செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது: முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது: முதல்வர் விஜய் அவர்களை சந்தித்து பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள்

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜயை சந்தித்து, ஸ்டெர்லைட் ஆலையை "Green Copper" அல்லது வேறு எந்தப் பெயரிலும் மீண்டும் திறக்க தமிழக அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். சுற்றுச்சூழல் பாதிப்பு, நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் மக்களின் நீண்டகால போராட்டங்களை சுட்டிக்காட்டி, ஸ்டெர்லைட் தொடர்பான அனைத்து முயற்சிகளையும் நிராகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ச.ஜோசப் விஜய் அவர்களிடம் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.06.2026 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். தலைமைச் செயலகம் வந்திருந்த கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோர் அன்புடன் வரவேற்று முதல்வரிடம் அழைத்துச் சென்றார்கள்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறையில் விரிந்த மலர்கள் நூலை வழங்கி முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை எந்த வகையிலும் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு தடையில்லா சான்றிதழை வழங்கக் கூடாது என்பதற்கான ஆங்கிலத்திலும், தமிழிலும் கூடிய கோரிக்கை மனுவை முதல்வரிடம் பொதுச்செயலாளர் வைகோ அளித்து வலியுறுத்தினார்.

இதன் பின்னார் செய்தியாளர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டி அளித்தார். ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வால் மாற்று வழியில் Green Copper என்ற பெயரில் அந்த ஆலையை நிறுவ முயற்சிப்பதாகவும், அதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்து விளக்கியதாகவும். இது தொடர்பாக ஜூலை 2 அன்று தூத்துக்குடியில் பல்வேறு அமைப்புக்களை அழைத்து பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாகவும், தனது நாடாளுமன்ற உரைகள் ஆறு பாகங்களாக தொகுக்கப்பட்டு அதன் வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடத்த இருப்பதாகவும், முதல் பிரதியை வெளியிட துணை குடியரசுத் தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் அவர்களை அழைத்துள்ளதாகவும், விழாவில் கலந்து கொண்டு முதல் பிரதியை பெற்றுக் கொள்ளுமாறு முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாகவும், அதனை முதலமைச்சரும் ஏற்றுக் கொண்டதாகவும் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வைகோ அவர்கள் அளித்த கோரிக்கை மனு விவரம்: பெறுநர்: மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், கோட்டை, செயின்ட் ஜார்ஜ், சென்னை - 600 009.

பொருள்: தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லது தமிழ்நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் வேதாந்தா லிமிடெட், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், "பசுமைத் தாமிரம் (Green Copper)" என்ற பெயரிலோ அல்லது வேறு பெயரிலோ தாமிர உற்பத்தி ஆலை நிறுவவோ, மீட்டுருவாக்கம் செய்யவோ, மீண்டும் தொடங்கவோ அல்லது தாமிர உற்பத்தி மேற்கொள்வதற்காகவோ கோரக்கூடிய எந்தவொரு முன்மொழிவையும், அனுமதியையும், உரிமம் வேண்டி விண்ணப்பித்தலையும் விடுக்கும் கோரிக்கைகளை நிராகரிக்கக் கோரி மனு சமர்ப்பித்தல் - தொடர்பாக...

பேரன்புக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம். இந்த வேண்டுகோள் விண்ணப்பத்தை உங்கள் பார்வைக்கு தந்திருக்கும் நான், மிக முக்கியமான பிரச்சினையை இதன் மூலம் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1990களின் தொடக்கத்தில் மராட்டிய மாநிலத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை வேதாந்தா குழுமம் நிறுவிய போது, இரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அந்த ஆலையின் நச்சுத்தன்மை தங்கள் நிலத்தையும், சுற்றுச் சூழலையும் நச்சுமயம் ஆக்கிவிடும் என்பதால் அந்தத் தொழிற்சாலையை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு உடைத்து நொறுக்கினார்கள். மராட்டிய மாநில அன்றைய முதல்வர் மாண்புமிகு சரத்பவார் அவர்கள் அந்த ஆலைக்குக் கொடுத்த லைசென்சை இரத்து செய்தார். வேதாந்தா குழுமம் கோவா மாநிலத்தில் நிறுவ முயன்று அனுமதி கிடைக்காமல், குஜராத் மாநிலத்தில் நிறுவ முயன்று அங்கும் அனுமதி கிடைக்காமல் 1994 ஆம் வருடம் அன்றைய அண்ணா திமுக தமிழ்நாடு அரசை அணுகிய ஒரு வாரத்திற்குள் லைசென்ஸ் பெற்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நச்சாலையை நிறுவியது. விவசாயிகள்ைகளும், மீனவர்களும், வணிகப் பெரு மக்களும், அரசியல் கட்சியினரும் கடுமையாக எதிர்த்து பல போராட்டங்களை நடத்தினார்கள். உயர் நீதிமன்றத்தில் ஆலையை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. 2010 செப்டம்பர் 28 இல் சென்னை உயர்நீதிமன்றம் ஆலையை நிரந்தரமாக மூடுமாறு தீர்ப்பளித்தது. ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் அதற்குத் தடை ஆணை பெற்றது. வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கில் நடைபெற்று, இறுதியில் சென்னை உயர்நீதிமன்றமே மீண்டும் இந்த வழக்கை விசாரிக்கட்டும் என்று ஆணையிட்டதன் பேரில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாண்புமிகு நீதியரசர் சிவஞானம், மாண்புமிகு நீதியரசி பவானி சுப்பராயன் அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தி ஆலையை நிரந்தரமாக மூடும் தீர்ப்பினை 18 ஆகஸ்ட் 2020 அன்று அளித்தது.

வேதாந்தா லிமிடெட் (ஸ்டெர்லைட் காப்பர்) நிறுவனம் "பசுமைத் தாமிரம் (Green Copper)" என்ற பெயரில் அல்லது வேறு பெயரில் தூத்துக்குடி மாவட்டத்தில் அல்லது தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் தாமிர உற்பத்தி ஆலை நிறுவுதல், மீட்டுருவாக்கம் செய்தல் அல்லது மீண்டும் திறக்க செய்வதற்காக எந்தவொரு அனுமதி, ஒப்புதல், உரிமம், இசைவு வழங்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு அரசின் தலையீட்டை வேண்டி இம்மனுவை வழங்குகிறோம்.

ஸ்டெர்லைட் காப்பர் ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், அதனை எதிர்த்து மக்கள் போராட்டங்கள், வழக்குகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவற்றைத் தூத்துக்குடி மக்கள் பத்தாண்டுகளாக அனுபவித்து வந்துள்ளனர். 'பசுமைத் தாமிரம்' போன்ற புதிய பெயர்களின் கீழ் இத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க முயல்வது, நீதியரசர்கள், அதிகாரிகள் ஆலையை மூடப் பிறப்பித்த ஆணைகளின் நோக்கத்தையே சிதறடிக்கும் செயலாகும். அரசாணைகள் நீதிமன்றங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்டெர்லைட் பிரச்சினையின் சுருக்கமான வரலாறு: தூத்துக்குடி தாலுகா, மேலவிட்டான் கிராமம், SIPCOT தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைத் திட்டத்திற்கு, நாளொன்றுக்கு 234 மெட்ரிக் டன் பிளிஸ்டர் காப்பர் மற்றும் 638 மெட்ரிக் டன் கந்தக அமிலம் உற்பத்தி செய்ய, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமிருந்து 16.01.1995 அன்று சுற்றுச்சூழல் அனுமதியும், தமிழ்நாடு அரசிடமிருந்து 17.05.1995 அன்று அனுமதியும், பின்னர் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து 22.05.1995 அன்று இசைவும் பெறப்பட்டது. இந்த ஸ்டெர்லைட் ஆலை 01.01.1997 அன்று முதல் செயல்படத் தொடங்கியது.

ஏற்கனவே, தூத்துக்குடியில் தொடங்கப்படுவதற்கு முன்பாக, குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிராவின் ரத்னகிரி ஆகிய இடங்களில் இத்தாமிர உருக்காலையை நிறுவ ஸ்டெர்லைட் முயற்சித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடுமையான சுற்றுச்சூழல் எதிர்ப்புகளின் காரணமாக இம் மாநிலங்கள் அனைத்திலும் திட்டம் நிராகரிக்கப்பட்டது. ரத்னகிரியில் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்திருந்த போதிலும், விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக மகாராஷ்டிர அரசு அதன் உரிமத்தை ரத்து செய்தது. அதன்பின் தமிழ்நாட்டு அரசின் அனுமதி பெற்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டால் தூத்துக்குடியின் சுற்றுச்சூழல், பொதுச் சுகாதாரம் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் தூத்துக்குடி மக்களிடம் நிலவியது. இதன் காரணமாக திட்டத்திற்கு எதிராக வலுவான எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையைத் தடுக்கவும் மூடவும் பல்வேறு மனுக்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க) மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் கேடுகள் குறித்து தொடர்ந்து அச்சத்தை வெளியிட்டனர். 05.03.1996 அன்று திரு. வைகோ அவர்களின் தலைமையில் ம.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 1996 ஆம் ஆண்டில், சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் தடையின்மைச் சான்றிதழ் (No Objection Certificate) எதிர்த்து, ம.தி.மு.க. தலைமையில் கருப்புக்கொடி போராட்டங்கள், கடையடைப்புப் போராட்டம் உள்ளிட்ட பல ஜனநாயக வழியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலை செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே பெரு விபத்துகளும் சுற்றுச் சூழல் மாசு கேடுகளும் ஏற்பட்டன. 05.07.1997 அன்று அருகிலிருந்த ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 100 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்து தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 42 பேர் ஐந்து நாட்கள் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர். 20.08.1997 அன்று தொடர்ந்து வெளியேறிய அதிக அளவிலான கந்தக டை ஆக்சைடு வாயுவால் 110/22 கி.வோ. மின் நிலையத்தில் பணியாற்றிய தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 30.08.1997 அன்று ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் முன் பல முறையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து வலுப்பெற்றது.

தூத்துக்குடி மக்களின் போராட்டமும் உயிரிழப்புகளும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 2018 ஆம் ஆண்டில், தூத்துக்குடி மக்கள் நீண்ட ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தினர். 22 மே 2018 அன்று, போராட்டத்தின் 100-ஆவது நாளில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டின் மனச்சாட்சியையே உலுக்கியது. தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகத் துயரமான நிகழ்வுகளில் ஒன்றாக அது அமைந்தது. இந்த உயிரிழப்புகள், இந்தப் போராட்டத்தை ஒரு தொழிற்சாலைக்கு எதிரான போராட்டம் என்ற நிலையைத் தாண்டி, பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல், நீதி மற்றும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் சார்ந்ததாக மாற்றின.

ஆலையின் மூடல் சுற்றுச்சூழல் கேடுகளின் விளைவுகளாலும் மக்களின் தொடர் போராட்டங்களாலும், தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 2018 மே மாதத்தில் ஆலையை சீல் வைத்து நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்குகளின் விபரங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 16.01.1995 அன்று வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய W.P எண். 5769/1997 மனுத் தாக்கல் செய்தேன். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் 28.09.2010 அன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் மனுவை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட உத்தரவிட்டது. மேலும், தொழில்துறை தகராறு சட்டம், 1947 இன் பிரிவு 25-FFF இன் கீழ் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

மேற்கண்ட தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் SLP (C) Nos. 28116-28123/2010 தாக்கல் செய்தது. பின்னர் இந்த வழக்குகள் சிவில் மேல்முறையீட்டு வழக்கு எண்கள் 2776-2783/2013 ஆக மாற்றப்பட்டன. இவ்வழக்கில் நான் நேரில் ஆஜராகி வாதாடினேன். 02.04.2013 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்கும் TNPCB இசைவு இல்லாமல் நீண்ட காலம் ஆலையை இயக்கியதற்கும், வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் ரூ.100 கோடி இழப்பீடு செலுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர், 'காப்பர் ஸ்மெல்டர் பிளாண்ட்- II (Copper Smelter Plant-II)' எனும் விரிவாக்கத் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தை, 29.05.2018 தேதியிட்ட உத்தரவின் மூலம் சிப்காட் (SIPCOT) ரத்து செய்தது. சிப்காட் பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து, மனுதாரர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் W.P. (MD) No. 20788 of 2018 மனுவைத் தாக்கல் செய்தார்; அதன் அடிப்படையில் 30.10.2018 அன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த ரிட் மனுவானது மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் இன்னும் நிலுவையில் உள்ளது.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT), 15.12.2018 அன்று ஆலையை மூடிய உத்தரவை ரத்து செய்து, சில நிபந்தனைகளுடன் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 18.02.2019 அன்று உச்சநீதிமன்றம், இவ்விவகாரத்தில் NGT-க்கு அதிகார வரம்பு இல்லை என்று தீர்ப்பளித்து, அதன் உத்தரவை ரத்து செய்தது. மேலும், வேதாந்தா நிறுவனம் தக்க நிவாரணத்திற்காக உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியது.

அதன் பின்னர், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு எண்கள் W.P. 5756, 5764, 5771, 5772, 5773, 5774, 5776, 5792, 5793 மற்றும் 5801 / 2019 ஆகிய வழக்குகளைத் தாக்கல் செய்தது. மேற்கண்ட அனைத்து வழக்குகளிலும் திரு. வைகோ அவர்கள் எதிர்மனுதாரராக (Respondent) இணைக்கப்பட்டார். இவ்வனைத்து மனுக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர் சிவஞானம் மற்றும் நீதியரசர் பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு (Division Bench) வழங்கிய 18.08.2020 தேதியிட்ட தீர்ப்பின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்பதை திட்டவட்டமான தீர்ப்பாக அமைந்ததோடு மேல் கண்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

வேதாந்தா நிறுவனம் 18.08.2020 தேதியிட்ட தீர்ப்பை எதிர்த்து, இந்திய உச்சநீதிமன்றத்தில் SLP (C) 10159-10168 / 2020 சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் எண்கள் 276-285 / 2021 ஆகியவற்றைத் தாக்கல் செய்தது. ஆனால் மாண்புமிகு உச்சநீதிமன்றம் 29.02.2024 அன்று வழங்கிய தீர்ப்பின் மூலம் மேற்கண்ட மேல் முறையீடுகள் அனைத்தையும் முழுமையாகத் தள்ளுபடி செய்து, முதல் எதிர்மனுதாரரின் (ஸ்டெர்லைட்) ஆலையை மூடிய நடவடிக்கையை உறுதிப்படுத்தியது. மேலும், சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்களுக்கான பொறுப்பிலிருந்து அந்தத் தொழிற்சாலை விடுவிக்கப்படவில்லை என்றும், ஆலையை மூடிய உத்தரவு சட்ட விரோதமானதல்ல என்றும் நீதிமன்றம் தெளிவாகக் கூறியது.

'பசுமைத் தாமிரம் (Green Copper)' என்ற பெயரில் தற்போதைய முயற்சி தற்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட தாமிரக் கழிவுப் பொருட்களை (Recycled Copper Scrap) பயன்படுத்தி 'பசுமைத் தாமிரம் (Green Copper)' உற்பத்தி செய்வதாகக் கூறி, தூத்துக்குடியில் தனது செயல்பாடுகளை மீண்டும் தொடங்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB) அதன் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, நிறுவனம் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

'Copper Smelter' என்ற பெயரை 'Green Copper' என்று மாற்றுவதால் மட்டும் ஸ்டெர்லைட் திட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணி, சுற்றுச்சூழல் கேடுகள், நீதிமன்ற ஆய்வு முடிவுகள், மக்கள் எதிர்ப்பு மற்றும் கொடூரமான உயிரிழப்புகள் ஆகியவற்றை அழித்துவிட முடியாது. ஸ்டெர்லைட் வளாகத்தில் வேதாந்தா நிறுவனம் எந்தவித தொழில்துறை நடவடிக்கையையும் மீண்டும் தொடங்குவது குறித்து தூத்துக்குடி மக்கள் தொடர்ந்து அச்சத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

"பசுமைத் தாமிரம்"/ ஸ்டெர்லைட் நடவடிக்கைகள் மீள்தொடக்கம் தொடர்பான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்க வேண்டிய காரணங்கள்: (i) ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் நிரந்தரமாக மூடப்பட்டது: ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடியது வெறும் நிர்வாக நடவடிக்கை அல்ல. அது சென்னை உயர் நீதிமன்றத்தாலும், இந்திய உச்சநீதிமன்றத்தாலும் வழங்கப்பட்ட இறுதி முடிவாகும். "பசுமைத் தாமிரம்" போன்ற வேறு பெயர்களின் கீழ் அதே நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் எந்தவொரு முயற்சியும் நீதிமன்றத் தீர்ப்புகளை சுற்றி வளைத்து மீறுவதாகும்.

(ii) பெயர் மாற்றம் மூலம் கடந்தகால விதிமுறை மீறல்களை அழித்துவிட முடியாது: "பசுமைத் தாமிரம்" எனப் பெயர் மாற்றம் செய்வதன் மூலம் மட்டும் ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகள், விதிமுறை மீறல்கள், மக்கள் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற ஆய்வு முடிவுகள் ஆகியவை மறைந்துவிடாது. எனவே, அதிகாரிகள் திட்டத்தின் பெயரை மட்டும் பார்க்காமல் அதன் உண்மைத்தன்மை, நோக்கம் மற்றும் விளைவுகளை ஆராய வேண்டும்.

(iii) கடந்தகால சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் காரணமாக மீட்பு முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும்: பல்வேறு சுற்றுச்சூழல் கேடுகள், சட்ட மீறல்கள் மற்றும் வழக்குகள் போன்றவைகளால் ஸ்டெர்லைட் ஆலையின் கடந்த கால வரலாறு நிறைந்துள்ளது. எனவே, புதிய அனுமதி அல்லது இசைவு வழங்குவதற்கு முன், திட்டத்தை முன்மொழியும் நிறுவனத்தின் கடந்தகால வரலாறுகளை (Compliance Record) கவனத்தில் கொண்டு உரிய முக்கியத்துவத்துடன் பரிசீலிக்கப்பட வேண்டும்.

(iv) வணிக நோக்கத்தை விட பொதுச் சுகாதாரமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் மேலோங்க வேண்டும்: சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பாதுகாப்பது அரசின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும். குறிப்பக கடுமையான சுற்றுச்சூழல் கேடுகளும் மக்கள் எதிர்ப்பும் நிலவுகின்ற சூழலில், தனியார் நிறுவனங்களின் வணிக நோக்கத்தை விட பொதுமக்களின் நலனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

(v) பொதுமக்களின் நம்பிக்கை திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது: தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். நீண்டகால மக்கள் போராட்டங்கள், வழக்குகள் ஆகியவற்றினால் பொதுமக்கள் நம்பிக்கை இழந்து உள்ளனர். மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு மீளாய்வு முயற்சியும் சுற்றுச்சூழல் நிர்வாகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கும்.

(vi) 2018 துயரச் சம்பவம் மிகுந்த எச்சரிக்கையுடன் அணுகப்பட வேண்டியதாகும்: 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டத்தின் போது 13 பேர் உயிரிழந்த சம்பவம் இன்றளவும் தீவிரமான பொதுக் கவலையாக உள்ளது. எனவே, ஸ்டெர்லைட் வளாகத்தில் எந்தவொரு நடவடிக்கையையும் மீண்டும் தொடங்குவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும்போது அதன் சமூக விளைவுகள், மக்களின் உணர்வுகள் மற்றும் மீண்டும் அமைதிக்கேடு ஏற்படாமல் தடுக்கும் தேவைகள் ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

(vii) சட்ட நிர்வாக அதிகாரிகள் நடைமுறையில் உள்ள மூடல் உத்தரவுகளைப் பாதுகாக்க வேண்டும்: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் பிற சட்ட நிர்வாக அதிகாரிகளும் அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்களால் உறுதிப்படுத்தப்பட்ட மூடல் உத்தரவுகள் முழுமையாக மதிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய பெயரின் கீழ் வழங்கப்படும் அனுமதிகள் மூலம் நீதிமன்றத் தீர்ப்புகளை மறைமுகமாகச் செயலிழக்கச் செய்யப்படக் கூடாது.

எனவே, தூத்துக்குடியில் "பசுமைத் தாமிரம் " அல்லது அதற்கு ஒத்த எந்தவொரு நடவடிக்கைக்கும், அல்லது ஸ்டெர்லைட் வளாகத்தில் தொழிற்சாலை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கும், எந்தவொரு இசைவு, அனுமதி, உரிமம், ஒப்புதல் அல்லது சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்க வேண்டாம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்து துறைகளுக்கும் மற்றும் சட்டப்பூர்வ அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும், அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்களால் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள மூடல் உத்தரவுகளை தொடர்ந்து அமல்படுத்தி பாதுகாக்குமாறும் வேண்டுகிறேன்.

பொதுநலன்கருதி தங்களின் உடனடி தலையீட்டை கோருகிறேன்.

தங்கள் அன்புள்ள, வைகோ (கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தமிழக முதல்வரிடம் வழங்கிய கோரிக்கை மனுவின் ஆங்கில மொழியாக்கம் இதழில் இணைக்கப்பட்டுள்ளது)