ஒரு கரப்பான் பூச்சியை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நையாண்டி இயக்கம் பிடிவாதமானது, வெறுக்கப்படுவது, ஆனால் அழிக்க முடியாதது என்று கருதப்படும் அந்தப் பூச்சியிலிருந்து ஊக்கமடைந்த இந்தக் குழு ஒரு வாரத்திற்குள் கோடிக்கணக்கான ஆன்லைன் ஆதரவாளர்களையும், முக்கிய ஊடகங்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதனால் அனுபவமிக்க அரசியல்வாதிகள்கூட அதைப் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
இந்த கரப்பான் பூச்சி மே மாதம் மூன்றாவது வாரத்தில் திடீரென அரசியல் விவாதத்தின் மையமாக மாறியது. இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு விசாரணையின் போது, வேலைவாய்ப்பின்றி பத்திரிகைத் துறையிலும் சமூகச் செயற்பாட்டிலும் ஈடுபடும் இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுக்கும் ஓட்டுண்ணிகளுக்கும் ஒப்பிட்டதாக கூறப்பட்டது.
பின்னர் அவர் விளக்கம் அளித்தபோது, "போலி மற்றும் தகுதியற்ற பட்டங்கள் பெற்றவர்களையே" குறிப்பிட்டதாகவும், இந்திய இளைஞர்களை ஒட்டுமொத்தமாக விமர்சிக்கவில்லை என்றும் தெரிவித்தார். ஆனால் அதற்குள் அந்தக் கருத்து சமூக வலைதளங்களில் பரவலாகப் பரவி, கோபத்தையும் கிண்டலையும் உருவாக்கியது.
அதன் விளைவாகவே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party) (CJP) எனப்படும் ஒரு நகைச்சுவை அரசியல் முயற்சி தோன்றியது. அதன் பெயர், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கட்சியை நையாண்டி செய்யும் வகையில் அமைந்தது. பத்திரிகைச் சுதந்திரமும் குடிமக்கள் உரிமைகளும் பாஜக ஆட்சிக் காலத்தில் குறைந்து விட்டதாக விமர்சகர்களும் மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டுகின்றன; ஆனால் பாஜக இதை மறுக்கிறது.
CJP ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி அல்ல. இது அரசியல் நையாண்டியை அடிப்படையாகக் கொண்ட ஆன்லைன் இயக்கமாகும். இதன் உறுப்பினர் தகுதிகளில் "வேலையில்லாதவர், சோம்பேறி, எப்போதும் இணையத்தில் இருப்பவர் மற்றும் தொழில் முறை அளவில் குறை கூறும் திறன் கொண்டவர்" என்பவையும் நகைச்சுவையாக இடம் பெற்றுள்ளன. இந்த இயக்கத்தை உருவாக்கியவர் அபிஜீத் திப்கே. அவர் அரசியல் தகவல் தொடர்பு நிபுணரும், பாஸ்டன் பல்கலைக் கழகம் (Boston University) மாணவருமாவார்.
"இது முதலில் ஒரு வேடிக்கையான யோசனையாகத்தான் தோன்றியது." என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா செல்லும் முன், அவர் ஆம் ஆத்மி கட்சியுடன் பணியாற்றியிருந்தார். சமுக ஊடகங்களில் வலுவான இருப்புக்காக அறியப்படும் அந்தக் கட்சி, ஒரு தசாப்தத்திற்கு முன் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திலிருந்து உருவானது.
"எல்லோரும் ஒன்றாக வந்து ஒரு தளத்தை உருவாக்கலாம் என்று நினைத்தேன்." என்று அவர் கூறினார். ஆனால் அதன் பிறகு நடந்தது அவர் எதிர்பார்த்ததை விட மிகப் பெரியது. சில நாட்களிலேயே, கூகுள் படிவம் மூலம் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக பதிவு செய்தனர். (#MainBhiCockroach) ("நானும் ஒரு கரப்பான் பூச்சிதான்") என்ற ஹேஷ்டேக் பிரபலமானது. எதிர்க்கட்சித் தலைவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த இயக்கம் இணையத்தைத் தாண்டியும் பரவியது. சில இளைஞர்கள் கரப்பான் பூச்சி வேடமணிந்து சுத்தம் செய்யும் பணிகளிலும் போராட்டங்களிலும் பங்கேற்று, அந்த அடையாளத்தை நகைச்சுவையாக ஏற்றுக்கொண்டனர்.
ஒரு வாரத்தில், CJP-யின் இன்ஸ்டாகிராம் கணக்கு 1 கோடி (10 மில்லியன்) பின் தொடர்பவர்களைத் தாண்டியது. இது உலகின் மிகப்பெரிய உறுப்பினர் அடிப்படையைக் கொண்ட அரசியல் கட்சியாகக் கூறப்படும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கான 8.7 மில்லியன் பின்தொடர்பவர்களைவிட அதிகமாகும்.
ஆனால் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் கொண்ட அதன் X கணக்கு தற்போது இந்தியாவில் காணப்படவில்லை. அதைப் பார்க்க முயற்சிப்பவர்களுக்கு, "சட்டப் பூர்வ கோரிக்கைக்கு இணங்க மறைக்கப்பட்டுள்ளது" என்ற செய்தி காட்டப்படுகிறது.
CJP-யின் வேகமான வளர்ச்சி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இருப்பினும், இது இந்திய அரசியலில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற ஆதாரங்கள் தற்போது இல்லை. சமூக ஊடகங்களில் இது பல கட்சிகளை முந்தியிருந்தாலும், பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் இன்னும் நாட்டின் முக்கிய அரசியல் சக்திகளாகவே உள்ளன. இருப்பினும், CJP-யின் தாக்கம் தொடர்ந்து வளர்கிறது.
ஆதரவாளர்களுக்கு, CJP என்பது "புதிய காற்றின் சுவாசம்" போன்றது. பலர் இந்திய அரசியல் சூழலை மிகுந்த கட்டுப்பாட்டுடனும், எதிர்ப்புகளுக்கு விரோதமானதாகவும் கருதுகின்றனர். மறுபுறம், விமர்சகர்கள் இதை வெறும் இணைய அரசியல் நாடகமாகவே பார்க்கின்றனர். திப்கேவின் ஆம் ஆத்மி கட்சி தொடர்பை சுட்டிக்காட்டி, இது தன்னிச்சையான மக்கள் எழுச்சி அல்ல; திட்டமிட்ட டிஜிட்டல் அரசியல் முயற்சி என்று கூறுகின்றனர்.
இதனைத் தாண்டி, CJP இந்திய இளைஞர்களின் விரக்தியின் அடையாளமாக மாறியுள்ளது. அரசியல் விவாதங்கள் எங்கும் காணப்பட்டாலும், தங்களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை என்ற உணர்வு பல இளைஞர்களிடம் உள்ளது.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களில் சுமார் பாதியினர் 30 வயதுக்குக் குறைவானவர்கள். இருந்தாலும், அரசியல் பங்கேற்பு குறைவாகவே உள்ளது. சமீபத்திய ஒரு ஆய்வின்படி, 29% இளைஞர்கள் அரசியல் செயல்பாடுகளை முற்றிலும் தவிர்க்கின்றனர்; வெறும் 11% பேரே ஏதேனும் அரசியல் கட்சியின் உறுப்பினர்களாக உள்ளனர்.
"மக்கள் தங்களின் குரல் கேட்கப்படுவதில்லை, தங்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை என்று உணர்கிறார்கள்," என்று திப்கே கூறுகிறார்.
தென் ஆசியாவின் பல நாடுகளில் சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டங்கள் அரசுகளை வீழ்த்தியுள்ளன. இலங்கை, நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு மற்றும் எதிர்காலம் குறித்த கவலைகள் இத்தகைய போராட்டங்களுக்கு காரணமாக இருந்தன.
இந்தியா இதுபோன்ற நிலையை இதுவரை சந்திக்கவில்லை. ஆனால் வேலைவாய்ப்பு, சமத்துவமின்மை மற்றும் வாழ்வாதாரச் செலவுகள் குறித்த அச்சங்கள் இங்கும் காணப்படுகின்றன.
"Gen Z தலைமுறை பாரம்பரிய அரசியல் கட்சிகளை கைவிட்டுவிட்டது. அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் தங்களுக்கான அரசியல் தளத்தை உருவாக்க விரும்புகிறார்கள்," என்று திப்கே கூறுகிறார்.
CJP-யின் இணையதளம் ஒரு அரசியல் அறிக்கையைப் போல இல்லாமல், இணைய கலாச்சாரத்தால் வடிவமைக்கப்பட்ட ஒன்றைப் போல தெரிகிறது. "சோம்பேறிகளின் மற்றும் வேலையில்லாதவர்களின் குரல்" என்று தன்னை விவரிக்கிறது. "பூஜ்யநிதியுதவி, ஒரு பிடிவாதமான கூட்டம்" என்று கூறி, "எல்லாம் நன்றாக இருக்கிறது என்று நடிப்பதில் சோர்ந்து போனவர்களை" இணைந்து கொள்ள அழைக்கிறது.
இதில் நகைச்சுவை அதிகமாக இருந்தாலும், பொறுப்புணர்வு, ஊடக சீர்திருத்தம், தேர்தல் வெளிப்படைத்தன்மை, பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் போன்ற அரசியல் கோரிக்கைகளும் உள்ளன.
கரப்பான் பூச்சி என்ற சின்னமும் பொருத்தமாகவே உள்ளது என்று பலர் கூறுகின்றனர். அது வீரத்திற்கோ பெருமைக்கோ அடையாளமல்ல; ஆனால் கடினமான சூழல்களிலும் உயிர்வாழும், தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்ட உயிரினமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், இந்தப் போக்கு இணையமீம்களாலும், ஹேஷ்டேக்களாலும் இயக்கப்படும் "கரப்பான் பூச்சி அரசியல்" வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது.
இது நீண்ட காலம் நீடிக்குமா அல்லது விரைவில் மறைந்துவிடுமா என்பது தெரியாது. ஆனால் CJP ஏற்கனவே ஒரு விஷயத்தை சாதித்துவிட்டது; இந்தியாவின் சில இளைஞர்களுக்கு, குறைந்தபட்சம் ஒரு கணம் என்றாலும், "நாங்கள் கவனிக்கப்பட்டோம்" என்ற உணர்வை வழங்கியுள்ளது.
முந்தைய காலங்களில் இளைஞர்களின் அரசியல் கோபம் அறிக்கைகள் மற்றும் இயக்கங்களாக வெளிப்பட்டது. 2026-இல், அது சில நேரங்களில் கரப்பான் பூச்சி சின்னம் கொண்ட மீம்-அரசியல் இயக்கங்களாக வெளிப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சியின் ஆதரவாளர்கள் சார்பில் ஜூன் 6, 2026 அன்று பிரம்மாண்ட கண்டனப் போராட்டம் நடைபெற்றது. நாட்டின் கல்வி முறையில் நிலவி வரும் குளறுபடிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறைகேடு புகார்களுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பள்ளி-கல்லூரி மாணவர்கள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
காலை முதலே ஜந்தர் மந்தர் பகுதியில் குவியத் தொடங்கின போராட்டக்காரர்களின் எண்ணிக்கை, நேரம் செல்லச் செல்ல அதிகரித்துக் கொண்டே சென்றது. இந்தப் போராட்டட்டத்தில் பங்கேற்றவர்களில் சிலர் செய்தியாளர்களிடம், "தொடர்ந்து அரங்கேறி வரும் தேர்வு முறைகேடுகள், தேர்வு முடிவுகளில் நீடிக்கும் குளறுபடிகள் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பற்ற போக்கு ஆகியவை தற்போதைய கல்வி முறையின் மீதான தங்களின் நம்பிக்கையை முற்றிலுமாக சிதைத்துவிட்டது. மேலும், ஆளுங்கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் என இருதரப்புமே இளைஞர்களின் எதிர்காலம் சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிப்பதில்லை" எனக் குற்றம் சாட்டினர்.
இந்த CJP-யின் நிறுவனரான அபிஜீத் திப்கே போராட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில், "எங்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காமல், எங்களது சமூக ஊடகப் பக்கங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதிலேயே மத்திய அரசு முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது. தேர்வு முறைகேடுகள் மற்றும் அரசுப் பணி நியமனத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் தொடரும்" என எச்சரித்தார்.
டெல்லியில் போராட்டம் நடத்திய CJP அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்க வந்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) தேசிய செயலாளர் ஆனி ராஜா மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் (NFIW) பொதுச்செயலாளர் நிஷா சித்து உள்ளிட்ட தலைவர்கள் மீது ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த கண்டனப் போராட்டம் இறுதியில் அமைதியான முறையில் நிறைவடைந்தது. எனினும், போராட்டத்தின் போது இருவேறு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கல்வித் துறையின் சீர்கேடுகளுக்கு எதிராக மாணவர் சமூகமும் திரண்ட இந்த போராட்டம், தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



