தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் 05.06.2026 அன்று நடைபெற்ற உண்ணா விரத அறப்போர் தொடக்கத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் உரையாற்றும் போது, "சாதி, மதம், கட்சி கடந்து தமிழ் மக்களுக்கானது நம் போராட்டம்!" என்று குறிப்பிட்டார். அவரது உரை வருமாறு:
ஸ்டெர்லைட்டுக்கு ஒரே வாரத்தில் லைசென்ஸ் வாங்கினான். அதற்குப் பின்பு விதிகள் எல்லாம் தளர்த்தப்பட்டன. அவன் நினைத்தது எல்லாம் நடந்தது. நாங்கள் ஸ்டெர்லைட்டை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்கள் நடத்திக் கொண்டிருந்த போது, 20 ஆயிரம் பேரைத் திரட்டி நான் மறியல் போராட்டம் நடத்தினேன். இரண்டு தொழிலாளர்கள் ஸ்டெர்லைட் ஆலை இயந்திரத்தில் சிக்கி இறந்து போனார்கள்.
மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, விடுதலை செய்தவுடன், தஞ்சாவூரில் பொதுக் கூட்டம் பேசுவதற்காக காரிலேயே இரவோடு இரவாக சென்றுவிட்டேன். தஞ்சாவூர் நிலையத்தில் செய்தித் தாள் வாங்கிப் பார்த்தால் விடுதலைப் புலிகளைக் கொண்டு வந்து இரண்டு பேரைக் கொன்று விட்டார்கள் என்று அபாண்டமாக ஸ்டெர்லைட் பொது மேலாளர் கூறியிருந்ததையும், அன்றைய தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜாங்கிட் பத்திரிக்கையாளர்களை அழைத்து, விடுதலைப் புலிகளை வைகோ இங்கே கொண்டு வரவில்லை. இயந்திர பழுது காரணமாக இரண்டு தொழிலாளிகள் இங்கு இறந்துபோனார்கள். ஸ்டெர்லைட் நிறுவனம்தான் இதற்குப் பொறுப்பு என்று கூறினார்.
இனி நம் மீது இப்படித்தான் பழி போடுவார்கள். என்னைப் பிடிக்காவிட்டால் நாடாளுமன்றத்திலேயே எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மோதுவார்கள். என்னுடைய வாதங்களுக்கு அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது. கணைகள் அர்ஜூனன் காண்டீபத்திலிருந்து போகும் என்று புராணத்தில் சொல்வார்கள். வைகோவின் வார்த்தைகள் அதைவிட வேகமாக எதிர்க்கட்சிகளைத் தாக்கும். உடனே என்ன செய்வார்கள் தெரியுமா? நீ ஒரு பயங்கரவாதி; நீ விடுதலைப் புலிகளின் ஆதரவாளன் என்று கூறுவார்கள். என்னுடைய நாடாளுமன்ற உரைகள் அனைத்திலும் குறுக்கிடுவதற்கு முயல்பவர்கள் இதைத்தான் கூறுவார்கள். அதே போல இங்கும் பழி போடுவார்கள்.
இனி நீதிமன்றத்தின் கதவைத் தட்டுவோம் என்று உயர்நீதிமன்றத்தில் நான் ரிட் மனு தாக்கல் செய்தேன். தலைசிறந்த வழக்கறிஞர் தூத்துக்குடி கிருஷ்ணன் பத்து நாட்கள் என்னுடன் தங்கியிருந்து வாதங்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் கொடுத்தார். இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் (நம்பியாரின் மகன்) ஸ்டெர்லைட் ஆலைக்காக ஏழு மணி நேரம் வாதாடினார். நானும் எதிர்த்து ஏழு மணி நேரம் வாதாடினேன்.
அப்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லிபரான், நீதிபதி பத்மநாபன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நான் சுயநலத்திற்காக ஸ்டெர்லைட்டை எதிர்க்கவில்லை. தூத்துக்குடி பகுதியில் இருக்கக்கூடிய மீனவர்கள் வாழ்க்கை அழிந்து போகும். 40 கிலோ மீட்டர் தொலைவுக்கு விவசாயம் அடியோடு நாசமாகிவிடும். பொதுநலனுக்காகத்தான் நான் பாடுபடுகிறேன். சுயநலத்துக்காக அல்ல என்று சொன்னவுடன், தலைமை நீதிபதி லிபரான், என்னைப் பார்த்து, வைகோ அவர்களே உங்கள் நேர்மை, நாணயத்தை நாங்கள் நன்றாக அறிவோம். அதற்கு யாரும் சான்றிதழ் கொடுக்க வேண்டியது இல்லை என்று கூறினார்.
அதன்பிறகு ஆலையை மூடுகின்ற தீர்ப்பைப் பெற்றேன். ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் சென்றது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்கியது.
உச்சநீதிமன்றத்தில் நானும், தேவதாசும் 33 வாய்தாக்களில் கலந்து கொண்டு நான் வாதாடியிருக்கிறேன். ஸ்டெர்லைட் ஆலை அமைப்பதற்குக் கொடுக்கப்பட்ட விதிகளில் எவையெல்லாம் மீறப்பட்டிருக்கின்றன என்பதை வரிசையாக ஒன்றன்பின் ஒன்றாகப் பட்டியலிட்டு நான் என்னுடைய குற்றச்சாட்டுகளை வைத்தபின்பு, திருவாங்கூர் ராஜாவுக்கு திவானாக இருந்த சர் சி.பி.ராமசாமி ஐயர் அவர்களின் பேரன்தான் அரிமா சுந்தரம். அவர் ஸ்டெர்லைட் ஆலைக்காக வாதாடுவார். பெரிய வழக்கறிஞர். அவர் வாதங்களை எடுத்து வைத்தபோது, உச்சநீதிமன்ற நீதிபதி பட்நாயக் அவரைப் பார்த்து, அவரது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்வது மிகவும் சிரமம் என்று கூறினார்.
தூத்துக்குடியில் மீண்டும் விஷப் புகை பரவி எல்லோரும் மயங்கி விழுந்தார்கள். அண்ணன் நல்லகண்ணு அவர்களையும், வணிகர் சங்கத் தலைவர் அண்ணன் வெள்ளையன் அவர்களையும் அழைத்து வந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தினேன். கைது செய்யப்பட்டோம்.
அதன்பிறகு தீர்ப்பாயத்திற்குச் சென்றோம். வழக்கறிஞர் அரிமாசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வாதாடட்டும், மற்றும் மனு போட்ட அனைவரும் வாதாடட்டும், ஆனால் வைகோவை இங்கே வாதாட அனுமதிக்கக் கூடாது என்றார். அந்தத் தீர்ப்பாய நீதிபதி ஸ்டெர்லைட் ஆலைக்கு வெளிப்படையான ஏஜெண்டாக மாறி ஆதரித்தார். உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து பதவி ஓய்வு பெற்று பசுமைத் தீர்ப்பாயத்திற்கு தலைமை நீதிபதியாக வந்தவர், என்னைப் பார்த்துக் கரித்துக் கொட்டினார். வெறுப்பைக் கொட்டினார். ஆலையை திறக்கவேண்டும் என்று அரிமாசுந்தரம் கேட்டவுடன், நான்தான் அடுத்த 15 ஆவது நாள் உங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப் போகிறேனே? நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? என்று நீதிபதி கூறுகிறார். எந்த நீதிமன்றத்திலும் நடக்காத அக்கிரமம் இந்த நீதிமன்றத்தில் நடக்கிறது. எதிர் தரப்பு வழக்கறிஞரைப் பார்த்து, உங்களுக்கு ஆதரவாக அடுத்த வாரம் தீர்ப்பு வழங்கப் போகிறேன் என்று சொல்கிறாரே! என்று செய்தியாளர்களிடம் கூறினேன்.
அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தேன். அங்குள்ள அதிகாரிகளை சரிகட்டி, என்னுடைய இரண்டு ரிட் மனுக்களை சேர்க்காமல் விசாரணைக்கு வந்தது. மூத்த வழக்கறிஞர் நாரிமன் மகன் ஹாரிங்டன் நாரிமன் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தார். ஆங்கிலத்தில் அற்புதமாக பேசுவார். அவரைப் பார்த்து, மை லார்ட், நானும் இரண்டு ரிட் மனு தாக்கல் செய்திருக்கிறேன். அதை பட்டியலில் சேர்க்கவில்லை என்றேன். நீங்கள் யார்? என்று கேட்டார். நான் இங்கே வரவில்லை. தூத்துக்குடி மண்ணில் மே 18 ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேர் தூத்துக்குடி மண்ணில் சிந்திய இரத்தம் இந்த உச்சநீதிமன்ற வாசலில் வந்து நின்று நீதி கேட்கிறது என்று தொடங்கினேன். முன்னால் வந்து கூறுங்கள் என்றார் நீதிபதி.
அதிகமான குறிப்புகள் இருக்கிறது. எதைச் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஐந்து நிமிடம், அல்லது பத்து நிமிடம்தான் எனக்குக் கொடுப்பீர்கள். அதனால் நான் பதட்டமாக இருக்கிறேன் என்று கூறினேன். அவர் சிரித்துக் கொண்டே வைகோ அவர்களே, நீங்கள் பதட்டப்படவில்லை. எங்களைப் பதட்டப்பட வைத்துவிட்டீர்கள் என்று கூறினார். அந்த நீதிமன்றம் என்ன செய்தது தெரியுமா? மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியது.
நீதியரசர் சிவஞானம், நீதியரசி பவானி சுப்பராயன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. நான் மூன்றரை மணி நேரம் வாதாடினேன். எனக்குப் பக்கபலமாக மதுரை வழக்கறிஞர் அஜ்மல்கான் இருந்தார். நான் வழக்காடும்போது, துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டதைப் பற்றிக் கூறும்போது, 11 ஆம் வகுப்புப் படிக்கின்ற மாணவி ஸ்னோலின் தலை வெடித்து அவரது மூளை மண்ணில் சிதறிக் கிடந்தது, ஒரு மீனவ சகோதரி தலை வெடித்து மண்ணில் இரத்தம் கொட்டி இருந்தையும் கூறும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கி, கண்களிலிருந்து தண்ணீர் வந்தது. நீதிபதிகள் அப்படியே நிலைகுலைந்து போனார்கள்.
அனைத்து வாதங்களும் முடிந்து கடைசியில் ஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படும் என்று தீர்ப்பு கொடுத்துவிட்டார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்காரன் உலக கோடீசுவரன். அவன் சும்மா இருக்க மாட்டான். என்னைச் சந்திக்க பலமுறை முயற்சித்தான், ஒரு நிமிடம்கூட அவனைப் பார்க்க முடியாது என்று கூறிவிட்டேன். தற்போது சிலருக்கு பணத்தைக் கொடுத்து, ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்ய வைத்துவிட்டார்கள்.
இங்கே உளவுத் துறையினர் வந்திருக்கிறீர்கள். நான் சொல்லப் போவதை முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்குத் தெரிவித்து விடுங்கள். வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வால் நம்முடைய முதலமைச்சரைச் சந்தித்து வேறொரு வடிவத்தில் அந்த தாமிர உருக்காலையைக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக எனக்கு செய்தி கிடைத்திருக்கிறது. இதைக் கண்டித்து நேற்று காலை 11 மணிக்கு கடுமையான அறிக்கை ஒன்றைக் கொடுத்தேன். மீண்டும் ஒரு வடிவத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தாமிர உருக்காலையை நிறுவப் பார்க்கிறது. தமிழக முதலமைச்சர் மக்கள் நலனைக் காக்க, தூத்துக்குடி வட்டாரத்தைக் காக்க அந்த ஆலைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. ஆலை அதிபர் சந்திப்பதற்கு அனுமதிகூட கொடுக்கக் கூடாது என்று அதில் தெரிவித்திருக்கிறேன்.
பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்கள் அதிகமாக வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு வாழ்வுரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற நான், காலை பத்தரை மணிக்கு மனம் கொந்தளித்து அறிக்கை கொடுத்தேன். ஒரு பத்திரிக்கையில் கூட ஒரு வரியும் என் அறிக்கையைப் போடவில்லை. ஒரு தொலைக்காட்சி கூட என் அறிக்கையை வாசிக்கவில்லை. வாழ்க பத்திரிக்கை ஜனநாயகம்! கோடிக்கணக்கான மக்களைக் காப்பாற்றுவதற்காக நான் அறிக்கை கொடுத்திருக்கிறேன். ஆனால் ஒரு பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் கூட செய்தி வெளியிடவில்லை. இன்றைக்கு வாசுதேவநல்லூரில் மூன்று கோரிக்கைகளை மையமாக வைத்து உண்ணாவிரதம் நடைபெறுகின்ற இடத்தில் சொல்கிறேன் என்றால், இப்பொழுது பத்திரிக்கை நிருபர்கள் என்னிடம் பேட்டி எடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். அவர்கள் செவிகளில் விழ வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
ஒரு ஆபத்தை தடுத்துவிட்டோம் என்று நினைத்தால், அது வேறொரு வடிவத்தில் உள்ளே நுழையப் பார்க்கிறது. அதையும் தடுக்க வேண்டும். இதற்கு மேல் வேறொரு வடிவத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முயன்றால் மீண்டும் தூத்துக்குடியில் களம் அமைப்பேன். பல்லாயிரக்கணக்கான மக்களைத் திரட்டுவேன். போராடுவேன்; முற்றுகையிடுவேன். அலைகள் ஓய்ந்தாலும் வைகோவின் போராட்டம் ஓயாது.
நான் தேர்தலுக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. பதவிகளுக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. இந்த செந்தமிழ் நாட்டில் வாழ்கின்ற விவசாயப் பெருமக்களுக்காக, செந்தமிழ் நாட்டின் உரிமைகளைக் காப்பதற்காக நான் என்னையே அர்ப்பணம் செய்து கொண்டவன். எனக்கு 82 வயதாகிறது. ஐந்தரை வருடம் சிறையில் இருந்திருக்கிறேன். 6500 கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன். இதே இடத்தில் நான் உண்ணாவிரதம் இருந்தேன். காலை 8 மணிக்கு உண்ணாவிரதத்தை தொடங்கினால், மாலை 5 மணி வரை ஒரு சொட்டு தண்ணீர் குடிக்க மாட்டேன்.
ஏன் குடிக்க மாட்டேன் என்றால், எதிலும் குற்றம் கண்டுபிடிக்கின்ற எனது நல்ல நண்பர்கள், என் மீது மிகவும் பாசம் கொண்ட நண்பர்களுக்கு என்னை பற்றி இரண்டு சொற்கள் அவதூறாகப் பேசினால்தான் அவர்களுக்குத் தூக்கம் வரும். டம்ளரில் என்ன வைத்துக் குடித்தார் தெரியுமா? அதில் இளநீர் இருந்தது. குளுகோஸ் வைத்துக் குடித்தார் என்று இரண்டு பேர் பேசுவார்கள், எழுதுவார்கள். இதற்காக மேடையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட நான் குடிக்க மாட்டேன்!
என் அம்மாவும், மகன் தண்ணீர் குடிக்கவில்லையே! நாம் ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும்? என்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட எனது தாயாரும் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். பிரபாகரன் மகன் பச்சிளம் பாலகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டதைக் கண்டித்தும், கலிங்கப்பட்டி மதுக்கடையை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் காலை 7 மணிக்கு எங்கள் ஊர் பெண்களை எல்லாம் அமர வைத்து, ஒரு சொட்டு தண்ணீர்கூட குடிக்காமல் இருந்து, மிகவும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு அவரை சென்ற போது, இனிமேல் உங்கள் தாயாரும் உண்ணாவிரதம் இருந்தால், அவரது உயிருக்கு ஆபத்து என்றார்கள். அதன் பிறகும் உண்ணாவிரதம் இருந்தார்கள். மூன்றாவது மாதம் இறந்துவிட்டார்கள். இந்த நாட்டுக்காக உயிரைக் கொடுத்த வீரத்தாயான என்னுடைய தாய் மாரியம்மாள். அவர் இதே இடத்தில் இரண்டு முறை வந்து என்னுடன் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். நாங்கள் பொதுநலனுக்காகத்தான் பாடுபடுகிறோம்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையிலிருந்து, கூடலூர் கம்பம் பள்ளத்தாக்கைத் தாண்டி அனைத்து இடங்களிலும் காட்டுப் பன்றிகள் விவசாயத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன. மலை அடிவாரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் வரை காட்டுப் பன்றிகள் வந்துவிட்டன. அதைக் கொன்றால் சிறையில் தள்ளிவிடுவார்கள். சட்டம் அப்படித்தான் சொல்கிறது. காட்டுப் பன்றிகளை விவசாயிகள் கொல்ல வேண்டும் என்றால், காட்டு விலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப் பன்றிகளை ஒன்றிய அரசு நீக்க வேண்டும். அப்பொழுதுதான் விவசாயிகளைக் காப்பாற்ற முடியும், காட்டுப் பன்றிகளை அழிக்க முடியும். தமிழ்நாடு அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு இதற்குத் தீர்மானம் கொண்டு வந்து, ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அந்தச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். விவசாயிகளைத் திரட்டிக் கொண்டு சென்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்து, காட்டுப் பன்றிகளின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்று முறையீடு செய்வதற்கும் நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
செண்பகவல்லி அணை 130 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுவதற்கு செண்பகவல்லி அணை தண்ணீர் தந்தது. செண்பகவல்லி அணையில் தண்ணீர் வந்தால்தான் உள்ளாறு அணையைக் கட்ட முடியும் என்று பொதுப்பணித் துறை அறிக்கை கொடுத்திருக்கிறது. நான்கு முறை கேரளத்திற்குச் சென்று இதற்காக முறையிட்டிருக்கிறேன்.
உம்மன்சாண்டி முதல்வராக இருந்தபோது, நானும், எங்கள் கட்சி முக்கியத் தலைவர்களும் சென்று அவரைச் சந்தித்தபோது, செண்பகல்லி அணை கோரிக்கை நியாயமானது. அதை நாங்கள் பழுது பார்த்துக் கொடுத்து விடுகிறோம் என்றார். இதனால் காமராஜர் காலத்தில் அணை பழுதடைந்த போது உடனே காமராஜர் கேரள அரசோடு தொடர்பு கொண்டு செப்பனிட்டு சரி செய்து விட்டார். பின்பு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் அது உடைந்தபோது, அதைச் சரி செய்வதற்கு 12 இலட்சம் ரூபாயை எம்.ஜி.ஆர். கேரள அரசுக்கு அனுப்பி வைத்தார். அணையை சரி செய்யாமலேயே இரண்டு வருடம் கழித்து கேரள அரசு அந்தப் பணத்தை திருப்பி அனுப்பிவிட்டது.
(தொடரும்..)






