செவ்வாய், 14 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்

இலட்சக்கணக்கான மாணவர்களை கட்டணம் வாங்காமல் பட்டதாரிகளாக உயர்த்திய மாமனிதர் துளசி ஐயா வாண்டையார்! வைகோ புகழாரம்

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், பூண்டி கி. துளசி ஐயா வாண்டையாரின் கல்விச் சேவை, கொடை மனம், ஒழுக்கம் மற்றும் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்து புகழாரம் சூட்டினார். கட்டணம் இன்றி இலட்சக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக்கிய அவரது அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், மாணவர்கள் உயர்ந்த இலட்சியங்களுடனும் சமூகப் பொறுப்புணர்வுடனும் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 17.05.2026 அன்று பூண்டி கி.துளசி ஐயா வாண்டையார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் தொடர்ச்சி வருமாறு:

கப்பல் படை என்று சொன்னேனே, சிங்களக் கடற்படையில் ஆறாயிரம் டன் எடையுள்ள கப்பல் ஆயுதங்களோடு கடலில் நெடுந்தொலைவில் அசைந்தாடிக் கொண்டு நின்றது. அங்கயற்கண்ணி அந்தக் கப்பலைத் தகர்ப்பதற்காக அனுப்பப்பட்டவள். தோழிப் பெண்கள் உடன் இருந்தவர்கள் எல்லோரும் வழி அனுப்பி வைக்க, உடல் முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு அவர் நீந்திக் கொண்டே கப்பலை நோக்கிச் சென்றார். தன்னந்தனியாக கப்பலின் மீது போய் அவள் மோதினாள். ஆறாயிரம் டன் எடை கொண்ட சிங்களவனுக்கு ஆயுதம் ஏந்தி வந்த கப்பல் தீப்பற்றி எரிந்தது. படார் படார் என்று வெடித்தது. கடற்கரையிலிருந்த அங்கையற்கண்ணியின் தோழிகளுக்கு ஒரு பக்கத்தில் கப்பல் தீப்பற்றி எரிவது மகிழ்ச்சி, மற்றொரு பக்கத்தில் அதோடு கருகி சாம்பலாகிப் போனாளே அங்கயற்கண்ணி என்று அவர்கள் கண்ணீர் விட்டார்கள்.

அந்த அங்கயற்கண்ணிக்கும் சேர்த்து படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்கள், தமிழ்ப் பெண்களுக்கு வீர வணக்கம் செலுத்துகின்ற நாள்தான் இந்த மே 17. நான் வழக்கமாக சென்னை கடற்கரையில் என் தம்பி திருமுருகன் காந்தி ஏற்பாடு செய்கின்ற மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சியில் ஆண்டுதோறும் கலந்துகொள்கிறவன். ஆனால், நம்முடைய ஐயா பெரிய வாண்டையார் துளசி ஐயா வாண்டையார் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்று கூறியபோது, கடமையாக ஏற்று இங்கே நான் வந்தேன். அவர் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது.

ஒரு சிறிய சம்பவத்தைச் சொல்கிறேன், திருமணமாகி சில ஆண்டுகள் ஆனபின்பு கணவனும், மனைவியுமாக மார்க்கண்டேயன் தலமாக இருக்கக்கூடிய திருக்கடையூருக்குச் சென்று வழிபட்டால், பூஜை புனஸ்காரம் செய்தால், தேனாபிஷேகம், பாலாபிஷேகம், சந்தனபிஷேகம் செய்தால் பல ஆண்டுகள் கணவனும், மனைவியும் இணை பிரியாமல் உயிர் வாழலாம் என்ற நம்பிக்கையில் இன்றைக்கும் சென்ற வண்ணம் இருக்கிறார்கள். பெரிய வாண்டையார் அங்கே என்னை அழைத்தார். நான் சென்றேன். பக்கத்தில் உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். அவரது மகனுக்கு 60 ஆவது திருமண நாள். அவரது மகனும், மருமகளும் வந்து மார்க்கண்டேயனின் தவக் கோலத்தை தரிசித்து விட்டு வந்து பெரிய வாண்டையார் பாதம் பணிந்து வணங்கினார். பூக்களை அள்ளித் தூவினார். அதோடு அவர் நிற்கவில்லை. அவர்களைப் பார்த்து பக்கத்தில் உட்கார்ந்திருக்கக்கூடிய எந்த வகையிலும் தகுதியற்றவனான அடியேன் தாழ்பணிந்து வாழ்த்துப் பெற வேண்டும் என்று சொன்னபோது, நான் திடுக்கிட்டுப் போய், வேண்டாம் ஐயா என்றேன். இல்லை, நீங்கள் ஒரு இலட்சியத்திற்காக வாழ்கிறீர்கள். உங்களுக்கு அந்தத் தகுதி இருக்கிறது, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுங்கள் என்றார். அது முடிந்தது. வெளியே வந்தோம்.

அவரது காரில் என்னை அருகில் அமர வைத்தார் பெரிய வாண்டையார். துளசி ஐயா வாண்டையார் காரில் எந்தத் தலைவரையும் தன் பக்கத்தில் உட்கார வைத்தது இல்லை. அவர் போற்றிய கட்சியின் பெரிய தலைவர் வேண்டுமானால் அந்தக் காரில் போகலாம். அது தவிர்த்து அவர் காரில் யாரையும் ஏற்றியது இல்லை. இன்றைக்கு உங்களைப் பக்கத்தில் உட்கார வைத்து இந்த திருக்கடையூர் வீதிகளில் வருகிறார் என்று பல பேர் கூறினார்கள். இவ்வளவு தகுதியை எனக்குத் தருகிறாரே இந்த மாமனிதர் என்று எண்ணினேன்!

அவர் தலைசிறந்த எழுத்தாளர். ஏற்காட்டில் மான்போர்டு பள்ளியில் ஆங்கிலத்தில் படித்து விட்டு, லயோலா கல்லூரியில் முதுகலை பட்டம் பெற்று, ஆங்கிலம், சமஸ்கிருதம், வடமொழி, செந்தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்த காரணத்தால் தமிழில் எண்ணற்ற நூல்களை கே.டி.வி என்று எழுதியிருக்கிறார். மகேந்திரன் என்ற பெயரில் எழுதினார். ஆங்கிலத்தில் Melodies Harmony என்று இசை நுணுக்கங்களைக் குறிப்பிட்டு எழுதினார். இன்ப வாழ்வு என்ற நூலை எழுதினார். மனோரஞ்சிதம் என்ற நூலில் சிறுகதைகளாகத் தொகுத்திருப்பார். படித்துப் பாருங்கள் முதல் கதையே மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.

பெண்மனம் அதில் முருகப்பருடைய மகள் சகுந்தலா, பக்கத்து வீட்டில் இருக்கின்ற ஏழை வீட்டுப் பையன் சுந்தரத்தை மாடியிலிருந்து ஒரு நாள் காலையில் பார்க்கிறாள். அவன் அந்த அழகு தேவதையாக இருக்கக்கூடிய சகுந்தலாவைப் பார்க்கிறான். ஒருவர் கண்ணை இன்னொருவர் பார்த்தனர். கண்கள் பரிமாறிக் கொண்டன. எண்ணங்கள் பரிமாறிக் கொண்டன. இது நாள்தோறும் நடந்து வந்தது. அவர்கள் உள்ளங்களில் காதல் அரும்பியது. நம்முடைய வாண்டையார் அவர்கள் இதை மிக அற்புதமாக, உணர்ச்சிகரமாக அந்தக் கதையை எழுதியிருப்பார். தன் மகள், ஏழை வீட்டுப் பையன் சுந்தரத்தையா காதலிக்கிறாள் என்று முதலில் தடை போட்டார். பின்னர் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவம் நடந்து முடிந்தவுடன் அவர்கள் காதலை ஏற்றுக் கொள்கிறார். மனோரஞ்சிதம் நூலில் வாண்டையார் எழுதிய முதல் கதை.

இப்படி எண்ணற்ற சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவர் குரல் கொடுக்கும் வானம்பாடி என்று ஒரு நூலை எழுதினார். யோகதவரம் என்கின்ற நூலை எழுதினார். இப்படி எண்ணற்ற நூல்களை அவர் எழுதி இப்பொழுது நூலகங்களுக்கு எல்லாம் அனுப்பப்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான நூல்களை அவரது கல்லூரி நூலகத்தில் வைத்திருக்கிறார். அப்படி நூல்களை நேசிப்பவர்.

"The heights by great men reached and kept were not attained by sudden flight, but they while their companions slept, were toiling upward in the night."

உயர்ந்த சிகரங்களுக்குச் செல்கின்ற மாபெரும் தலைவர்கள், உயர்ந்த இடங்களுக்குச் சென்றவர்கள், திடீரென்று அந்த இடத்துக்கு அவர்கள் வந்துவிடவில்லை. சகாக்கள் தூங்குகிறபோது, சக மாணவிகள் தூங்குகிறபோது, இவர்கள் இரவெல்லாம் கண் விழித்துப் படித்துக் கொண்டிருந்தார்கள். எனவே சிகரங்களின் உச்சங்களுக்குச் சென்றவர்கள் திடீரென்று சென்றுவிடவில்லை. மற்றவர்கள் துயில் கொள்ளும் வேளையிலும்கூட அவர்கள் கற்றுத் தேர்ந்ததால், அந்த உயர்ந்த இடங்களுக்குச் செல்ல முடிந்தது என்று லாங்ஃபெலோ எழுதிய கவிதையைத்தான் என் கல்லூரி நோட்டுப் புத்தகத்தில் நான் பதிவு செய்திருந்தேன். (இதழில் வால்ட்மிட்மென் எனத் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது)

துளசி ஐயா வாண்டையார் அவர்கள் வெள்ளிக்கிழமையன்று உணவு அருந்த மாட்டார். வெள்ளிக்கிழமையன்று யாரிடமும் பேச மாட்டார். ஏன் தெரியுமா? 1948 ஆம் வருடம், ஜனவரி மாதம் 30ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம்போல பகவத் கீதையின் சில வரிகளை எடுத்து அந்த பஜனை பாடல்களில் சேர்த்து வாசிக்கிறார் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. அந்த வாசகங்கள் ஆச்சரியமாக இருக்கும். பிறப்பவர்களுக்கு எல்லாம் இறப்பு நிச்சயம். இறப்போர்க்கெல்லாம் பிறப்பு நிச்சயம். இதைக் காலையில் வாசிக்கின்றார். மாலை 5 மணி 5 நிமிடம் ஆகிறது. பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும், வல்லபாய் படேலுக்கும் இடையில் மனப்போர்; பிணக்கு, சமாதானம் செய்து வைக்கிறார் காந்தி. நேரமாகிவிட்டது, மாலை 5.10 மணி ஆகப்போகிறது, நான் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று பிர்லா மாளிகையில் நடைபெறும் பிரார்த்தனைக் கூட்டத்திற்காக பெயர்த்திகளின் தோள்களில் கை போட்டுக் கொண்டு வேகமாக வருகிறபோது, எதிரே வந்து நாதுராம் விநாயக கோட்சே என்ற கொடியவன் நிற்கிறான். கைகூப்பி வணங்குகிறார். காந்தியார் பதிலுக்கு வணங்குகிறார். நேரம் ஆகிவிட்டது என்று சொல்ல ஆரம்பிக்கிறார். அவன் இடுப்பில் சொருகியிருந்த கைத் துப்பாக்கியை எடுத்து மூன்று முறை சுட்டான். மூன்று குண்டுகள் பாய்ந்தன. இரத்தம் சொட்டச் சொட்டக் கீழே விழுந்து அந்தக் கணத்திலேயே மாண்டு போனார் உலக உத்தமர் மகாத்மா காந்தி. அந்த நாள் வெள்ளிக்கிழமை!

நம்முடைய துளசி ஐயா வாண்டையார் பெயருக்குக் காங்கிரஸ்காரர் அல்ல. எந்த இயக்கத்தை நேசித்தாரோ, எந்த இயக்கத்திற்காக வாழ்நாளில் பாடுபட்டாரோ, அந்த இயக்கம் போற்றுகின்ற உலக உத்தமர் கொல்லப்பட்ட நாளில் உணவு அருந்துவது இல்லை. யாரிடமும் பேசுவது இல்லை. இதைக் கடைபிடிக்கக்கூடிய மனப் பக்குவம் அவருக்கு இருந்தது.

பொன்னியின் செல்வன் குறித்து நான் ஒன்றரை மணி நேரம் உரையாற்றினேன். உரை அவருக்கு சலிப்படைந்தால் என்ன செய்வாராம், தோளில் கிடக்கின்ற துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொள்வாராம்! நான் பேசும்போது அப்படி துண்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டாரா? என்று கேட்டேன். இல்லை, அசையாமல், வைத்த கண் மாறாமல் கேட்டுக் கொண்டே இருந்தார். அப்படி கேட்டுக் கொண்டு இருந்தது மட்டுமல்ல, பொன்னியின் செல்வனில் வருகின்ற அருமையான காட்சி, அவர் அரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார். எல்லோரும் வந்து வாழ்த்துகிறார்கள், புகழ்கிறார்கள். அனைத்துக் கவிஞர்களும் புகழ்ந்த பின்பு இவர் இன்னொரு கவிதை இருக்கிறது என்று முக்கண் முதல்வோனைக் காப்பதற்கான காட்சியை, தேவேந்திரனை காப்பதற்கான காட்சியை வர்ணித்துவிட்டு, அதைவிட முக்கியமான காட்சி இதோ காலன், எமதர்மன் வந்துவிட்டான், அவன் என்னை நோக்கி வருகிறான் என்று அந்தப் பாடலை அவர் சொல்லி முடித்தார். கவிஞர்கள் பாராட்டுவது புகழுக்காக என்றபோது, ஆதித்த கரிகாலனின் தூதனாக வந்த வானர்குல வீரன் வந்தியத்தேவன், சக்கரவர்த்தியைப் பார்த்து கவிஞர்கள் உண்மையாகத்தானே பாராட்டி இருக்கிறார்கள் என்று சொல்ல, அருகில் இருந்த சுந்தரசோழனின் துணைவியார் பேரரசி, இந்தப் பிள்ளையின் நாக்கில் சரஸ்வதி குடியேறி இருக்கிறாள் என்று சொன்னதாக கல்கி எழுதியிருப்பார்.

பொன்னின் செல்வன் காட்சிகளை எல்லாம் நான் வர்ணித்து ஆதித்த கரிகாலன், பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளால் கொல்லப்பட்ட கல்வெட்டு இன்றைக்கும் பெயரோடு இருக்கிறது. அவர் கொல்லப்பட்ட பின்பு நடைபெற்ற சம்பவத்தையும் குறிப்பிட்டேன். சபை கூடியது. சக்கரவர்த்தி சுந்தரசோழன் அமர்ந்திருக்கிறார். மூத்த மகன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை கட்டி தந்தையை அழைத்துக் கொள்ள விரும்பியவன், வடதிசை சென்று பழைய கரிகாலனைப் போல வெற்றி பெற வேண்டும் என்று அவன் பாட்டன் சொல்லிக் கொடுக்க, ஆதித்த கரிகாலன் கொலை செய்யப்பட்டுவிட்டது நடந்த சம்பவம்.

பழுவேட்டராயர்கள், சிற்றரசர்கள் இங்கே அதிகமாக இருந்தார்கள். அப்படிப்பட்ட படைத் தலைவர்களின் குடும்பங்களில் ஒன்றுதான் வாண்டையார் அவர்களின் குடும்பம். வேலூரில் இருக்கக்கூடிய அருங்காட்சியகத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் கரிகாலனின் படைத்தலைவர்களில் ஒருவராக தொம்மை பூண்டி என்ற ஒரு பெயர் செதுக்கப்பட்டு இருக்கின்றது. பூண்டியில் இருக்கக் கூடிய இந்த வாண்டையார்கள் சோழ மன்னர்கள் காலத்தில் படைத்தலைவர்களாக இருந்தார்கள் என்பதற்கு இது சாட்சி என்று சொல்லப்பட்டு இருக்கிறது.

கரிகாலன் கொலைக்கு வந்தியத்தேவன் காரணம் என்று சபையில் குற்றம் சாட்டப்பட்டான். பெரிய பழுவேட்டராயர் 66 போர்க்களங்களில் பங்கேற்று 96 விழுப்புண்களைப் பெற்றவர்தான், எழுந்து நின்றார். சபை அமைதியாக இருந்தது. ஆதித்த கரிகாலனின் கொலைக்கு வந்தியத்தேவன் காரணம் அல்ல. அந்தக் கொலையை தடுத்து நிறுத்த வேண்டிய நான் வேட்டை மண்டபத்திற்குள் சென்றுவிட்டேன். நான் தடுக்கத் தவறி விட்டேன். சோழ மன்னர்களுக்கு உயிர் கொடுப்போம் என்ற எங்கள் சத்தியத்தை, சபதத்தை நான் நிறைவேற்றவில்லை. ஆகவே அந்தப் பழிக்கு ஆளாகி இருக்கக்கூடிய நான் எனக்கு நானே தண்டனை கொடுக்க வேண்டும் என்றார். அவரது உடன் பிறந்த தம்பி சின்ன பழுவேட்டராயர், நீ கடமை தவறிவிட்டாய், உன் கையை நானே வெட்டுகிறேன் என்று வாள் எடுத்துக் கொண்டு வேகமாக வர, சுந்தரசோழரின் இரண்டாவது மகன் அருள்மொழி வர்மன், சின்ன பழுவேட்டராயரின் கையைப் பிடித்துத் தடுத்து நிறுத்த, பெரிய பழுவேட்டராயர் இடுப்பில் இருக்கின்ற கட்டாரியை எடுத்து மார்பில் பாய்ச்சிக் கொண்டு தேவனார் மரம் சாய்வது போல அப்படியே விழுந்து மாண்டு போனார். இது உண்மையில் நடந்தது.

அதற்குப் பின்னர் ராஜராஜ சோழன் என்ற பெயர் பெற்ற அருள்மொழி வர்மர் பட்டம் சூடிக் கொள்ளாமல், சித்தப்பா மகனாகிய மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்டிவிட்டு, வந்தியத்தேவனோடு கடல் கடந்த நாடுகளுக்கு கப்பல் படையோடு போய்விட்டான். இது நடைபெற்ற சரித்திரம். இந்தச் சம்பவத்தையும் நான் விவரித்தேன்.

அன்று நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்குச் சென்றிருக்கிறார் துளசி ஐயா வாண்டையார். அவர் தன் துணைவியாரோடு இணை பிரியாமல் இல்லற வாழ்க்கை நடத்தியவர். நான் எல்லோருக்கும் சொல்வேன், உங்களுக்கும் சொல்வேன், கணவன் மனைவி இல்லறம் எப்படி இருக்க வேண்டும் என்றால், துளசி ஐயா வாண்டையார் அவர்களும், அவரது துணைவியாரும் நடத்திய இல்லறத்தைப் போல இருக்க வேண்டும். ஒரு நாள் கூட பிரிய மாட்டார்.

பொன்னியின் செல்வன் நிகழ்ச்சியில் நான் ஆற்றிய உரையை அவரது துணைவியாரிடம் விவரித்துச் சொல்லியிருக்கிறார் துளசி ஐயா வாண்டையார். வந்தியத்தேவன் நாக்கில் சரஸ்வதி குடியேறி இருக்கிறாள் என்று சுந்தரசோழனிடம் அவரது மனைவி கூறியதாக எழுதியிருப்பார் கல்கி. இதைத் தம்பி வைகோ தனது பேச்சில் குறிப்பிட்டார் என்று பெரிய வாண்டையார் தனது துணைவியாரிடம் கூறியிருக்கிறார். முன்பின் பார்த்து அறியாத அந்த மாதரசி, துளசி ஐயா வாண்டையாரின் துணைவியார், இன்றைக்கு பேசியதாக கூறினீர்களே, அவர் நாக்கில் சரஸ்வதி குடியிருந்திருக்கிறாள், அதனால்தான் அப்படி பேசியிருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

அவர்கள் இருவரும் எனது கலிங்கப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற என் தம்பி மகன் திருமணத்திற்கு வந்திருந்தார்கள். அது எனக்கு எவ்வளவு பெரிய பெருமை. அவர் வாழ்நாளெல்லாம் வாரி வழங்கிய வள்ளல் மட்டுமல்ல, ஒழுக்கத்தைக் கடைபிடித்த மாமனிதர் மட்டுமல்ல, அவரே சொல்கிறார், பசி கழிக்கப் பேசுகின்றவன் வர்த்தகன்; பசி போக்க உழுகிறானே அவன் விவசாயி; மனசாட்சியோடும், மனிதாபிமானத்தோடும் செயல்படுபவன் தேசியவாதி. இது வாண்டையாரின் வர்ணனை. அப்படிப்பட்ட துளசி ஐயா வாண்டையார், இந்தத் தஞ்சை தரணியில் வாரி வழங்கும் வள்ளலாக இலட்சக்கணக்கான மாணவர்களை பட்டதாரிகளாக்கும்போது கட்டணம் வாங்க மாட்டார். விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு சல்லிக்காசு வாங்க மாட்டார். இன்றைக்கு அப்படிப்பட்ட கல்லூரிகள் ஒன்றிரண்டு தான் இருக்க முடியும், மதுரை தியாகராசர் கல்லூரியைப் போல. மற்ற இடங்களைப் பற்றி நான் குறிப்பிட விரும்பவில்லை.

ஒரு கல்லூரியை நடத்திய நமது ஐயா வாண்டையார் அவர்கள் கட்டுப்பாட்டை, ஒழுங்கை, அந்தக் கல்லூரி மாணவர்களிடம் வார்ப்பித்தார். அவர் காசு பணத்திற்கு ஆசைப்படாதவர். பெரிய செல்வந்தர் ஏராளமான நில புலன்கள் உண்டு. ஆனால் வெளியே தெரியாமல் அள்ளிக் கொடுத்து இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைச் செதுக்குவதில் தன்னைத்தானே அர்ப்பணித்துக் கொண்ட மாமனிதர் பெரிய ஐயா துளசி ஐயா வாண்டையார் அவர்கள். அவருடன் எனக்கு முன்பின் பழக்கம் கிடையாது. ஆனால் பொன்னியின் செல்வன் பற்றி நான் உரையாற்றியதற்குப் பின்னர் என் மீது அவர் அளவு கடந்த பிரியம் கொண்டார். தஞ்சைக்கு வந்தால் அவரது இல்லம் சென்று அவரை நான் பார்ப்பேன். அவர் என்னை உபசரிப்பார். என் கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றேன்.

மே 17ஆம் நாளன்று அவர் மறைந்தார். அதற்குப் பின்பு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவரது துணைவியாரும் மறைந்தார். அந்த துளசி ஐயா வாண்டையார் அவர்களுக்குப் புகழஞ்சலி செலுத்த வேண்டும் என்று அந்தக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள், கல்லூரியில் பணியாற்றிய இராஜேந்திரனைப் போன்ற பேராசிரியர்கள் கடமை உணர்வோடு இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உங்கள் பண்பாட்டை நான் வியந்து புகழ்ந்து பாராட்டுகிறேன். அரங்கம் நிறைய வந்திருக்கக்கூடிய அனைவருக்கும், குறிப்பாக மாணவிகளுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்க்கை ஒளிமயமாகட்டும். உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் உயர்ந்த சிகரங்களுக்குச் செல்லுங்கள். எந்தெந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ, நீங்கள் விமானிகள் ஆகலாம், விஞ்ஞானிகள் ஆகலாம், ஓவியர்கள் ஆகலாம், சிற்பிகள் ஆகலாம், முனைவர் பட்டம் பெற்று பாடம் போதிக்கின்ற பேராசிரியர்கள் ஆகலாம், மாவட்ட ஆட்சித் தலைவர்களாக வரலாம், காவல்துறை அதிகாரிகளாக வரலாம்.

ஆனால் இந்த நாட்டினுடைய பண்பாட்டை, வள்ளுவர் காட்டிய அறத்தை தமிழ்நாட்டில் நிலை நாட்டுகின்றவர்களாக விளங்கும் இந்தத் தலைமுறை மாணவிகளான நீங்கள் வாழ்க்கையில் உயர வேண்டும். உங்கள் பெற்றோர் மனம் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்து போற்ற வேண்டும். நான் முதலில் குறிப்பிட்டதைப் போல நீங்கள் எதிர்காலத்தில் அமைக்கின்ற வாழ்க்கை துளசி ஐயா வாண்டையாரும், அவரது மனைவியும் போல இல்லற வாழ்வு அமைய வேண்டும். அடுத்த தலைமுறையை நீங்கள் மானத்தோடு, வீரத்தோடு, அறிவோடு, பண்பாடு, சுயமரியாதையோடு வார்ப்பித்து உங்கள் வாழ்வில் நீங்கள் ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற்று மகிழப் போகிறீர்கள் என்று நினைத்து மிகுந்த மகிழ்ச்சி யோடு நான் வாழ்த்துகிறேன்.

வாழ்க துளசி ஐயா வாண்டையாரின் புகழ்! நிலைத்து நீண்டு வாழ்க துளசி ஐயா வாண்டையாரின் புகழ்!

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.