மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்களை 22.06.2026 அன்று மாலை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, மூன்று முக்கிய கோரிக்கைக் கடிதங்களை வழங்கி அதன் அவசியத்தை துரை வைகோ எம்.பி., விரிவாக எடுத்துரைத்தார்.
திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா அரசு மருத்துவமனை தற்போது மிகவும் பழுதடைந்து, பயன்படுத்தவே தகுதியற்ற நிலையில் உள்ளதால் புதிய மருத்துவமனை கட்டடங்கள் கட்டப்படுவது மிகவும் அவசியமாகிறது. இந்த அரசு மருத்துவமனையை துரை வைகோ எம்.பி., இருமுறை ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 04.01.2025 அன்று இம்மருத்துவமனையில் நேரடி முதல் கள ஆய்வு மேற்கொண்டபோது, அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை, பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ள கட்டடங்கள், 3-பேஸ் மின்சார இணைப்பில் 2-பேஸ் மட்டுமே செயல்படும் நிலை, கழிவு நீர் வெளியேற்றப் பாதை சரியாக இல்லாததால் பிணவறை மற்றும் கழிவறைகள் செயல்பாட்டுக்கு வராத நிலை உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, இதனால் அடிப்படை மருத்துவ சேவைகளைக் கூட திறம்பட செய்ய முடியாத சூழல் நிலவுவதாகவும், மருத்துவமனையை விரிவுபடுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அன்றைய சுகாதார துறை சார்ந்த அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி., தெரிவித்தார். அதன் பிறகு நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட DISHA கூட்டத்திலும் விரிவாக விளக்கி கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், இதுவரை கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையை எடுத்துரைத்து, இனியும் காலம் தாழ்த்தாமல் ஏழை எளிய கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் இம்மருத்துவமனையைப் புதிய கட்டடங்களுடன் முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் எனக் கோரி, கடந்த 04.06.2026 அன்று மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களைச் சந்தித்து துரை வைகோ எம்.பி., கோரிக்கை வைத்தார்.
அதன் அடிப்படையில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், கடந்த 06.06.2026 அன்று மீண்டும் கந்தர்வக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று இரண்டாவது முறையாக ஆய்வு மேற்கொண்டார். முன்பை விட மோசமான நிலையில் இருக்கும் மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அதிகாரிகள் கொண்டு வந்த வரைபடத்தில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியும், தேவையான மாற்றங்களுக்கான ஆலோசனைகளை வழங்கியதையும் துரை வைகோ எம்.பி., அமைச்சரிடம் கூறியுள்ளார்.
அதே நேரம், தற்போதைய இடத்திலேயே மருத்துவமனை புதிய கட்டடங்கள் கட்டப்பட்டால் மருத்துவ பயனாளிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும் என்பதால், இப்போதுள்ள மருத்துவமனைக்கு அருகிலேயே நாங்கள் அடையாளம் காட்டிய அரசு நிலத்தில் புதிய மருத்துவக் கட்டடங்களை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்த நிலம் இரண்டு ஏக்கருக்கு அதிகமான இடமுள்ள நிலம் என்பதாலும் இதனை தேர்வு செய்து, சுகாதாரத்துறை அதிகாரிகளிடமும் மற்றும் மாவட்டம் ஆட்சியரிடமும் ஒப்புதல் பெற்றுள்ளதையும் அமைச்சரிடம் எடுத்துரைத்தார். மருத்துவ பயனாளிகளுக்கு மேம்பட்ட சிகிச்சை வசதிகள் கிடைக்கவும், மருத்துவ சேவைகள் விரிவடையவும், புதிய கட்டடங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையை விரிவான வசதிகளுடன் புதிய இடத்திற்கு மாற்றி அமைக்க கோரிக்கை மனு வழங்கினார். தற்போது பழைய கட்டடங்களில் இயங்கி வரும் மருத்துவமனைக்கு போதிய விரிவாக்க வசதி இல்லாததுடன், போக்குவரத்து நெரிசல் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் சிரமங்களும் மக்களை பாதித்து வருகின்றன. எனவே, எதிர்கால மருத்துவத் தேவைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில் புதிய இடத்தில் அனைத்து வசதிகளுடனும் மருத்துவமனையை அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்திற்குட்பட்ட வில்லிசேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அங்கு கூடுதல் கழிப்பறை வசதிகள், சுற்றுச்சுவர், கூடுதல் மருத்துவர் மற்றும் அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதை சுட்டிக்காட்டி கோரிக்கை மனு அளித்தார். கிராமப்புற மக்களுக்கு தரமான மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், இந்த அடிப்படை தேவைகளை உடனடியாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
மக்களின் மருத்துவ நலனே முதன்மை என்ற அடிப்படையில், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரை அனைவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த கோரிக்கைகளை முன்வைத்து விரிவாக விளக்கமளித்தார். அனைத்துவிவரங்களையும் கேட்டுக்கொண்ட அமைச்சர் அவர்கள் கோரிக்கையின் அத்தியாவசியத்தை புரிந்து கொண்டு விரைந்து இதற்கான பணிகளை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
வாரம் தோறும் வெளியாகும் மறுமலர்ச்சி தி மு க அதிகார பூர்வ வார ஏடு 'சங்கொலி' (இதழ் நாள்: 03.07.2026).






