பனகல் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வைகோவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் நீதியற்ற செயலைக் கண்டித்து, சென்னை பனகல் மாளிகை முன்பு கழகத்தின் சார்பில் 07.06.2026 அன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும் போது, "வள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!" என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு: அடுக்கி வரினும் அழிவிலான் உற்றஇடுக்கண் இடுக்கட் படும்.என்ற குறள் மொழிக்கு ஏற்ப,கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்ஆற்ற லதுவே படைஎன்ற வான்புகழ் வள்ளுவனின் குறள் நெறிக்கு ஏற்ப, எதற்கும் அஞ்சாமல் நெஞ்சிலே துணிவும், குறிக்கோளில் உறுதியும் கொண்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆளுநரைக் கண்டித்து நடைபெறுகிற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கின்ற தமிழினத்தின் உரிமைக்காகவும், ஈழத்தமிழர்களின் விடியலுக்காகவும், தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கமான மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் - போராளி அன்புத் தம்பி திருமுருகன்காந்தி அவர்களே, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகிகளே, ஒரு கரத்தில் கருங்கொடியையும், மறுகரத்தில் கழகக் கொடியையும் ஏந்திக் கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரண்டிருக்கின்ற என் உயிரை நிகர்த்த கழகத்தின் கண்மணிகளே, பத்திரிக்கையாளர்களே, தொலைக்காட்சி ஊடக நண்பர்களே வணக்கம்! திருக்குறளுக்கு நிகரான நெறிகளை பௌத்த மத கோட்பாடுகளில் கூட காண இயலாது. எந்த மத நூலிலும் காண முடியாது. உலகத்துக்கே வழிகாட்டக் கூடிய ஈடு இணையற்ற தத்துவங்களைச் சொல்வதுதான் திருக்குறள். 1330 அருங் குறட் பாக்களில் எந்த மன்னனின் பெயரும் கிடையாது. எந்த மலைகளின் பெயரும் கிடையாது. எந்த நதிகளின் பெயரும் கிடையாது. எந்த நாட்டின் பெயரும் கிடையாது. எந்த மதத்தின் சாயலும் கிடையாது. சாதி என்ற சொல்லுக்கே இடம் கிடையாது. ஏன் 1330 அருங்குறட்பாக்களில் தமிழ் என்ற சொல்கூட கிடையாது! நாடுகளின் எல்லைகளைக் கடந்து, கண்டங்களின் எல்லைகளைக் கடந்து இந்தப் புவியெங்கும் பரந்து விரிந்திருக்கக்கூடிய பூமியில் வாழுகின்ற மனித குலத்திற்கு வழிகாட்டுகின்ற மறை நூலை 2000 ஆண்டுகளுக்கு முன்பு தந்தவர் செந்நாப்போதார் எனப் புகழப்படும் திருவள்ளுவர் ஆவார். "மாலுங் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்ஞால முழுது நயந்தளந்தான் - வாலறிவின்வள்ளுவருந் தங்குறள்வெண் பாவடியால் வையத்தார்உள்ளுவனெல் லாமளந்தா ரோர்ந்து"என்று புலவன் சொன்னான். புராணத்தில் நம்பிக்கை உடையவர்களுக்குச் சொல்வேன். திருமாலின் அவதாரங்களைச் சொல்லும் போது, அவன் வாமன வடிவம் ஏந்தினானாம், விண்ணை அளந்தானாம், மண்ணை அளந்தானாம், வலியின் தலையில் தன்காலை வைத்தானாம்! இது கற்பனையான ஒரு புராணம். அந்தப் புராணத்தை முன்னிறுத்தி எழுதிய பாடலில் விண்ணையும், மண்ணையும் அளந்ததாக வாமனனைப் பற்றிச் சொல்லலப்படுகிறது. இந்த உலகில் உள்ள கோடானு கோடி மக்களின் இதயங்களில் ஓடுகின்ற எண்ணங்களை மின்னல் வேகத்தில் இந்தக் கணத்திலேயே வாஷிங்டனைப் பற்றி நினைக்கலாம். ஆஸ்திரேலியாவைப் பற்றி நினைக்கலாம். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பற்றி நினைக்கலாம். வித விதமான கற்பனை எண்ணங்கள் கோடிக்கணக்கில் மின்னல் வேகத்தில் உள்ளங்களில் தோன்றலாம். அத்தனை உள்ளங்களையும் நயந்து அளந்தவர் என்ற பாராட்டுக்குரிய திருவள்ளுவர் உருவத்தை வேணுகோபால் சர்மா அருமையாக வரைந்திருந்தார். அதைப் பார்ப்பதற்கு ஒரு நாள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வந்தார். அந்த உருவத்தின் மார்பில் மெல்லிய பூணூல் இருப்பதைப் பார்த்தார். "சர்மா, இந்தப் பூணூல் இதில் இருக்கக் கூடாது. அது திருவள்ளுவர் கருத்துக்கே விரோதமானது" என்றவுடன், வேணுகோபால் சர்மா அதை அழிந்துவிட்டார். ஒன்பது ஆண்டுகள் பாடுபட்டு வேணுகோபால் சர்மா வரைந்ததுதான் இன்றைக்கு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்ற திருவள்ளுவர் படமாகும். அந்தத் திருவள்ளுவர் படத்திற்கு காவி ஆடை அணிவிக்கத் துணிவதற்கு Mr. Vishwanath Arlekar how dare you to touch the statue with saffron? விஸ்வநாத் அர்லேக்கர் அவர்களே, திருவள்ளுவர் சிலை மீது காவி துணியைப் போர்த்துவதற்கு உங்களுக்கு என்ன திமிர் இருக்க வேண்டும்? என்ன நெஞ்சழுத்தம் இருக்க வேண்டும். நீங்கள் அமர்ந்திருக்கின்ற இடம் ஆளுநர் மாளிகை! ஆளுநர் பதவியையே ஒழிக்கப்பட வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங் களவையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சிங்கம் பூபேஷ் குப்தா அவர்கள் கொண்டு வந்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறபோது, ஆளுநரின் சம்பளத்தைக் குறைப்பதோ? தங்கியிருக்கக் கூடிய அரண்மணை போன்ற இடத்தை மாற்றுவதோ நம் கொள்கை அல்ல. ஆளுநர் பதவியையே ஒழிக்க வேண்டும். we should abolish the governiship! களைத்துப் போன அரசியல்வாதிகளுக்கும், பதவிகள் பெற முடியாத அரசியல்வாதிகளுக்கும் ஓய்வெடுக்கும் மடமாக இந்த ஆளுநர் மாளிகைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று நாட்டின் விடுதலைக்குப் போராடிய கிருபளானி கூறினார். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கபளீகரம் செய்துகொண்டிருக்கின்ற ராஜ பவனங்களிலிருந்து ஆளுநர்கள் வெளியேற்றப்பட்டு, அவைகள் எல்லாம் மருத்துவமனைகள் ஆக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்கள் வசிக்கின்ற குடியிருப்புகள் ஆக்கப்பட வேண்டும் என்று அண்ணல் காந்தியடிகள் சொன்னார். இந்த விஸ்வநாத் அர்லேக்கர் ஆணவம் குறையாமல், காவித் துணியை திருவள்ளுவர் படத்துக்கு அணிவித்துவிட்டு, திருவள்ளுவர் ஒரு சனாதனி என்று வாய்க் கொழுப்போடு பேசுவதை தொலைக்காட்சிகளில் நான் பார்த்தேன். Mr. Vishwanath Arlekar we condemn your attitude with the all the force under our command we condemn you, vehemently condemn the temporary Governor of Tamil Nadu தமிழ்நாட்டின் தற்காலிக ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கர் எவ்வளவு மமதை இருந்தால் செந்தமிழ் நாட்டின் தலைநகரில் வந்து ஆளுநர் மாளிகைக்குள் இருந்து கொண்டு, திருவள்ளுவருக்கு இழுக்கு செய்வார்? ஆளுநரே, உங்களைப் பாதுகாப்பதற்கு காவல்துறை பட்டாளம் இருக்கிறது. உங்களைப் பாதுகாப்பதற்கு மத்திய நரேந்திர மோடி அரசு இருக்கிறது. அந்த நரேந்திர மோடி அரசின் எடுபிடி தான் இந்த விஸ்வநாத் அர்லேக்கர்! இதுவரை எந்த ஆளுநரும் செய்யத் துணியாத செயலை ஆணவம் கொண்டவராக, அகந்தை கொண்டவராக இந்த அக்கிரமத்தில் ஈடுபட்டதைப் பார்த்து எங்கள் இரத்தம் கொதிக்கிறது. திருவள்ளுவர் இந்த உலகில் இருக்கின்ற கோடானு கோடி மக்களுக்கும் பொதுவானவர். குமரி முனையில் முக்கடல் சந்திப்பில் திருவள்ளுவருக்கு விண் முட்ட சிலை எழுப்பினார் டாக்டர் கலைஞர். ஒரு கவிஞனுக்கு இப்படி ஒரு சிலை உலகில் எங்கும் கிடையாது. வள்ளுவர் கோட்டம் அமைத்தார். குறளோவியம் தீட்டினார். திருவள்ளுவருக்கு நிகரான கருத்துக்களைத் தந்தவர் எவரும் கிடையாது. சாதி, மதம், மொழி, நாட்டின் எல்லைகள் இவை எல்லாவற்றையும் கடந்து மனிதகுலத்திற்கு வழிகாட்டக் கூடிய நெறிகளையே தன் குறட்பாக்களில் வகுத்துத் தந்திருக்கிறார் திருவள்ளுவர். நான் கேட்கிறேன். மராட்டியத்தில் இருக்கக்கூடிய தலை சிறந்த எழுத்தாளர் காண்டேகரை அங்கே அவமதிக்க முடியுமா? மராட்டியர்கள் உடைத்து சுக்கு நூறாக்கி விடுவார்கள். தமிழ்நாட்டில் மான உணர்ச்சி மண்டியிட்டு விடவில்லை. மடிந்து போய் விடவில்லை. அந்த மான உணர்ச்சியின் அடையாளத்திற்குப் பெயர்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். அதனால்தான் இந்தக் கண்டனத்தை நாங்கள் தெரிவிக்கிறோம். Get out from Raj Bhavan Governer Arlekar! Get out from Raj Bhavan Raj Bhavan of Tamil Nadu! என்று நாங்கள் இங்கே முழக்கமிடுகிறோம். திருவள்ளுவர் ஒரு சனாதனி என்று ஆளுநர் பேசுகிறார். அதற்கு வக்காலத்து வாங்குகிற வகையில் சிலர் விளக்கம் தந்து கொண்டிருக்கிறார்கள். ஜாதி, மத, இன, மொழி, நாடு எல்லைகளைக் கடந்து இந்த உலகுவாழ் மக்களுக்கு அனைத்துக் கருத்துக்களையும் பல்வேறு கோணத்தில் ஆய்ந்து தந்திருக்கக் கூடிய ஞானப் பெருங்கடல் திருக்குறள்! ஆகாயத்தையும் விஞ்சிய அறிவாற்றல், ஞானத்தால் 1330 திருக்குறட்பாக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வழங்க வைத்தது. வள்ளுவருக்கு நாங்கள் சென்று கருப்புத் துணியை அணிவிக்க மாட்டோமே! கருஞ்சட்டைப் படை திரள்கிறது பார்; ஈட்டியின் முனைகள் வருகுது பார் என்று கருஞ்சட்டைப் படை, கரிபால்டியின் படையைப் போல் எங்கள் படை புறப்படுகிறது பார் என்று நாங்கள் திரண்டிருக்கிறோம். திருவள்ளுவருடைய பெருமைக்கு குண்டுமணி அளவு குறை கூட ஏற்படுத்த எவரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்! ஆனால், அர்லேக்கர் திட்டமிட்டே இதைச் செய்திருக்கிறார். திருவள்ளுவர் படத்தை காவிமயம் ஆக்கியதன் மூலம் அவரது நச்சுக் கருத்துக்களை, சனாதன கருத்துக்களை, நாகப் பாம்பின் விஷத்தைப் போன்ற கருத்துக்களை, கருநாகங்களின் விஷம் கொண்ட கருத்துக்களை இந்த தமிழ் பூமியில் ஆளுநர் பரப்பியுள்ளார். அறிவாசன் பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் எண்ணற்ற அறிஞர்களும் கட்டிக் காத்து எழுப்பி இருக்கக்கூடிய தமிழ்ப் பண்பாட்டை, தமிழ் நெறியை கொச்சைப்படுத்துவதைப் போல திட்டமிட்டு காவி துணியை அணிவித்த கரங்களுக்கு இயற்கைத் தாயே! நீ தண்டனை கொடு! அந்தக் கைகளுக்கு நீ தண்டனை கொடு! நான் வன்முறையாளன் அல்ல, இல்லாவிடில் வேறு விதமாக பேசத் தெரியும். நான் ஒரு சாதாரண கிராமத்திலிருந்து வந்தவன். சிறு வயதிலேயே அரிவாள், வேல் கம்புகளைப் பார்த்துவிட்டு வந்தவன். பெரியார் சிலையை உடைப்போம் என்று ஒருவன் சொன்னான். நீ அப்படி உடைப்பதானால் தேதி குறிப்பிடு! நாள் குறிப்பிடு! இடத்தைக் குறிப்பிடு! இந்த இடத்தில் இருக்கக்கூடிய பெரியார் சிலையை இத்தனை மணிக்கு நான் உடைக்க வருகிறேன் என்று சொல்! நாங்கள் வருகிறோம். உடைக்க முனைகின்ற கரத்தை வெட்டி எறிவோம் என்று பேசியவன் நான்! எப்பக்கம் வந்து புகுந்துவிடும் இந்திஎத்தனை பட்டாளம் கூட்டி வரும்?அற்பமென்போம் அந்த இந்திதனை -அதன்ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்.கன்னங்கிழிபட நேரும் வந்தகட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்!என இந்திய நாடாளுமன்றத்திலேயே இந்தி வெறியர்களுக்கு மத்தியில் இதைத் தமிழில் பேசி, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொன்னவன் நான்! வெட்டிப் புதைப்போம் என்ற சொல்லை நாடாளுமன்றத்தில் பயன்படுத்தியவன் நான்! அரசியலுக்காக அல்ல, கட்சி பிரச்சினைகளுக்காக அல்ல, நம்முடைய தமிழ்க் குலத்தின் பெருமையை, ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழ் இலக்கியம் கட்டிக் காத்த தொல்காப்பியமும், அகத்தியமும், எண்ணற்ற நூல்களும் கட்டிக் காத்து வந்த தமிழ்ப் பண்பாட்டை எள்ளி நகையாடுகின்ற வகையில் ஏகடியம் செய்கின்ற வகையில் ஆணவமும், மமதையும், திமிரும் கொண்ட Mr. Vishwanath Arlekar திருவள்ளுவர் படத்தை அவமதித்துள்ளார். அதற்கு மன்னிப்பே கிடையாது! ஆளுநரின் செயலுக்கு மன்னிப்பு கிடையாது. இதை ஏற்க முடியாது! இந்தக் கொடுஞ் செயலைச் செய்த விஸ்வநாத் அர்லேக்கர் ராஜ்பவனத்தில் இருக்கலாமா? சொல்லுங்கள் தோழர்களே. நீடிக்கலாமா? (நீடிக்கக் கூடாது; நீடிக்கக் கூடாது என கூட்டத்தினர் முழக்கம்) அவர் தூக்கி எறியப்பட வேண்டும். மத்திய அரசே நீ தமிழ்நாட்டோடு விளையாடாதே! நெருப்போடு விளையாடாதே! மேனியை நெருப்புக்குத் தந்த வீரர்களின் கூட்டம் எங்கள் கூட்டம். மான உணர்ச்சிக்காக, தமிழ் மொழியின் உரிமைக்காக சின்னச்சாமியும், சிவலிங்கமும், அரங்கநாதனும், ஆசிரியர் வீரப்பனும், சத்தியமங்கலம் முத்துவும், கீரனூர் முத்துவும், மயிலாடுதுறை சாரங்கபாணியும், பீளமேடு தண்டபாணியும் பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்து மேனியை கருக்கிச் சாம்பலாக்கிக் கொண்ட களம்தான் இந்தத் தமிழ்நாடு. ஈழத்தமிழர்களுக்குக் கேடு வந்தபோது, மேனி முழுக்க பெட்ரோலை ஊற்றி நெருப்பு வைத்துக் கொண்டு விதியே விதியே என்செய நினைத்தாயோ என் தமிழச் சாதியை! என்று சாஸ்திரி பவனுக்குள் நுழைந்து நெருப்பு வைத்துக் கொண்டு கருகிச் சாம்பலான தீரன்தான் எங்கள் முத்துக்குமார். அப்படி 19 பேர் தங்களை அழித்துக் கொண்டார்கள். அவர்கள் மேனியை பற்றி எரித்த நெருப்பு அன்றைக்கு அணைந்து போயிருக்கலாம். ஆனால் எங்களைப் போன்றவர்களின் நெஞ்சில் அந்த நெருப்பு அணையவில்லை. அது அணையாது. தமிழ் இனத்துக்கு எதிராகவும், தமிழ் மொழிக்கு எதிராகவும், செந்தமிழ் நாட்டின் தன்மானத்திற்கு எதிராகவும் இந்த அக்கிரமச் செயலைச் செய்த விஸ்வநாத் அர்லேக்கரைக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் மான உணர்வு கொண்ட பல்வேறு கட்சிகளில், பல்வேறு இயக்கங்களில் இருக்கக்கூடிய என் உயிருக்கு உயிரான சகோதரர்களே, கட்சிகளின் அணுகுமுறையில் நாம் வேறுபடலாம். மக்களைச் சந்திப்பதில் நாம் வேறுபடலாம். தேர்தலைச் சந்திப்பதில் நாம் வேறுபடலாம். ஆனால் மான உணர்வு கொண்ட தலைவர்கள் பல கட்சிகளிலும் இருக்கிறார்கள். அந்த சகோதரர்களை நான் அறைகூவி அழைக்கிறேன். நீங்கள் தலைமை தாங்கினாலும் நான் உங்கள் பின்னால் வர தயாராக இருக்கிறேன். நாம் இதை அனுமதிக்கலாமா? இவ்வளவு கொடுஞ்செயலை அனுமதிக்கலாமா? காலக் கடைத்தீயென பொங்கி எழுந்து தமிழகம் கண்டிக்க முன்வந்தது என்ற சரித்திரத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டாமா? தன்மானத்தை, சுயமரியாதையை பெரிதாக போற்றுகிறவர்கள் பல கட்சிகளில் இருக்கிறார்கள். பல அமைப்புகளில் இருக்கிறார்கள். ஆளுநர் அர்லேக்கர் செய்தது நமக்கு விடுக்கப்பட்டிருக்கக்கூடிய அறைகூவல். அவர் உரசிப் பார்க்கிறார்; மெல்ல மெல்ல உரசிப் பார்க்கிறார். இது சனாதனிகளின் இடம்; இங்கே சமஸ்கிருதம்தான் இருக்கும். இந்திதான் இருக்கும். இங்கே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தைக் கொண்டு வருவோம் என்ற முயற்சி நடக்கிறது. காந்தியாரைக் கொன்ற கொடியவன் விநாயக நாதுராம் கோட்சேவின் கூட்டமே! வடக்கே கோட்சேவுக்கு சிலை அமைக்கலாம். கோட்சே சிலைக்கு நீங்கள் மாலை போடலாம். ஆனால் "காவிரி தென்பெண்ணை பாலாறு தமிழ் கண்டதோர் வையை பொருநைநதி" என நதிகள் சீராட்டி தாலாட்டுகின்ற தமிழினம், எவருக்கும் மண்டியிடாத தமிழினம், இங்கே அது நடக்காது. தமிழ்நாட்டுக்குள் எந்த வடநாட்டு சக்கரவர்த்தியும் நுழைந்தது இல்லை. சந்திரகுப்த மௌரியர் படைகள் இந்தப் பகுதியை எட்டிப் பார்த்தது இல்லை. குப்தர்கள் காலம் பொற்காலம் என்றார்கள். குப்தர்கள் எங்கள் தமிழ் மண்ணுக்குள் காலெடுத்து வைத்தது இல்லை. அக்பர் பாதுஷா காலத்திலும், ஔரங்கசீப் காலத்திலும் எவரும் ஊடுருவ தமிழகம் அனுமதித்தது இல்லை. ஆனால் எங்கள் படைகள் விந்தியத்தைத் தாண்டி கங்கையைக் கடந்திருக்கின்றன. இமயத்தின் முடிதனில் கொடியை உயர்த்தியவர்கள் என் மூதாதையர்கள். அலை கடலில் இருக்கக்கூடிய பல நாடுகளை வென்று எங்கள் சோழ மன்னனால் உயர்த்தப்பட்ட கொடி புலிக் கொடி. அத்தனை நாடுகளையும் வென்றவர்கள் என்ற வரலாறு எங்களுக்கே சொந்தம். இதை நான் இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கிறேன். உலகத்திற்குப் பொதுவான திருக்குறளைத் தந்தது தமிழ்நாடு, அதனை இழிவுபடுத்தும் கொடும் செயலில் ஈடுபட்ட விஸ்வநாத் அர்லேக்கர் மன்னிப்புக் கேட்க வேண்டும். you should apologise to the people of Tamil Nadu! திருவள்ளுவர் படத்தில் நாம் காவி துணியைப் போட்டால் யார் கேட்பார் என்ற திமிர்தானே உங்களுக்கு? கேட்பதற்கு என்னைவிட வேகமான இளைஞர்கள் வருவார்கள். என்னைவிட வேகமான இளைஞர்கள் போர்க்கோலம் பூணுவார்கள். அவர்களை ஆயத்தப்படுத்த அடியேனால் முடியும், அவர்களின் நாடி நரம்புகளில் ஓடுகின்ற குருதியின் ஓட்டத்தில் என்னால் மின்னலைச் செலுத்த முடியும். ஆவேசம் கொள்ளச் செய்ய முடியும். நான் அதைச் செய்வேன். கல்லூரிகளில் படிக்கின்ற மாணவர்களிடம் உணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இளைஞர் கூட்டத்திடம் ஏற்படுத்த வேண்டும். நீ யார்? உன் பாட்டன் யார்? உன் முப்பாட்டனுக்கு முப்பாட்டன் யார்? உன் மூதாதையர் யார்? அவர்கள் காலத்தில் ஓங்கிய நாகரிகம், கலையில், நாகரிகத்தில், பண்பாட்டில் எல்லாவற்றிலும் சிறந்தவர்கள். உலகில் எங்கும் படைக்கப்படாத இலக்கியங்களை, கிரேக்கர்கள் தர முடியாததை, ரோமானியர்கள் தர முடியாததை, எகிப்தியர்கள் தர முடியாததை, டைகிரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையே இருந்த சுமேரியர்கள் தர முடியாததை, சீனர்கள் தர முடியாததை தந்தவர்கள் தமிழர்கள். அதன் அடையாளம்தான் திருக்குறள். அந்தத் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் படத்துக்கு காவித் துணியைப் போட்டு அவமதித்ததை சாதாரணம் என்று கருதாதே! உன் உச்சந்தலையில் அடித்திருக்கின்றார் அர்லேக்கர் நம் தன்மானத்திற்குச் சவால் விட்டு இதைச் செய்திருக்கின்றார். ஆளுநர் அவர்களே, படை பரிவாரம், பட்டாளம், மத்திய அரசு பாதுகாப்பு, மாநில காவல்துறை பாதுகாப்பு எல்லாம் இருப்பதால் ஆளுநர் மாளிகைக்குள் இருந்து ஆட்டம் போடுகிறீர்களா? ஆளுநர் பதவியே ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு உரியவர்கள் நாங்கள் ஆளுநர்கள் சட்டசபையை ஆட்டிப் படைக்கப் பார்க்கிறார்கள். வந்தே மாதரத்தைக் கொண்டு வந்து திணிக்க அரும்பாடு படுகிறார்கள். இவைகளை எல்லாம் ஒருக்காலும் ஏற்க மாட்டோம். எங்களைப் பொறுத்தமட்டில், நாங்கள் தேர்தலுக்காக மட்டுமே இருக்கின்ற கட்சி அல்ல, பதவிகளுக்காக ஏங்கித் திரிகின்ற கட்சி அல்ல. இந்த மண்ணின் மானத்தை, தமிழனின் உரிமையை தமிழர்களின் சுயமரியாதையை, தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை காக்க வேண்டும் என்ற வீர உணர்ச்சி கொண்டவர்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய உணர்ச்சிமிக்க தன்மானத் தமிழர்கள். அவர்கள் சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம். மீண்டும் கண்டிக்கின்றோம். we condemn the action the attitude of the Governer Vishwanth Arlekar in similiating and insulting the pride of Thiruvalluvar திருவள்ளுவரின் பெருமையை! மாண்பை சீர்குலைக்கும் விதத்தில் செயல்பட்ட கைகளுக்கு இயற்கைத் தாயே நீ தண்டனை கொடு! அந்தக் கைகளுக்கு என்ன நேர வேண்டும் என்று நீ தண்டனை கொடு! வழக்குக்குப் பயப்படுகிறவன் வைகோ அல்ல. வழக்குகளை சந்திப்பதையே வாழ்க்கையாக அமைத்துக் கொண்டவன் வைகோ. இந்த உயிர் இருக்கும்வரை, என் உடம்பில் ஜீவன் இருக்கும் வரை நான் பிறந்த பொன்னாடாகிய தமிழ்நாட்டின் தன்மானத்தை, சுயமரியாதையை, தமிழரின் தனித்தன்மையை, உலகத்துக்கு எல்லாம் அறிவித்திருக்கக்கூடிய இலக்கியக் கோட்பாடுகளை, அதன் ஒட்டுமொத்த அடையாளமாக இருக்கக்கூடிய திருக்குறளை, அதைத் தந்த திருவள்ளுவரை நாங்கள் நெஞ்சில் வைத்துப் பூஜிக்கிறோம்; மகுடமாக வைத்து எங்கள் தலையில் சுமக்கிறோம். கழகத் தோழர்கள் மிகச் சிறப்பாக குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சியை அமைத்ததற்காக அவர்களது கரங்களை எடுத்து என் கண்களில் ஒத்திக் கொள்கிறேன். நன்றி செலுத்துகிறேன். எங்களுக்கு அனுமதி அளித்த காவல்துறைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் கலவரம் செய்கிறவர்கள் அல்ல, கல் வீச்சில் ஈடுபடுகிறவர்கள் அல்ல. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுகிற ஒரு கூட்டம் இது. இந்தக் கூட்டம் வலுவாக இருக்க வேண்டும்! தேர்தலைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் தாய்மார்களே, பெரியோர்களே உங்கள் வருங்கால சந்ததிகளையும் காக்கின்ற கடமையில் ஈடுபட்டிருக்கக்கூடிய எங்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். ஆதவன் மலையடிவாரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்ற இந்த மாலை வேளையில், பகலும், இரவும் சந்தித்துக் கொள்கிற இந்த மாலை வேளையில் ஆயிரக் கணக்கில் கட்டுப்பாடாகத் திரண்டு, கைகளில் கருங்கொடியும், கழகக் கொடியும் ஏந்தி, இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட என் தம்பிமார்கள், என் சகோதரர்கள் அனைவருக்கும் இன்னும் அதிகமான போராட்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட களங்களை நாம் காண்போம். அப்படிப்பட்ட களங்களில் போய் நிற்போம். ஆகையால்தான் இந்த ஒரு வாரத்திற்குள் மூன்று போராட்டங்களை எங்களால் நடத்த முடிந்திருக்கிறது. எங்கள் மாவட்டச் செயலாளர்கள் ஏறத்தாழ 25 பேர் இங்கே வந்து நிற்கிறார்கள். நேற்றைக்கு முன்தினம் வாசுதேவநல்லூரில் நதி உரிமைக்காக 12 மணி நேரம் நாங்கள் நடத்திய உண்ணாவிரதப் போரில் அப்படியே கற்சிலை போல் அமர்ந்திருந்தார்கள். எதிரே வடை, முறுக்கு, திண்பண்டங்கள் கொண்ட கடைகள் இருந்தன. பழக் குலைகள் தொங்கிய வண்ணம் இருக்கின்றன. உண்ணாவிரதம் இருந்த 1200 பேரில் ஒருவர்கூட சாலையைத் தாண்டி எட்டிப் பார்க்கவில்லை என்றபோது நான் மிகவும் பெருமைப்பட்டேன், இப்படிப்பட்ட சுய கௌரவமும், சுய மரியாதையும், தன்மான உணர்ச்சியும் கொண்ட தீரர்களை, தோழர்களை, சகோதரிகளை நான் பெற்றிருக்கிறேன். தமிழ்நாட்டின் உரிமை காக்கும் பட்டாளமாக, அக்கிரமத்தை எதிர்த்து வேரோடு சாய்க்கின்ற பட்டாளமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் திகழும். கொடுஞ்செயல் செய்த, அக்கிரமச் செயல் செய்த, சுயமை செயல் செய்த விஸ்வநாத் அர்லேக்கர் இந்த ராஜ் பவனில் இருக்கத் தகுதி அற்றவர். he should be removed, he should be expelled எங்கள் கோரிக்கை. நீங்கள் அலட்சியப்படுத்தலாம். ஆனால் இந்த உணர்வை தமிழ் மக்கள் அனைவரது உள்ளத்திலும் பதிய வைப்போம். உலகத்திற்கே வழிகாட்டிய பொதுமறை தந்த திருவள்ளுவர் படத்துக்கு காவி வண்ணம் பூசி, காவித் துண்டைப் போட என்ன திமிர்? என்ன அகம்பாவம்? யார் என்ன செய்ய முடியும்? நமக்கு எல்லா பாதுகாப்பும் இருக்கிறது. தனி மனிதனாக இந்தச் சாலையில் ஆளுநரால் வர முடியுமா? நீங்கள் சரியான துணிச்சல்காரர் என்றால் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் ராஜ் பவனை விட்டு தனியாக வெளியே வந்து பாருங்கள் பார்ப்போம். உங்களால் வர முடியுமா? முடியாது. அப்படி என்றால் வாலை சுருட்டி மடக்கிக் கொண்டு இருக்கின்ற இடம் தெரியாமல் இருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தக் கண்டனம் எழுவதோடு மட்டுமல்ல, இந்த கருஞ்சட்டைப் படை ஆளுநர் மாளிகைக்கே வரும். ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும். எந்தத் துப்பாக்கிகளும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. இராணுவத்தின் பீரங்கிகளையும், இராணுவத்தின் துப்பாக்கிகளின் சல சலப்பையும் கண்டு வந்தவன் இந்த வைகோ என்பதை நான் நினைவு படுத்துகிறேன். Getout of Rajbhavan, O Temporary Governer of Tamil Nadu Vishwanath Arlekar getout of Rajbhavan apologise for your insult the statue of the Thiruvalluvar, we condemn you, we condemn from bottom of the our heart, we condemn you! ஆதரவாக சில பேர் எழுதலாம், பேசலாம். இது மான உணர்ச்சி கொண்ட வீரர்களும், தீரர்களும் உலவிய பூமி. அந்த உணர்வு என்றைக்கும் மங்கிப் போகாது என்பதைக் காட்டுவதற்குத்தான் படை திரண்டு வந்திருக்கிறோம். இது முதல் எச்சரிக்கை. இனி இந்தக் காரியங்களைத் தொடர்ந்து செய்தால் இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்களைத் திரட்டிக் கொண்டு நாங்கள் ராஜ்பவனை முற்றுகையிடுவோம். உள்ளே நுழைவதற்கு முயற்சிப்போம். துப்பாக்கிகளின் சல சலப்புக்கு அஞ்சாமலும் நுழைய எங்களால் நுழையவும் முடியும் என்பதையும் இங்கே தெரிவித்துக் கொள்கிறேன். ஒழியட்டும்; ஒழியட்டும்! தற்காலிக ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கரின் அக்கிரமச் செயல் ஒழியட்டும்! இப்பொழுது இந்த கருஞ்சட்டைப் படை கொடிகளை உயர்த்தியவாறு ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்படும். நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம், நாங்கள் புறப்பட்டுச் செல்வது ஆளுநருக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக! இது கேள்வி கேட்பார் இல்லாத மாநிலம் என்று நினைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஆளுநர் விஸ்வநாத் அர்லேக்கருக்கு எச்சரிக்கை செய்வதற்காக இந்தப் போராட்டம். இனிமேல் இப்படிப்பட்ட செயலில் நீங்கள் ஈடுபடக் கூடாது என்று எச்சரிக்கை செய்வதற்காகவே நாங்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி இப்பொழுது அணிவகுக்கிறோம்; அணிவகுத்துச் செல்வோம். வாழ்க தமிழ்! வெல்க திராவிடம்! வாழ்க தந்தை பெரியாரின் புகழ்! வாழ்க பேரறிஞர் அண்ணாவின் புகழ்! கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும், பொதுமக்களைக் கொன்றவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும், போராடியவர்கள் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.
மேலும் படிக்க »




