புதுடெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய (Airports Authority of India) தலைவரை (Chairman, AAI) 27.05.2026 அவரது அலுவலகத்தில் சந்தித்து துரை வைகோ எம்.பி., உரையாடினர்.
அப்போது, திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் வளர்ச்சியின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி, தற்போதைய 2,423 மீட்டர் (7,949 அடி) நீளமுள்ள ஓடுதளத்தை 3,810 மீட்டர் (12,500 அடி) வரை நீட்டிக்கும் திட்டத்தின் அவசியத்தையும் அவசரத் தேவையையும் ஆணையத் தலைவரின் கவனத்திற்குக்கொண்டு சென்றார்.
மேலும், இந்த ஓடுதள விரிவாக்கத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் விரிவாக எடுத்துரைத்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிக்கு முன்னுரிமை அளித்து, விரைவில் ஒப்புதல் வழங்கி செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
அத்துடன், ஓடுதள விரிவாக்கப் பகுதிக்கு அருகிலுள்ள கீழக்குறிச்சி, கீழக்குறிச்சி தெற்கு தெரு, நத்தமடிப்பட்டி, முடுக்குப்பட்டி மற்றும் கணேஷ் நகர் ஆகிய கிராமங்களின் மக்கள் பயன்படுத்தும் இணைப்புப் பாதையைப் பாதுகாக்கும் வகையில், அங்கு சுரங்கப்பாதை (Underpass) அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். ஓடுதள விரிவாக்கத்தின் காரணமாக அவர்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் இணைப்புச் சாலை மூடப்படாமல், அதற்கு மாற்றாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது கருத்துகளையும் முழுமையாக எடுத்துரைத்தார். துரை வைகோ எம்.பி., அவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட ஆணையத் தலைவர், இந்த விவகாரங்களைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விரைவில் பதிலளிப்பதாக உறுதியளித்தார்.




