அரசு, எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கத் தயார் நிலையில் இருக்கும். அத்தகைய சூழலில், நீதித்துறையே அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், குடிமைப் போராட்டங்களின்போது தவிர்க்க முடியாத சமூகக் கலக்கங்களையும் “பயங்கரவாதம்” என்ற வரையறைக்குள் கொண்டு வந்து, உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாமின் சிறைவாசத்தை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இது நீதியின் அடிப்படை உணர்வையே அவமதிப்பதாகும். எனவே, பிணை மறுப்பு உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட வேண்டும்.
எப்படி தொடங்கியது? உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் உள்ளிட்ட மாணவர்களை தேச விரோதிகளாக பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பல் சித்தரித்து சிறையில் போட்டு தைப்பதற்கான பின்னணி என்ன? அந்த நிகழ்வுகளைத் திரும்பிப் பார்த்தால்தான் உண்மைகள் புலப்படும்.
2001 ஆம் ஆண்டு 13 டிசம்பர் அன்று இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. ஐந்து ’தீவிரவாதிகள்’, ஆறு டெல்லி காவல்துறையினர் உட்பட 14 பேர் கொல்லப்பட்ட அந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்டு எஸ்.ஏ.ஆர் கிலானி, அப்சல் குரு அவரது உறவினர் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின் கிலானி மற்றும் அப்சல் குருவின் மனைவி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
அப்சல் குருவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் “தேசத்தின் மனச்சாட்சியை” சாந்தப்படுத்த 2013 பிப்ரவரி 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார்.
அப்சல் தூக்கிலிடப்பட்டதை ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் கண்டித்த நிலையில் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சியான பி.டி.பி-யும் கண்டித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அப்சல் தூக்கிலிடப்பட்ட நாளன்று அது தொடர்பான கண்டன நிகழ்ச்சிகளை டெல்லி ஜே.என்.யு மாணவர்கள் மூன்று ஆண்டுகளாக நடத்தி வந்தனர்.
அந்த அடிப்படையில் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதியன்று ”தபால் நிலையம் இல்லாத நாடு” (A Country Without Post Office) என்கிற நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகியிருந்தது.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்கள் மாவோயிஸ்டு கொள்கையை ஆதரிக்கும் மாணவர் அமைப்பான ஜனநாயக மாணவர் சங்கத்திலிருந்து விலகிய தனி நபர்கள். (இந்த மாணவர் சங்கம் மாவோயிசம் கொள்கையை ஆதரிக்கிறது என்றாலும் மாவோயிஸ்டு கட்சியோடு தொடர்புடையது அல்ல). நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் உமர் காலித்தும் ஒருவர்.
பல்கலைக்கழகத்தின் முறையான அனுமதியோடு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், தொடங்குவதற்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன் ஆர்.எஸ்.எஸ் சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து அனுமதியை ரத்து செய்ய வைக்கிறது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்ற மாணவர் சங்கத்தினருக்குத் தகவல் கொடுத்து நிகழ்ச்சியைத் திட்டமிட்டபடி நடத்த உதவி கோருகின்றனர். பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவரான கண்ணையாவும் மற்ற நிர்வாகிகளும் அச்சமயத்தில் தலையிட்டு பல்கலைக்கழக நிர்வாகம் விதித்த சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு (மைக் இல்லாமல்) நிகழ்ச்சியை நடத்த அனுமதி பெற்றுத் தருகின்றனர்.
குண்டர்கள் நுழைவு நிகழ்ச்சியை எப்படியும் தடுத்தே தீருவது அல்லது அதில் தலையிட்டு பிரச்சினை செய்வது என்கிற திட்டத்தோடு வெளியிலிருந்தும் குண்டர்களையும் ரவுடிகளையும் அழைத்து வந்திருந்த ஏ.பி.வி.பி, நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு எதிரே கும்பலாக நின்று கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தன.
அவர்களைப் புறக்கணித்துவிட்டு நிகழ்ச்சி தொடங்கிய போது முஸ்லிம்களையும், மாணவர்களையும் சீண்டும் விதமாக ஏ.பி.வி.பி அமைப்பினர் முழக்கங்களை எழுப்புகின்றனர். அப்போது அந்நிகழ்வுக்கு வெளியிலிருந்து வந்திருந்த காஷ்மீர் மாணவர்கள் சிலர் எதிர் முழக்கங்களை எழுப்புகின்றனர்.
கூட்டத்தினுள் இருப்பவர்கள் யார் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றே அவதானிக்க முடியாத குழப்பமாக இருக்கிறது அந்தச் சூழல்.
அந்த நிலையில் காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்படுகிறது. இந்த முழக்கங்களை யார் எழுப்பியது என்பது தெளிவாகத் தெரியாத அதே நேரம், பாகிஸ்தான் வாழ்க என்பதும் ஏ.பி.வி.பி தொண்டர்கள் தரப்பிலிருந்து எழுப்பப்பட்டதாக இந்த நிகழ்வின் காணொளி மூலம் அறிய முடிகிறது.
நிகழ்ச்சியைத் தடுப்பதற்கு வெளியிலிருந்து குண்டர்களை மட்டுமின்றி தமக்குச் சாதகமான ஊடகங்களையும் அழைத்து வந்துள்ளனர் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
அதில் குறிப்பாக ஜீ டி.வி தொலைக்காட்சி நிகழ்வுகளை நெருக்கத்திலிருந்து படம் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து படம் பிடித்த வீடியோ காட்சிகளை வெட்டி ஒட்டி அதற்குத் திகிலான பின்னணி இசையைக் கோர்த்து இட்டுக்கட்டி வெறிக்கூத்தாடியது ஜீ தொலைக்காட்சி.
ஜே.என்.யு வளாகமே மொத்தமும் பாகிஸ்தானாகிவிட்டதைப் போலவும் அதை உடனடியாக மீட்க வேண்டும் எனவும் போலியான தேசிய வெறியைத் தூண்டியது.
மாலை ஏழு மணி அளவில் ஜே.என்.யு வளாகத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சபர்மதி தாபாவிற்கு அருகில் துவங்கியா மோதல் பின்னர் கங்கா தாபாவிற்கு அருகில் இரு பிரிவினரும் மாற்றி மாற்றி முழக்கமிட்டு கலைந்து செல்வது வரை தொடர்ந்துள்ளது. இதற்கிடையே 7:30 மணி அளவில் காவல் துறைக்குத் தகவல் கிடைத்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
ஜே.என்.யு வளாகத்திற்குள் காவல் துறையினர் வந்த பின்னரும் மாற்றி மாற்றி முழக்கங்கள் எழுப்புவது தொடர்ந்துள்ளது. மாணவர்கள் கலைந்து சென்றபின் காவல் துறையினரும் வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதில் கவனிக்க வேண்டியது - சம்பவ இடத்தில் காவல்துறை இருந்த போதும், முழக்கங்களை அவர்களே கேட்ட பிறகும் மறுநாளே (பிப்ரவரி 10 ஆம் தேதி) முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய வில்லை.
விவகாரத்தை ஜீ தொலைக்காட்சி ஊதிப் பெரிதாக்கியதோடு தமது நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் சாம்பித் பத்ராவை அழைத்து “சியாசினில் வீரர்கள் நாட்டைக் காக்க தியாகிகள் ஆகியுள்ள நிலையில் நாட்டின் உள்ளேயே தேச விரோதிகள் சுதந்திரமாகத் திரிகிறார்கள். 56 இன்ச் மார்பு என்றெல்லாம் பீற்றிக் கொண்ட நீங்கள் ஏன் தேச துரோகிகளின் மேல் நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள்” என்று உசுப்பேற்றியிருக்கிறது.
சொல்லி வைத்துக் கொண்டு நடந்த இந்த நாடகத்திற்கு பின்னர் பிப்ரவரி 11 ஆம் தேதிதான் டெல்லி வசந்த் குஞ்ச் காவல் நிலையத்தில் காவல்துறையால் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட ’அடையாளம் தெரியாத’ மாணவர்களின் மேல் தானாகவே முன்வந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறது காவல்துறை.
அதே நேரம் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி கிரீ மற்றும் ஏ.பி.வி.பி அமைப்பினரிடமிருந்து புகார்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்படுகிறது.
இதற்கிடையே 2016 பிப்ரவரி 9 ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து டெல்லி காவல்துறை தரப்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிப்ரவரி 17 ஆம் தேதி அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்படி அறிக்கையில், பல்கலைக்கழக மாணவர்கள் துர்கா பூஜையன்று மகிஷாசூரனை வணங்கியதையும், பல்கலைக்கழக உணவு விடுதிகளில் மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததையும் சுட்டிக்காட்டி இந்த காரணங்களால் அவர்கள் தேச துரோகிகள் என்று தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 9-ஆம் தேதியன்று வளாகத்தில் நடந்த சம்பவங்களில் தாம் தனிமைப்படுத்தப் பட்டதை ஏ.பி.வி.பியால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. பல்கலைக்கழக மாணவர்களிடையே தமக்கு ஆதரவு குறைந்து வெளியிலிருந்து அழைத்து வந்த குண்டர்களைச் சார்ந்தே கலவரங்களைத் தூண்ட வேண்டிய நிலைக்கு தாழ்ந்து விட்டதை எண்ணிக் குமைந்துள்ளனர். உடனடியாக மறுநாளே "தேச பக்தியை" கடை விரித்து அதன் மூலம் கல்லாகட்ட தமது அமைப்பின் சார்பில் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.
வெறும் 200 மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்ட அந்த கண்டன வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் பரவலான மாணவர்களின் ஆதரவின்றி பிசுபிசுத்துப் போய் விட்டது.
தொலைக்காட்சி ஊடகங்களின் வெறுப்புப் பிரச்சாரம் ஒரு பக்கம் என்றால் ஜே.என்.யு.வை இழுத்து மூட வேண்டும் என்கிற பிரச்சாரம் சமூக வலைத் தளங்களில் (Shut down JNU) இந்துத்துவ கும்பலால் திட்டமிட்ட ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையில் இந்துத்துவ கும்பல் வெளியிலிருந்து ஏற்பாடு செய்த ரவுடி கூட்டத்தை ஜே.என்.யு வாசலில் கூட்டி மாணவர்களுக்கு எதிராக முழக்கமிட வைத்தது.
மொத்தத்தில் மாணவர்களுக்கு எதிராக ஒரு பொது மனநிலை கட்டமைக்கப்பட்டு வந்த நிலையில் 2016 பிப்ரவரி 11 ஆம் தேதி ஜே.என்.யு மாணவர் சங்கம் கண்டன ஆர்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தது.
அதில் மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் எழுப்பிய முழக்கம் டெல்லி ஆட்சியாளர்களை உலுக்கியது.
(தொடரும்)
மு.செந்திலதிபன்
கழகப் பொருளாளர்




