தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணாவிரத அறப்போரில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும்போது, "தமிழ்நாட்டின் உரிமை காக்க வாழ்நாள் முழுவதும் போராடுவேன்!" என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:
கதிர் வெடித்துப் பிளம்பு விழ
கடல் கொதித்துச் சூடாற்ற
முதுமைமிகு நிலப்பரப்பின்
முதற் பிறப்பு தோன்றிவிட
நதிவருமுன் மணல் தருமுன்
முன்தோன்றி மூத்ததுவும்
பதிமதுரைப் பெருவெளியில்
பாண்டியர் கொற்றம் கண்டதுமான
செந்தமிழே என் உயிரினும்
இனிய தமிழே வணக்கம்.
ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கிறேன். இயற்கை நமக்கு துணை செய்வதைப் போல நடு பகலுக்குப் பின் ஆதவனின் கனல் பாயும் கதிர்களைப் பாய்ச்சாமல், மேகக் கூட்டம் வானத்தில் நிறைந்திருக்க, வெயிலின் வெப்பம் பார்க்காமல் என் தாயார் மாரியம்மாளைப் போல காலை எட்டு மணிக்கே வந்து அமர்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்காமல் இருக்கின்ற என் அன்புத் தாய்மார்கள், அருமைச் சகோதரிகள் ஆகியோரின் காலடிகளில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெடுநேரம் பேச வேண்டிய அவசியம் இல்லை. செய்தியாளர்களைச் சந்தித்தபோதே சொல்ல வேண்டிய பல கருத்துக்களைச் சொல்லியிருக்கின்றேன். உண்ணாவிரத அறப்போராட்டம் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், சிவகிரி, ராஜபாளையம், வெம்பக்கோட்டை தாண்டி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பாசனம் பெறுவதற்கும், குடிதண்ணீர் பெறுவதற்கும் 1773 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செண்பகவல்லி தடுப்பணை பழுதுபட்டது.
அந்தப் பழுதை நீக்கி செப்பனிடுவதற்காக தியாகச் சுடர் பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் எடுக்கப்பட்ட முயற்சி வெற்றி பெற்றது. பின்னர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மீண்டும் அது பழுதடைந்தபோது, தமிழக அரசு செலுத்திய பணத்தை பயன்படுத்தாமல் வைத்திருந்து அதை திரும்ப தமிழக அரசுக்கே கேரள அரசு அனுப்பியது.
இதற்கிடையில் நான்கு முறை நான் திருவனந்தபுரம் சென்று முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் உம்மன் சாண்டி அவர்களைச் சந்தித்து, செண்பகவல்லி தடுப்பணையைப் பழுது பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அவரும் சம்மதம் தெரிவித்தார். தலைமைச் செயலாளரையும், பொதுப்பணித் துறைச் செயலாளரையும் அழைத்து, வைகோவோடு தொடர்பு கொண்டு தடுப்பணையை சீர்படுத்திக் கொடுத்துவிடுங்கள் என்று உத்தரவிட்டார். மூன்று மாத காலத்தில் அவரது ஆட்சி மாறியது. அதன் பின்னர் வந்த மாநில அரசு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் கொச்சிக்குச் சென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதிப்பு மிக்க தலைவர் தோழர் அச்சுதானந்தன் அவர்களைச் சந்தித்து, இதனால் கேரளத்துக்கு எந்த நட்டமும் இல்லை. தமிழ்நாட்டுக்கு 30 ஆயிரம் ஏக்கருக்கு பாசனம் கிடைக்கும். நீங்கள் கருணை காட்டுங்கள் என்று அவரிடம் நான் கேட்டேன். பரிசீலிக்கிறேன் என்று அவர் கூறினார்.
அதற்கு ஒரு சில வருடங்களுக்கு உள்ளாகவே செண்பகவல்லி தடுப்பணை முழுமையாக உடைத்து நொறுக்கப்பட்டது. விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். என்னுடைய இளவல் வை.ரவிச்சந்திரனும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வழக்குத் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் இது இரண்டு மாநிலங்கள் சம்மந்தப்பட்ட பிரச்சினை என்பதால், நாங்கள் ஒரு தரப்பாக தீர்ப்பளிக்க முடியாது. ஆனால் சம்மந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு பிரச்சினையை நீங்கள் தீர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்து அந்த வழக்கை தள்ளுபடி செய்தார்கள். எனவே இனி மீண்டும் உயர்நீதிமன்றத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாம் அணுகலாம்.
இப்பொழுது கேரளத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கின்ற காங்கிரஸ் கட்சி முதலமைச்சரைச் சந்தித்து, தமிழக அரசின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கக்கூடிய மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்கள் பொதுப்பணித் துறை அமைச்சரை அழைத்துக் கொண்டு சென்று இந்தக் கோரிக்கையை முன் வைக்க வேண்டும்.
மீண்டும் என்னால் இயன்ற அளவுக்கு விவசாய சங்கங்களின் தலைவர்களை அழைத்துச் சென்று கேரளத்தில் இப்பொழுது பொறுப்பேற்று இருக்கின்ற முதலமைச்சரைச் சந்தித்து பிரச்சினையின் நியாயத்தை எடுத்துக் கூறுவேன்.
மலை அடிவாரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவு வரை காட்டுப் பன்றிகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் விளைவிக்கின்ற பயிர்கள் எல்லாம் நாசமாகின்ற பேரபாயம் ஏற்பட்டிருக்கின்றது. ஆகையால் மத்திய அரசின் வன விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
வாய்ப்புக் கிடைத்தால் இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, மத்திய அரசின் வனவிலங்குகள் பட்டியிலிருந்து காட்டுப் பன்றிகளை நீக்கி, விவசாய விளைபொருட்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துவேன்.
அதைப் போல செண்பகவல்லி அணை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதற்கு, டாக்டர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகனிடம் உள்ளாறு அணைக்கட்டுத்திட்டத்தை நிறைவேற்றுமாறு கூறினார். சில காரணங்களால் அரசால் அறிவிக்கப்படாமல் அந்தத் திட்டம் நின்று போனது.
அந்த உள்ளாறு அணைக்கட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு வாய்ப்புக் கிடைக்குமானால், அப்படி அணை கட்டப்படுமானால் இந்த மண்டலத்தில் இருக்கக்கூடிய 40 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். கிணறுகளில் வற்றாத தண்ணீர் இருக்கும். குளங்களில் நீர் நிரம்பி மீன்கள் வளரும். அதன் மூலம் பலருக்கு வருவாய் கிடைக்கும். இந்த மண்டலம் வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்றப்படும் என்ற வகையில் இந்த அறப்போராட்டத்தை நான் முன்னெடுத்தேன். காலம் என்னை அனுமதிக்கும் வரை நான் போராடுவேன்.
82 ஆவது வயது இன்னும் மூன்று மாதத்தில் எனக்கு முற்றுப் பெற இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகள் இந்த உலகத்தில் இருப்பேன்.
1964 ஆகஸ்ட் 21 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்னிலையில் கோகலே மண்டபத்தில் பேசி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணியில் நான் சேர்ந்தேன். அதற்கு ஆறுநாட்களுக்கு முன்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதலமைச்சர் பதவியைத் தானாக தூக்கி எறிந்துவிட்டு, பதவிகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணிக்கு வர வேண்டும் என்று ஒரிசாவில் நேருவின் முன்னிலையில் திட்டத்தை வைத்தார். அது காமராஜர் திட்டம் என்று அறிவிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகி, அடுத்த பத்தாவது மாதம் சென்னையில் 20 ஆயிரம் மாணவர்களை ஓரிடத்தில் திரட்டி, பெருந்தலைவர் காமராஜர் உரையாற்ற இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
தந்தை பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட சென்னை பல்கலைக் கழகத்தின் நெ.து.சுந்தரவடிவேலு அவர்கள், மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் பி.ஜி.என்.சுவாமி அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி, 20 ஆயிரம் மாணவர்களுக்கு முன்பு பெருந்தலைவர் காமராஜர் உரையாற்றப் போகிறார். வரவேற்றுப் பேசுவதற்கு உங்கள் கல்லூரியில் இருந்து சிறந்த பேச்சாளரை அனுப்பி வையுங்கள் என்று துணை வேந்தருக்குக் கடிதம் அனுப்பினார். மாநிலக் கல்லூரியின் தலைமைப் பேச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த என்னை கல்லூரி முதல்வர் அவர்கள் அழைத்து, ஆகஸ்ட் 15 பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் 20 ஆயிரம் மாணவர்களுக்கு முன்னால் உரையாற்றப் போகிறார். அதில் நீ வரவேற்று உரையாற்ற வேண்டும் என்று என்னை அனுப்பி வைத்தார். நான் சென்றேன். அந்தமாபெரும் தலைவர் சோவியத் ரஷ்யாவுக்குச் சென்றபோதுகூட, வாட்டி வதைக்கும் கொட்டும் பனியிலும் கதர் வேட்டியைக் கட்டிக் கொண்டிருந்தார். அவர் மறைந்தபோது 365 ரூபாய்தான் அவரிடம் மிச்சமாக இருந்தது. பத்து கதர் சட்டைகள், பத்து கதர் வேட்டிகள், இரண்டு காலணிகள் இதைத் தவிர எதுவும் கிடையாது. எளிமையாக, நேர்மையாக, நேர்மையின் குன்றமாகத் திகழ்ந்தார்.
அதே போலத்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா சென்று திரும்பி வந்தபோது, நானும் பத்து கல்லூரி மாணவர் தலைவர்களும் அவரைச் சந்தித்துச் சென்றபோது, வழக்கமாக அவர் அணியும் கதரால் நெய்யப்பட்ட முண்டா பனியனும் இல்லாமல், கை வைத்த பனியனும் இல்லாத ஒரு பனியனை அணிந்து கொண்டு ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தார். அண்ணாவின் அந்தத் தோற்றத்தைக் கண்டு நாங்கள் மனம் வருந்தினோம்.
அப்படிப்பட்ட அறிஞர் அண்ணாவின் உதிர சொந்தங்கள் வறுமையில் சிக்கி இன்றும் வாடுகின்றனர்.
அண்ணா அவர்கள் வெளிமாவட்ட சுற்றுப் பயணம் சென்று திரும்பியபோது, தன் வீட்டில் அழகான சோபாக்கள் போடப்பட்டிருப்பதைப் பார்த்து, தன் துணைவியார் ராணி அம்மையாரை அழைத்து, என்ன ராணி புதிதாக இருக்கிறது? வீட்டில் நிறைய சோபா கிடக்கிறது என்று? கேட்டார். கலெக்டர் வந்து போட்டுவிட்டுச் சென்றார் என்றார் ராணி அம்மையார்.
"இப்போது போட்டுவிட்டுச் செல்வார். முதல் மந்திரி பதவி போனவுடன் திரும்ப எடுத்துக்கொண்டு போய்விடுவார். இதை ஏன் அனுமதித்தாய்?" என்று மாவட்ட ஆட்சித் தலைவரை வரவழைத்து, இந்த சோபாக்களை எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று அனுப்பிவிட்டார்.
உங்களுக்கு புற்று நோய் இருக்கிறது; குளிர்பதனம் செய்யப்பட்ட அழகான இல்லம் கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்குத் தயாராக இருக்கிறது என்று கூறிய போது, என்னுடைய நுங்கம்பாக்கம் வீட்டிலேயே கடைசி வரை இருந்துவிட்டுச் சென்றுவிடுகிறேன் என கூறிவிட்டார் அண்ணா! இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டிய பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்ததும், நேர்மையின் குன்றமான காமராஜரைப் போலவே அவர் இருந்ததும் நினைவில் வருகின்றன. நாட்டின் ஜனநாயகம் அழிக்கப்பட்டுவிட்டதே என்று மனம் வாடிய காமராஜர் அவர்கள், மகாத்மா காந்தியின் பிறந்த நாளாகிய அக்டோபர் 2 ஆம் நாள் உணவை முடிந்து கொண்டு படுக்கையில் சாய்ந்தவாறு உதவியாளர் வைரவனை அழைத்து "ஏப்பா லைட்டை அணைத்துவிட்டுப் போ" என்று கூறி படுத்துவிட்டார். ஒரு மணி நேரம் கழித்து வைரவன் சென்று பார்த்தபோது, பெருந்தலைவர் காமராஜர் அந்தப் படுக்கையில் அசையாமல் படுத்திருந்தார். உயிர் போயிருந்தது. இப்படியான நேர்மையாளர்கள் தமிழ்நாட்டில் கொற்றம் நடத்தினார்கள்.
அந்தக் காமராஜர் முன்னால் 1964 ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று நான் பத்து நிமிடம் பேசினேன். பொழுது விடிந்தது. விக்டோரியா அறையில் நான் தங்கியிருந்த அறையின் வாயிலில் நடுத்தர வயதுள்ள ஒருவர் சிவந்த மேனியுடன் கதர் ஜிப்பா போட்டுக் கொண்டு நின்றார். அவரை உள்ளே அழைத்து, நீங்கள் யார்? என்று கேட்டேன். அவர், "நான் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், என் பெயர் அஜீஸ், நேற்று சாயங்காலம் நீங்கள் பேசிய பேச்சு பெருந்தலைவர் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. உங்களை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்துக் கொண்டு வரச்சொன்னார்" என்று கூறினார்.
நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் இயக்கத்தில் இருக்கிறேன். பேரறிஞர் அண்ணாவின் பால் பற்று கொண்டு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறேன். எங்கள் குடும்பம் காங்கிரஸ் குடும்பம்தான். பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரானதற்குப் பின்பு முதல் சுற்றுப் பயணத்தில் அவர் தங்கிய இடம் கலிங்கப்பட்டியில் என் பாட்டனார் கட்டிய வீடுதான். நான் பத்து வயது சிறுவனாக இருந்தபோது, எங்கள் இல்லத்தில் காமராஜர் மதிய உணவு அருந்தி, மாடியில் படுத்து உறங்கியிருக்கிறார். அவருக்காகவே மாடியில் குளியல் அறை, கழிப்பறை கட்டப்பட்டிருந்தது. மாலையில் எழுந்து சிற்றுண்டி முடிந்து கொண்டு சென்றார். இப்படி ஒரு காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன்தான் நான்.
ஆனால் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேரறிஞர் அண்ணாவின் எழுத்தில், கலைஞரின் எழுத்தில், பேச்சில், நடமாடும் பல்கலைக் கழகம் நாவலரின் சொல்லாற்றலில் என்னை நானே பறிகொடுத்து அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கிறேன் என்று அவரிடம் நான் குறிப்பிட்டேன்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இந்த வாசுதேவநல்லூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு இன்றைக்கு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற அன்புச் சகோதரர் ராஜா அவர்களை ஆதரித்து புளியங்குடி வீதியில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.
அதே போலத்தான் கடையநல்லூர் தொகுதியில் நான்கு நாட்கள் பிரச்சாரம் செய்தாலும், கடைசியாக கடையநல்லூர் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.
கோவில்பட்டி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஒட்டுக் கேட்டுவிட்டு, பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட தி.மு.கழக வேட்பாளர் அன்புக்குரிய அப்துல்வஹாப் அவர்களின் அழைப்பின் பேரில் என் உயிருக்கு உயிரான கே.எம்.ஏ. நிஜாம் செய்த ஏற்பாட்டில், மேலப்பாளையம் நகரில் ஒரு மணி நேரம் உரையாற்றிவிட்டு, அருப்புக்கோட்டை தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஒரு மணி நேரம் ஒட்டுக் கேட்டுவிட்டு, அடுத்து திருச்சுழி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட தங்கம் தென்னரசு அவர்களை ஆதரித்து ஒரு மணி நேரம் உரையாற்றினேன்.
அதன் பின்னர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட ஷாஜகானை ஆதரித்து பாபநாசம் தொகுதியில் பேசிவிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து கந்தர்வகோட்டை தொகுதியில் அரிவாள் சுத்தியல் சின்னத்திற்கு வாக்குக் கேட்டு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் ஓட்டுக் கேட்டுவிட்டு, அன்புச் சகோதரர் கே.என்.நேரு அவர்கள் போட்டியிட்ட தொகுதியில் முக்கால் மணி நேரம் உதயசூரியனுக்கு ஆதரவாக வாக்குக் கேட்டு உரையாற்றினேன். இப்படி நான் 34 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன்.
நான் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அதற்கு விசுவாசமாக இருப்பேன். நம்பியவர்களுக்கு சிறு வேற்றுமை இல்லாமல் பாடுபடக் கூடியவன் என்ற வகையில் நான் பிரச்சாரம் செய்த 34 தொகுதிகளில் 24 தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. புளியங்குடியை உள்ளடக்கிய இந்த வாசுதேவநல்லூர் தொகுதியிலும் ராஜா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.
இன்றைக்கு இந்த மாபெரும் உண்ணாநிலை அறப்போராட்டத்திற்கு 1500 பேர் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் அசையாமல் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஆத்திரத்தின் உச்சத்திற்கே சென்று நம்முடைய ஈழவாளேந்தி செந்திலதிபன் எரிமலையாகச் சீறினார். அது தேவையில்லை. தாக்குதலுக்கு ஆளாகாதவர்கள் யார் இருக்கிறார்கள்? உலக உத்தமர் காந்தியடிகளையே, மனிதருள் மகாத்மாவான காந்தியடிகளையே இழிவாக பேசி, நேருக்கு நேராக நின்று அவரது மார்பில் மூன்று தோட்டாக்களை செலுத்திய நாதுராம் விநாயக் கோட்சே இந்நாட்டில்தான் பிறந்தான். காந்தியடிகள் இமயத்தின் உச்சத்தில் இருப்பவர்!
தட்டுங்கள் திறக்கப்படும்; கேளுங்கள் கொடுக்கப்படும்; வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருகிறேன் என்று கூறினார் ஏசுநாதர். அவரது சீடர்களில் 12 பேரில் ஒருவன் ஜூடாஸ். கையில் முத்தமிட்டு, வேத பாலர்களிடம் பிடித்துக் கொடுத்தான். அவரை பிலாத்து சபைக்கு இழுத்துக் கொண்டு போனார்கள். குற்றக் கூண்டில் நிறுத்தி, குற்றம் சாட்டினார்கள். பிலாத்துவின் மனைவி, இந்த மனிதன் குற்றமற்றவராகத் தெரிகிறது. இந்த மனிதனிடம் ஏதோ தெய்வீக அருள் இருக்கிறது. நீ அவசரப்பட்டு தண்டித்துவிடாதே என்று பிலாத்துவிடம் கூற, தயங்கியவாறு பிலாத்து, இங்கே யாரை நான் விடுதலை செய்ய வேண்டும் என்று வேதபாலர்கள் திரட்டி வைத்திருந்த கூட்டத்தைப் பார்த்துக் கேட்டார். அதன் பின்னர்தான் சிலுவையில் அறைந்தார்கள்.
மெல்கிப்சன் எடுத்த 'தி பேஷன் ஆஃப் தி கிரைஸ்ட்' என்ற திரைப்படத்தைப் பார்த்தால்தான் இது தெரியும். சித்ரவதை செய்து, உடம்பை நார் நாராகக் கிழிந்து இரத்தம் அப்படியே கொட்டிக் கொண்டிருக்க இழுத்துக் கொண்டே சென்று தூக்க முடியாத சிலுவையை தோளில் போட்டு மேலும் மேலும் சவுக்கால் அவரை அடித்து கொடுமைப்படுத்தி, அதற்குப் பின்பு அவரை கொண்டு சென்று சிலுவையில் மாட்டி இரண்டு கால்களிலும், நெற்றியிலும், இரண்டு கைகளிலும் ஆணியால் அறைந்த கொடிய சித்ரவதை உலகத்தில் எவருக்கும் நடந்திருக்காது.
இந்தத் திரைப்படம் தவறாக எடுக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். போப் ஆண்டவரிடம் சென்று மெல்கிப்சன் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள், இதுவும் உண்மையா? பைபிளில் சொல்லப்பட்டிருப்பது மட்டும்தான் உண்மையா? என்று கேட்டபோது, நீ எடுத்திருக்கின்ற படம்தான் உண்மை. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஏசுநாதர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டார் என்று போப் ஆண்டவர் கூறினார். இதை நான் படித்திருக்கிறேன்.
ரட்சகர் என்று உலகில் கோடானு கோடி மக்கள் ஜெபம் செய்கின்ற கர்த்தருக்கு எப்படிப்பட்ட கொடுமை இழைக்கப்பட்டது! காந்தியார் எப்படி சுட்டுக் கொல்லப்பட்டார்!
"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்;
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பம் இல்லை"
என்று பல்லவ சக்கரவர்த்தி மகேந்திர வர்மன் முன்பு வீர கர்ஜனை புரிந்த நாவுக்கரசர் அப்பர் அடிகள் சுண்ணாம்புக்காளவாயிலில் தூக்கிப் போட்டதும், மதம் பிடித்த யானையைக் கொண்டு காலால் அவர் தலையை மிதிக்கவிட்டதும், பொங்கும் கடலில் தூக்கி எறிந்ததும் தேவாரத்தின் வாசகங்களில் நீங்கள் படிக்கலாம்.
ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் நபிகள் நாயகம் அவர்கள் 37 போர்க் களங்களில் நின்றார். 9 போர்க் களங்களில் உருவிய வாளுடன் போரிட்டார். நபிகள் பெருமானுக்கு இரண்டே இரண்டு உடைகள்தான். மாற்று உடை வேறு கிடையாது. அவ்வளவு எளிமையாக அவர் வாழ்ந்தார்.
தன்னுடைய மகளும், மருமனும் கண்கள் குளமாகும்தம்மா கர்பலாவை நினைக்கையிலே என்று மனம் உருகப் பாடினோரே அபுபக்கர். அசேன், உசேன் என்று வீரத்தின் பிள்ளைகள். பாத்திமா பெற்றெடுத்த கண்மணிகள். பாட்டனார் நபிகள் நாயகம் உட்கார்ந்திருக்க பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த பேரிச்சம் பழங்களை அந்தப் பிள்ளைகள் சாப்பிட முயன்றபோது, பேரப்பிள்ளைகளே இது உன் பாட்டனின் சொத்து அல்ல, அரசாங்க சொத்து. இதை நீங்கள் தொடக் கூடாது. அந்தப் பேரிச்சம் பழங்களை அங்கேயே போட்டுவிடுங்கள் என்று நபிகள் பெருமான் சொன்னார்.
இந்த ஜூன் 5 ஆம் நாள் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள். இந்நாளில் இந்தச் சம்பவங்களை எல்லாம் சொல்வதற்குக் காரணம். விமர்சனங்களை சாதாரணமாக எழச் செய்யலாம். தாக்குதல்களைத் தொடுக்கலாம். நாம் ஆத்திரப்பட வேண்டிய அவசியமே இல்லை.
ஆயிரக்கணக்கானவர்கள் காலை முதல் மாலை வரை பட்டினியாக உண்ணாவிரதம் இருப்பதற்கும் எவ்வளவு பெரிய பேற்றினை இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிறது. அதை நினைத்து நமது மனதை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டும். வசவாளர்கள் வாழ்க! என்று அண்ணா கூறினார்.
ஒரு குறிப்பிட்ட சகோதரன் பெயரைக் குறிப்பிட்டு நமது செந்திலதிபன் பேசினார். அவரது பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.
அவர் ஒரு புத்தகம் எழுதினார். அதை வெளியிட வேண்டும் என்னிடம் வசதியில்லை என்றார். அந்தப் புத்தகத்தை வெளியிடுவதற்கான மண்டபத்தை நான் அமைத்துக் கொடுத்து, அதற்குரிய வாடகை பணத்தையும் செலுத்தினேன். அந்த மண்டபத்தில் 250 பேர்தான் அமர முடியும். அந்த 250 பேருக்கும் நண்பகல் உணவையும் நான் ஏற்பாடு செய்து கொடுத்து, அந்தப் புத்தகத்தை வெளியிடச் செய்தேன். அந்த நண்பர்தான் தொலைக்காட்சியில், இதைவிட தூக்கிட்டுச் சாகலாம் என்று கடுமையாக கூறியிருக்கிறார். வாழ்க அந்த நண்பர்!
எனக்கு யார் மீதும் ஆத்திரம் இல்லை. ஆத்திரப்பட்டு என்ன செய்யப் போகிறோம்? வாழ்க்கையின் பெரும் பகுதி முடிந்தது. சாயங்காலம் வந்துவிட்டது. வாழ்க்கையின் சாயுங்காலமும் எனக்கு வந்துவிட்டது. எவர் விமர்சித்தால் என்ன? உத்தமர் காந்தியடிகளை, ஏசுநாதரை, நபிகள் நாயகத்தை, நாவுக்கரசர் அப்பர் அடிகளை நான் எதற்காகச் சொன்னேன்? அவர்கள் எல்லாம் இமயமலையினும் உயர்ந்தவர்கள். நான் சாதாரணமானவன். மண்ணில் கிடக்கின்ற கூழாங்கல்லுக்குச் சமமானவன். என்னுடைய அன்புச் சகோதரர்களே விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டாம். செந்திலதிபன் சொல்வதைப் போல நம்மை காயப்படுத்தியவர்கள் மீது நாம் கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்மை பாராட்டுகின்றவர்களும் இருக்கிறார்கள்.
விமானத்தில் வருகின்றபோது, காரில் பயணிக்கின்றபோது முன்பின் தெரியாதவர்கள் என்னிடம் வந்து உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்தில் எல்லோருக்கும் பிடிக்கும் நாங்கள் உங்கள் பேச்சின் பரம ரசிகர்கள். உங்கள் திருவாசகம் பேச்சைக் கேட்காமல் ஒரு நாளும் நாங்கள் தூங்கியது இல்லை என்று எத்தனை இலட்சம் பேர் சொல்கிறார்கள். அவர்களது உள்ளத்தில் எல்லாம் நமக்கோர் இடம் கிடைத்திருக்கிறது அல்லவா?
வாக்குகள் பெற முடியாமல் போயிருக்கலாம். ஆனால் 32 ஆண்டுகளாக இந்த இயக்கத்தை எழுச்சியோடு நடத்தி வருகிறோம். இங்கே உணர்ச்சிகரமாக பேசிய பூமிநாதனைப் போன்ற சகோதரர்கள் பாதுகாத்திருக்கின்ற இந்த இயக்கத்தை, 19 மாதம் நான் சிறையில் இருந்த போது, என்னுடன் சிறையில் இருந்த சகாக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அப்போது நடைபெற்ற சிறையில் தேர்தலின்போது எல்லோரும் பிணையில் வர வேண்டும். பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று டாக்டர் கலைஞர் சிறைக்கு வந்து என்னிடம் கூறினார். பிணையில் வருவதில்லை என்ற முடிவை நான் மாற்றிக் கொண்டேன். நீங்கள் எல்லாம் பிணையில் வெளியே செல்லுங்கள்.
நான் வந்தால் புகைப்பட கலைஞர்களும், தொலைக்காட்சி ஊடகத்தினரும் என்னைத்தான் சுற்றிக் கொள்வார்கள். உங்களை யாரும் காட்ட மாட்டார்கள். நீங்கள் முதலில் பிணையில் விடுதலையாகிச் செல்லுங்கள். தைப் பொங்கலுக்கு வீட்டுக்குச் செல்லுங்கள். தைப் பொங்கலுக்குப் பின்பு நான் பிணையில் வருகிறேன் என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.
பூமிநாதன் வீட்டிற்குச் சென்றார். அவரது தாயார் அந்த மறவர்குல மாதரசி, தேவரய்யா இருந்த ஜெயில்லதான் உங்க தலைவரும் இருக்காராமே! நீ எதுக்கு இப்போ வந்த? உங்க தலைவரு இன்னும் ஜெயில்ல இருக்காருல்ல! நீ எதுக்கு இங்க வந்த? என்று கேட்டிருக்கிறார். இப்படிப்பட்ட மாதரசிகள் நமது இயக்கக் குடும்பங்களில் இருப்பதால்தான் மறுமலர்ச்சி திமுக உறுதியாக இருக்கிறது.
32 ஆண்டுகளுக்கு முன்பு, 30 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பயணித்தேன். 32 ஆண்டுகளாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கி பயணத்தைத் தொடர்கிறேன். நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். 30 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். உடைக்கப்பட இருந்த முல்லைப் பெரியாறு பென்னிகுக் அணையை பாதுகாத்துக் கொடுப்பதற்கு பாடுபட்டிருக்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தன் கனவுத் திட்டம் என்று கூறிய நியூட்ரினோ திட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அஜ்மல்கான் துணையோடு வாதாடி, இந்த நிமிடம் வரை கடந்த பத்தாண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருக்கிறேன்.
தலைநகர் டெல்லியில் பெரியார் மையம் இடிக்கப்பட்டபோது, கண்ணீரும் கம்பலையுமாக ஆசிரியர் வீரமணி வந்து என் கையைப் பிடித்துக் கொண்டு, பெரியார் மையத்தை இடித்துத் தூள் தூளாக்கி விட்டார்கள். பிரதமர் வாஜ்பாயிடம் கூறி எப்படியாவது மாற்று இடம் பெற்றுத் தாருங்கள் என்றார். வாஜ்பாயிடம் சென்று வாதாடிக் கேட்டவுடன், துறை அமைச்சர் அனந்தகுமாரை அழைத்து, வைகோவும், வீரமணியும் வந்திருக்கிறார்கள். அவர்கள் கேட்கின்ற இடத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று கூறினார்.
அதன் பேரில் முன்பைவிட அதிக விலை மதிப்பு பெருமானமுள்ள இடத்தை திராவிடர் கழகத்திற்குப் பெற்றுக் கொடுத்ததற்கும் நான் காரணமாக இருந்தேன்.
ஸ்டெர்லைட் நாசகார நச்சாலையின் அதிபர் உலகக் கோடீஸ்வரன் என்னைப்பார்க்க தலைகீழாக நின்றான். என் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் தங்கப்பழம் போன்றவர்களைச் சந்தித்து தேர்தல் நிதி வசூல் செய்ததில் ஒன்பது கோடியைத்தான் பெற முடிந்தது. நான் கண் அசைத்திருந்தால் 300, 400 கோடியை ஸ்டெர்லைட்காரன் கொடுத்திருந்திருப்பான். நான் சந்திக்க அனுமதித்தேனா? அது என்னை விற்று விடுவதற்குச் சமம். என்னையே விலை பேசி விற்பதற்குச் சமம். இலட்சோப இலட்சம் தொண்டர்களின் கண்ணீரில், வியர்வையில், தியாகத்தில் பாதுகாக்கப்பட்ட இயக்கத்தை தண்டபாணியும், உதயனும், ஜஹாங்கீரும், வீரப்பனும், பாலனும் உயிர் கொடுத்து உருவாக்கிய இயக்கத்தை அப்படிப்பட்ட பாவச் செயலுக்கு நான் ஆளாக்க மாட்டேன். நேர்மை தவற மாட்டேன். நாணயம் தவற மாட்டேன்.
எந்த நம்பிக்கையில் என்னோடு நீங்கள் பயணிக்கிறீர்கள்? என்னோடு வந்தால் கவுன்சிலர் பதவிகூட கிடைக்காது. என்னோடு வந்தால் சிறைச்சாலை கிடைக்கும். போராட்டம் இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். இதற்கு சித்தமாக இருப்பவர்கள் என்னோடு வாருங்கள். மற்றவர்கள் இருக்கின்ற இடத்திலேயே இருந்து கொள்ளுங்கள் என்று கூறினேன்.
1994 ஏப்ரல் 16 இல் நாம் நடத்திய எழுச்சிப் பேரணியில் இந்தத் தலைநகர் பார்க்காத கூட்டமா? இனி வரும் காலத்தில் அப்படி ஒரு பேரணியை எவரும் நடத்திவிட முடியாது. இலட்சோப இலட்சம் பேர் பங்கேற்றனர். பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்கி, காலை ஆறரை மணி வரை நடைபெற்றது.
1995 ஜூலை 30, 31, ஆகஸ்டு 1. திருச்சி மாநகரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் மேடையில் நின்றவாறு, இளைஞர் பட்டாளத்தைப் பாருங்கள் என்று தன்னோடு இருந்த தலைவர்களிடத்தில் எல்லாம் சொல்லுகின்ற அளவுக்கு வாலிபச் சிங்கங்கள் வருங்காலத்துப் புலிகள் வந்த வண்ணம் இருந்தார்கள்.
நமக்கு ஊடகங்கள் கிடையாது. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு சாதனங்கள் கிடையாது. அது ஒரு காலம், அதற்குப் பிறகும் தோல்விகள் வந்த போது, அனைத்து இடங்களிலும் தோற்ற போதும் நீங்கள் உறுதியோடு நின்றீர்கள்.
இங்கே வந்திருப்பவர்கள் மட்டும் அல்ல, இந்த மேடையில் அமர்ந்திருக்கின்ற சகோதரர்கள் மட்டுமல்ல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சின்னஞ்சிறு கிராமத்திலும் 10 தொண்டர்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருக்கிறார்கள் என்கின்ற அளவுக்கு இயக்கத்தை 32 ஆண்டுகளாக கட்டிக் காத்து வருகின்றவர்கள் நீங்கள். உங்களைப் போன்ற தொண்டர்கள்.
தமிழ்நாட்டில் மக்கள் திலகம் புரட்சித் தலைவரைத் தவிர, எவரும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்திய வரலாறு கிடையாது, அண்மையில் வந்த தமிழக வெற்றிக் கழகத்தைத் தவிர. ஆனால் நாம் நடத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களைக் காப்பாற்றி இருக்கிறோம்.
ஆகவே நாம் சவால்களாக நினைத்து இந்த மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவோம். எளிதில் இதில் வெற்றி பெற்று விடுவோம் என்று சொல்வதற்கு இல்லை. கேரளம் உறுதி அளித்து விடும் என்று சொல்வதற்கு நான் தயாராக இல்லை. முயற்சிப்போம்.
என்னைப் பொறுத்தவரையில் முடியாது என்ற முடிவுக்கு நான் வரமாட்டேன். கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கருக்குத் தூக்கு தண்டனைக்கான கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. குடியரசுத் தலைவரும் தள்ளுபடி செய்துவிட்டார். வெள்ளிக்கிழமை தூக்கு என்று டெல்லியில் இருந்த என்னிடம் நெல்லை மாவட்டச் செயலாளர் மஸ்தான் தொலைபேசியில் அழைத்துக் கூறினார்.
நான் பதறிப் போனவனாக மறுநாள் 54 எம்.பி.க்களிடம் கையெழுத்துப் பெற்று, உள்துறை இணை அமைச்சரிடத்தில் கொடுத்து, அந்தத் தூக்குத் தண்டனையை நிறுத்த முடியும் என்று யாருமே நம்ப முடியவில்லை. அண்ணாச்சி ரத்தினவேல் பாண்டியன் அவர்கள், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கிவிட்டது. கருணை மனுவை குடியரசுத் தலைவரும் இரத்து செய்து விட்டார். இனி என்னப்பா செய்ய முடியும்? என்றார். நான் முயன்றேன். தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் வானமாமலை வாதாடினார். விஷ ஊசி போட்டவனுக்கெல்லாம் தூக்குத் தண்டனை இரத்தாகிவிட்டதே! கட்டபொம்மன் வாரிசுக்கு ஏன் தூக்குத் தண்டனையை இரத்து செய்யக் கூடாது என்று கேட்டேன். தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்டது.
பேரறிவாளன், சாந்தன், முருகனுக்குத் தூக்கு. இனி யாரும் தடுக்க முடியாது என்றார்கள். சிறைச்சாலைக்குச் சென்று அவர்கள் மூவரைப் பார்த்து, அவர்களது தலையைத் தடவி கண்ணீர் விட்டவன் நான். ஜெத்மலானி என்ற ஒரு வழக்கறிஞரைத் தவிர வேறு யார் வாதாடினாலும் வெற்றி பெற முடியாது என்றார்கள்.
ஜெத்மலானியிடம் எனக்காக நீங்கள் வர வேண்டும். மூன்று தமிழர் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற என் வற்புறுத்தலால் அவர் வந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று, உச்சநீதிமன்றத்தில் 32 வாய்தாக்கள் தவறாமல் வந்து அந்த வழக்கை நடத்திக் கொடுத்து மூன்று பேரையும் தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றிக் கொடுப்பதற்குக் காரணமானவனும் நான்தான் என்பதை நான் எங்கும் தம்பட்டம் அடித்துக் கொண்டேனா? அல்லது யாராவது பேசுகிறார்களா?
அரேபிய நாட்டில் பால் நாடாருக்கு மரண தண்டனை. பாவம் அவர் குற்றம் அற்றவர். ஏழை, அவருக்கு நாதியில்லை. வெளிவிவகாரத் துறை அமைச்சர் நரசிம்மராவிடம் சென்று அரேபிய மன்னருக்குக் கடிதம் எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஏழையான பால் நாடாருக்கு இந்தத் தேதியில் மரண தண்டனை. நரசிம்மராவ் அரேபிய மன்னருக்குக் கடிதம் எழுதி, மரண தண்டனையை இரத்து செய்ய வைத்தேன். அங்கேயிருந்து திரும்பி வந்து நாகர்கோவிலிலிருந்து வெற்றிவேலை அழைத்துக் கொண்டு மனைவி, பிள்ளைகளுடன் கலிங்கப்பட்டிக்கு வந்து அவர் எனக்கு நன்றி தெரிவித்துவிட்டுச் சென்றார்.
இராமநாதபுரத்திலிருந்து சென்ற 12 மறவர்குல வாலிபர்கள் மலேசிய நாட்டில் போதை மருந்து கடத்தினார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுக்கு ஆளாகி, மரண தண்டனையின் விளிம்பில் நின்ற போது, வேலூர் சிறையில் இருந்தவாறு வெளிவிவகாரத் துறை அமைச்சர் யஷ்வந்த் சின்காவுக்கு கடிதம் எழுதி, 12 பேரும் குற்றமற்ற இளைஞர்கள், அவர்களை விடுவித்துக் கொடுங்கள் என்று கேட்டேன். அவர் அந்த அரசோடு பேசி, 12 பேரும் குற்றமற்றவர்கள், வீட்டின் உரிமையாளர்தான் குற்றவாளி என்று 12 பேரும் விடுதலை செய்யப்பட்டு, அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா 12 பேரை நான் விடுதலை செய்ய வைத்துவிட்டேன் என்று பகிரங்கமாக அறிக்கை விட்டார். பத்திரிக்கை நிருபர்கள் 12 பேரையும் சூழ்ந்து கொண்டு, உங்களை யார் காப்பாற்றியது? தமிழ்நாடு முதலமைச்சரா? என்று கேட்டபோது, இல்லை. எங்களைக் காப்பாற்றிய மனிதர் வேலூர் சிறைச்சாலையில் இருக்கின்ற வைகோ. அவர்தான் எங்கள் 12 பேரையும் காப்பாற்றிக் கொண்டு வந்தவர் என்றார்கள்!
இந்தத் தமிழ்நாட்டுக்கு, நான் பிறந்த பொன்னாட்டுக் காசு இயற்கை வாழ்வாதாரங்களைக் காக்கவும் போராடியிருக்கிறேன். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டுக் கொடுத்திருக்கிறேன். பெரியார் மையத்தையும் மீட்டுக் கொடுத்திருக்கிறேன். என்னால் இயன்றதைச் செய்து, யாருக்கும் வஞ்சகம் செய்தது இல்லை. விலகிச் சென்றவர்கள் நன்றாக இருக்கட்டும். அவர்களைப் பற்றி நான் குறை சொல்லத் தயாராக இல்லை.
நீங்கள் இருக்கிறீர்களே, எனக்கு இது போதாதா? இருக்கின்ற காலம் வரையிலும் எனக்கு உற்ற துணையாக, பக்கபலமாக, ஓடும் குருதியில் கலந்திருக்கின்ற அடையாளமாக இருக்கின்றீர்களே, நாம் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடுவோம். உரிய வகையில் கேரள ஆட்சியாளர்களைச் சந்திக்கலாம். டெல்லியில் இருக்கின்ற ஆட்சியாளர்களைச் சந்திக்கலாம். தமிழக ஆட்சியாளர்கள் அதற்கான முயற்சியை எடுக்கலாம். நாம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியைச் செய்வோம். நம்முடைய மக்கள் நன்றாக இருந்தால் நமக்கு நல்லதுதானே? இந்த மூன்று நான்கு வட்டாரங்களில் இருக்கின்ற மக்களுக்கு வாழ்வு கிடைத்தால் நமக்கு நல்லதுதானே? என்ற எண்ணத்தில் வந்திருக்கின்ற தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும், இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியை அருமையாக அமைத்துத் தந்த என்னுடைய அருமைத் தம்பி சட்டமன்ற உறுப்பினர் தி.மு.இராசேந்திரனுக்கும், பக்கபலமாக வந்து பணியாற்றிய விவசாய அணிச் செயலாளர் அன்புக்குரிய வாரணவாசி இராஜேந்திரனுக்கும், சட்டதிட்ட திருத்தக் குழு உறுப்பினர் கொடுமுடி சண்முகம் அவர்களுக்கும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், அரசியல் ஆலோசனைக் குழுச் செயலாளருமான சிப்பிப்பாறை இரவிச்சந்திரன், ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் வழக்கறிஞர் வெற்றிவேல், மேடையில் அமர்ந்திருக்கின்ற பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், பல்வேறு பொறுப்புகளில் இருப்பவர்கள், சுமேஷ் உள்ளிட்ட தொண்டர்படை தம்பிமார்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தான் அமைத்த படைகள் இந்தியாவில் எல்லைக்கே வருகை தந்தபோது அமெரிக்க விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. பிரிட்டிஷ் விமானங்கள் வந்து குண்டுகளை வீசின. ஜப்பானியர்கள் பின்வாங்கி ஓடிவிட்டார்கள். நேதாஜியின் படை அங்கேயே நின்றது. நேதாஜி அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. சுற்றிலும் குண்டுகள் விழுந்துகொண்டே இருந்தன. கடைசியில் பின்வாங்கிச் செல்ல வேண்டிய முடிவுக்கு வந்தபோது, பெண்களையும், வயதில் மூத்தவர்களையும் லாரிகளில் ஏற்றிவிட்டு நேதாஜி நடந்தே வந்தார்.
நான் மரணத்தை நோக்கி புறப்பட்டுவிட்டேன் தாயே! என்று நெஞ்சை உருக்கும் வகையில் கடைசியாக தன் தாயாருக்கு கடிதம் எழுதிவிட்டு, நடந்து போகின்றபோது களைத்துப் போய் ஒரு குளத்துக் கரையில் படுத்துக் கிடந்தார். எப்பேற்பட்ட சீமான் வீட்டுப் பிள்ளை, அந்தக் காலத்திலேயே நான்கு அடுக்கு மாளிகையில் வாழ்ந்த பிள்ளை சட்டைகூட இல்லாமல் குளத்துக் கரையில் படுத்துக் கிடக்கிறாரே! என்று பதறினார்கள்.
1944 செப்டம்பர் 22 இல் இப்போது எனக்குத் தேவை எல்லாம் புரட்சிக்காரர்கள், புரட்சிகரமான வீராங்கனைகள் எதிரிகளை திணறடிக்கக் கூடியவர்கள் எங்களோடு இப்பொழுது சேர்ந்து கொள்ளுங்கள். தயாரா? என்றபோது, நாங்கள் தயார்; நாங்கள் தயார் என்றார்கள். சொல்பவர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்றபோது அவர்கள் எழுந்து நின்றார்கள். ஓரடி முன்னால் வாருங்கள். சத்தியம் செய்ய வேண்டும். சத்தியம் செய்கிறோம். எங்கள் உயிரைக் கொடுப்பதற்குச் சத்தியம் செய்கிறோம். வெறும் கையெழுத்தல்ல உங்கள் இரத்தத்தால் கையெழுத்திட வேண்டும். சாட்சியாக நான் அருகில் நிற்பேன் என்று நேதாஜி கூறினார். ஒவ்வொருவரும் இரத்தத்தில் கையெழுத்திட்டுவிட்டு நேதாஜி படையில் சேர்ந்தார்கள். அப்படிப்பட்ட தியாக சிகரம் நேதாஜி.
அவரைப் பற்றி நாடாளுமன்றத்தில் நான் பேசியிருக்கிறேன். அவருடைய தியாகத்திற்கு இந்தியா எந்த வெகுமதியும் கொடுக்கவில்லை. நேரு தியாகம் செய்தவர். எட்டு ஆண்டுகள் சிறையில் வாடியவர். மனிதருள் மாணிக்கம். அவரது தியாகத்திற்கு நாடு வெகுமதி அளித்துவிட்டது. நேதாஜிக்கு எந்த வெகுமதியும் கொடுக்கப்படவில்லை என்று பேசியவர் அண்ணா.
ஏழு அணு ஆயுத வல்லரசுகளை எதிர்த்து முப்படைகளின் வல்லாண்மையை எதிர்த்து, தடை செய்யப்பட்ட குண்டுகளையும் எதிர்த்து, காட்டுக்குள்ளேயே விமானப் படையைத் தயாரித்து, கடற் படையைத் தயாரித்து, தரைப் படையைத் தயாரித்து ஒரு சேகுவேரா சாதிக்க முடியாததை, ஒரு பிடல் காஸ்ட்ரோ சாதிக்க முடியாததை மாவோ சாதிக்க முடியாததை, உலகில் எந்த புரட்சித் தலைவனும் சாதிக்க முடியாததை சாதித்துக் காட்டிய பெருமை ஈழத் தமிழ்க் குலத்தில் வேலுப்பிள்ளை பார்வதியம்மாளுக்குப் பிறந்த பிரபாகரனுக்கு உண்டு.
அந்தப் படையில் இருந்த ஒரு பெண் அங்கையற்கண்ணி. இரண்டு வருடம் கழித்து தாயாரைப் பார்க்க வருகிறாள். தாயார் ஆசையாக சமைக்கத் தொடங்குகிறார். நில்லம்மா, நான் அவசரமாகப் போக வேண்டும் என்கிறாள். நீ எப்போது வருவாய்? என்று தாயார் கேட்கிறார். நான் காற்றோடு போய் விடுவேன் அம்மா. கந்தசாமி கோயில் திருவிழாவில் பொருட்களை செய்து விற்றால் காசு கிடைக்கும். உன்னைப் பார்க்க நிறையப் பேர் வருவார்கள். அந்தப் பணத்தில் அவர்களுக்கு நீ சோறு பொங்கி போடம்மா என்று கூறிவிட்டு, உடல் முழுக்க வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சில கிலோ மீட்டரில் இருக்கின்ற போர்க்கப்பலை நோக்கி நீந்திச் சென்று அந்தக் கப்பல் மீது மோதி அதை சுக்கல் சுக்கலாக உடைக்கிறாள். அங்கையற்கண்ணி அதில் கரைந்து சாம்பலாகப் போனாள். கரையில் இருந்த பெண் புலிகள் அழுதார்கள்; கதறினார்கள். அவர்களது தியாகத்தைப் பற்றிப் பெருமைப்பட்டார்கள்.
பாலச்சந்திரன் துரு துருவென்று இருப்பான். அந்தச் சிறுவன் மீது ஐந்து குண்டுகளைப் பாய்ச்சிக் கொன்றார்கள். இதைக் கண்டித்துத்தான் என் தாயார் மாரியம்மாள் ஆயிரம் பெண்களைத் திரட்டி, காலை முதல் மாலை வரை உண்ணாவிரதம் இருந்தார்.
வைகோ தான் வாழ்கின்ற வரை தமிழ்நாட்டு உரிமைகளுக்காக வாழ்ந்தான். உயிர் இருக்கின்ற வரையிலும் தமிழக உரிமைகளுக்காகப் போராடினான். பெரியாரின் வழியில், அண்ணாவின் வழியில் அவனும் கடைசி வரை திராவிட இயக்கத்துக்காக தன்னலமின்றி போராடினான். அவனுக்குத் தோள் கொடுத்தோம். அவன் கரம் பற்றினோம். அவனோடு சேர்ந்தே பயணித்தோம் என்று உங்கள் பிள்ளைகளிடம், உங்கள் பேரப் பிள்ளைகளிடம் நீங்கள் சொல்கின்ற நாள் வரும். அப்படி வருகிறபோது என் புகைப்படத்தை அவர்களுக்குக் காட்டுங்கள்.
அவரோடு நாங்கள் இருந்தோம். இந்த மண்ணுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் ஈழத்துக்காக, தமிழகத்தின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்காகப் போராடிக் கொண்டே இருந்தார். தன்னலமின்றி போராடினார். அவரிடம் சுயநலம் இல்லை. அமைச்சர் பதவி ஏக்கமும் அவரிடம் இல்லை. அவரோடு நாங்கள் பயணித்த பெருமையோடு நாங்களும் வாழ்கிறோம் என்று நீங்கள் சொல்லக்கூடிய விதத்தில் மீதம் உள்ள வாழ்விலும் நான் நடந்து கொள்வேன்.
இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டிய தோழர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ இவ்வாறு உரையாற்றினார்.






