் பேரணியில் சுமார் 15,000 பேர் ஒன்று கூடியிருந்தனர். ராகுல் காந்தி வளாகத்திற்கு வந்த நாளில், அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் ஜீ நியூஸ் வெளியிட்ட செய்தியில், மாணவர்கள் இரண்டாகப் பிரிந்து விட்டதாகவும், பாதி மாணவர்கள் ராகுல் காந்திக்கு எதிராக இருந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால் உண்மை என்ன? அவருக்கு எதிராக இருந்தவர்கள் பத்து அல்லது பன்னிரண்டு பேரே. ஆதரவாக இருந்தவர்கள் சுமார் மூவாயிரம் பேர். இவ்வளவு எளிதாகவும் வெட்கமின்றியும் அவர்கள் உண்மையைத் திரித்து பொய்களைப் பரப்புகிறார்கள்.
நண்பர்களே, மாணவர் இயக்கங்கள் எப்போதும் நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்துள்ளன; "கருத்து வேறுபாட்டைக் கற்றுக் கொடுக்காத பல்கலைக் கழகம் ஒரு சிறைச்சாலையாக மாறிவிடும்." இன்று நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களையும் சிறைச்சாலைகளாக மாற்ற வேண்டும் என்பதே அவர்களின் திட்டமாக உள்ளது. அந்தத் திட்டத்தை நாம் தோற்கடிப்போம். நாம் ஒன்றுபட்டு இருப்போம். யாரும் எங்களை அச்சுறுத்த அனுமதிக்க மாட்டோம். ஆம், நமக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் அந்த வேறுபாடுகளை விவாதிப்பது எப்படி என்பதை நாங்கள் அறிவோம்.
உதாரணமாக, அசுதோஷ் அல்லது தோழர் அனந்த் தங்கள் மாணவர் அமைப்புக்காக ஏதாவது நிகழ்ச்சி நடத்தினால், அதை உடைக்கவோ, சேதப்படுத்தவோ யாரும் செல்வதில்லை. ஒருவரின் நிகழ்ச்சியை மற்றவர் அழிக்க முயலுவதில்லை. ஏனெனில், மக்களிடம் சென்று தங்கள் கருத்துகளை முன்வைப்பது எப்படி என்பதை நாங்கள் அறிவோம்.
எனவே, இத்தனை தாக்குதல்களுக்கும் மிரட்டல்களுக்கும் மத்தியிலும், நாங்கள் அஞ்ச மாட்டோம். ஆனால், இதை வெறும் பல்கலைக் கழகங்கள் மீதான தாக்குதலாக மட்டும் பார்க்கக் கூடாது. கடந்த பத்து நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் நடந்துள்ளன. ஹோண்டா தொழிலாளர்கள் மீதான தாக்குதல்கள், ஜக்தல்பூர் சட்ட உதவி குழு (Jagdalpur Legal Aid Group) எதிர்கொண்ட அழுத்தங்கள், சோனி சோரி போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகள் - இவை அனைத்தும் ஒரே பெரிய படத்தின் பகுதிகள். இந்தப் போராட்டங்களை ஒன்றோடொன்று இணைக்க வேண்டும். இந்தச் சண்டைகளை ஒன்றாகப் பார்க்க வேண்டும்.
எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் அவர்களுடன் நின்று போராட வேண்டும். ஜே.என்.யு. மாணவர் சங்கத்தின் அந்தப் பாரம்பரியத்தை நாம் உயிரோடு வைத்திருக்க வேண்டும். நன்றி!
இன்குலாப் ஜிந்தாபாத்! புரட்சி நீடூழி வாழ்க!
(தொடரும்)




