அந்த நூல்களைப் படித்ததால்தான் இந்தத் தமிழ் மண்ணின் மீதும், பழந்தமிழர் நாகரிகத்தின் மீதும் அந்தப் பேரரசுகள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் சாதித்த சாதனைகள் பற்றியும் என் இதயத்தில் ஏற்பட்ட தாக்கம், தன்நிழல் தரையில் படாத பெருவுடையார் கோயிலை ராஜராஜ சோழன் கட்டி எழுப்பினார். அவரும் அவரது புதல்வர் வேங்கையின் மைந்தன் ராஜேந்திர சோழனும் கடல் கடந்த நாடுகளுக்குப் படையெடுத்துச் சென்று, கீழ் திசை நாடுகளை எல்லாம் வென்று தென்கிழக்கு ஆசியாவில் பல்வேறு நாடுகளில் சோழ மன்னர்களின் புலிக்கொடியை பறக்க வைத்தவர்.
ஆனால் எந்த நாட்டையும் அவர்கள் அடிமைப்படுத்தவில்லை. தங்கள் படைகளைக் கொண்டு அவர்கள் மீது அடக்குமுறை செய்தது இல்லை. சிற்பக் கலைகளை வளர்த்தார்கள். ஆலயங்கள் கட்டினார்கள். வணிகத்தைப் பெருக்கினார்கள்.
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென்கடல் முத்தும் குணகடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
எங்கே காவிரி பூம்பட்டினத்துக் கடற்கரையில் அம்பாரம் அம்பாரமாக குவிந்து கிடந்தன. யவன நாட்டிலிருந்தும், ரோமாபுரியிலிருந்தும், எகிப்திலிருந்தும், டைகரீஸ், யூப்ரடீஸ் நதிகளுக்கு இடையில் இருந்த பாபிலோனை தலைநகராகக் கொண்ட சுமேரியாவிலிருந்தும் வணிகர்கள் காவிரி பூம்பட்டினத்திற்கு வந்தார்கள். அவர்கள் தங்களோடு புரவிகளையும், குருவிகளையும் கொண்டு வந்தார்கள். இங்கிருந்து பொருட்களை விலைக்கு வாங்கிச் சென்று அங்கு கொண்டு போய் விற்றார்கள். கற்பனை அல்ல. இது வரலாறு எழுதியவர் ஜவஹர்லால் நேரு.
பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் சிறைபட்டபோது, அகமது நகர் கோட்டை சிறையிலிருந்தும், நைனிடால் சிறையிலிருந்தும் தன் பிரிய மகள் இந்திரா பிரியதர்ஷினிக்கு எழுதிய கடிதத்தில் புனித மோசஸ் காலம் தொட்டு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வரலாறு குறித்தும், ஒவ்வொரு நாட்டின் வரலாறு குறித்து ஒவ்வொன்றையும் இணைத்து இணைத்து ஒப்புமை காட்டி எழுதியிருந்தார். அப்படிப்பட்ட உலக சரித்திரக் கடிதங்கள் எனும் ஒரு வரலாற்றுப் புத்தகத்தை உலகில் வேறு எவரும் எழுதியது இல்லை. அதில் சோழப் பேரரசு வலிமையானது எனக் குறிப்பிடுகிறார்.
மகளே சோழப் பேரரசு எவ்வளவு வலிமை பெற்றிருந்தது தெரியுமா? அவர்கள் பெரும் கப்பல் படை வைத்திருந்தார்கள். அந்தக் கப்பல்களில் போர் யானைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையிலான தொழில்நுட்புக்கம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் கப்பல் படையைக் கொண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகள் பலவற்றை வென்றார்கள்.
இமயம் முதல் குமரி வரை பரந்து கிடக்கக்கூடிய இந்த இந்திய உபகண்டத்தில் பல மாநிலங்கள் இருக்கின்றன. பல தேசிய இனங்கள் இருக்கின்றன. ஆனால் தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கும் இருக்கின்ற பெருமை வேறு எந்த மாநிலத்திற்கும் கிடையாது. மராட்டியத்திற்கும் கிடையாது. வங்காளத்திற்கும் கிடையாது. பஞ்சாப்புக்கும் கிடையாது. தமிழ்நாட்டுிற்குத்தான் உண்டு. அப்படிப்பட்ட படை வலிமையைப் பெற்றவர்கள் தமிழர்கள்.
இன்றைக்கு ஜனநாயகம் பேசப்படுகிறது. ஜனநாயகத்தின் தாக்கம் தேர்தல் களங்களில் வெளிப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பட்டினம் அல்லது ஊருக்குத் தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், குடவோலை முறையைப் பயன்படுத்தினார்கள். தலைவராகப் போட்டியிடுபவர்களுக்கு இன்னின்ன தகுதிகள் நிறைந்திருக்கக்கூடிய துளசி ஐயா வாண்டையாரின் ஐந்தாவது ஆண்டு நினைவு நாள். இந்த நாள் மனிதகுல வரலாற்றில் துயரம் தோய்ந்த நாள். தமிழினம் காயப்படுத்தப்பட்ட நாள். இந்த நாள் ஆயிரமாயிரம் ஈழத் தமிழ் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்ட நாள். தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று போராடிய எண்ணற்ற வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள்.
1984 ஆம் ஆண்டு நியூயார்க் அருகே உள்ள நானுவெட் எனும் நகரில் ஈழத்தமிழர் மாநாடு நடைபெற்றது. அதற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்த மாநாட்டில் பேசுகின்ற வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. அப்போது, உலகத்தில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு இல்லை. நியூயார்க் நகரில் ஐ.நா.மன்றத்திற்கு உயர்ந்த கட்டிடம் இருந்தது. அதற்கு முன்பு ஒவ்வொரு தனித் தனி நாட்டின் சுதந்திரக் கொடிகளும், பட்டொளி வீசிப் பறக்கின்றன. நான் முன்னும் பின்னுமாக நடந்தேன். அப்போது 158 நாடுகளை சுதந்திர நாடுகளாக அந்தக் கொடிகள் பறைசாற்றிக் கொண்டிருந்தன. நான் மனம் உடைந்தவனாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் நேசித்த 675 பேருக்கு டெட்ராய்டு நகரிலிருந்து என்னுடைய உயிர் நண்பர் சுருளி நாராயணசாமி அவர்கள் இல்லத்திலிருந்து கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில் எனது மனக் குமுறலைத் தெரிவித்திருந்தேன்.
நேற்று வரை காட்டு மிராண்டிகளாகத் திரிந்தவர்களும், ஆடை அணியும் கலை அறியாமல் நிர்வாணமாகத் திரிந்தவர்களுக்கு எல்லாம் தனித் தனி நாடுகளின் கொடிகள் உள்ளன. ஆனால் உலகில் முதலில் தோன்றிய இனம், கலைகளைக் கண்ட இனம், உடை அணியும் கலையை மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பெற்றிருந்த இனம், காட்டுமிராண்டிகளாக மர கிளைகளில், குகைகளில் வாழ்ந்தபோது இல்லங்களைக் கட்டி எழுப்பி புகழோடு வாழ்ந்த இனம்; உலகில் முதல் நாகரிகம் எங்கே தோன்றியது எது? உலகத்தின் புராதனமான நகரம் எது? பாபிலோன் என்று சொன்னார்கள். ஆனால் சேனல்-4 தொலைக்காட்சி ஒரு ஒளிப்பேழையை வெளியிட்டது. அந்த விவரத்தை நான் வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, தினமலர் பத்திரிக்கை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு பக்கம் எழுதியிருந்தார்.
அதில், உலகின் பழமையான நகரம் பாபிலோன் அல்ல, இந்தியாவின் தென்கோடியில் இருக்கிற தமிழ்நாட்டில் உள்ள கிழக்குக் கடற்கரையிலிருந்து சில கல் தொலைவில் கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கிற காவிரி பூம்பட்டினம். அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய நகரம் என்று இலண்டனில் இருக்கின்ற சேனல்-4 தொலைக்காட்சி குறிப்பிட்டிருக்கிறது.
அத்தகைய பழமையான நாகரிகத்தை, மொழியை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, வீரத்தை, மானத்தைப் போற்றிய எங்கள் இனத்திற்கென்று ஒரு நாடு உலகத்தில் இல்லை. இங்கே சேர மன்னர்கள், சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், பல்லவ மன்னர்கள் ஆங்காங்கே ஆட்சி நடத்தியதைப் போல இலங்கைத் தீவின் பெரும் பகுதியை தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி நடத்தினார்கள். அரசு நடத்தினார்கள். ஈழத் தமிழர்களுக்கென்று தனிதேசம் இருந்தது. போர்த்துக்கீசியர்கள் வந்தார்கள். அவர்கள் தங்களது நவீன ஆயுதங்களால் தமிழர்களைத் தோற்கடித்தார்கள். பின்னர் ஒல்லாந்தர்கள், டச்சுக்காரர்கள் வந்து போர்த்துக்கீசியர்களைத் தோற்கடித்தார்கள். பின்னர் பிரிட்டிஷார் வந்து டச்சுக்கார்களைத் தோற்கடித்து தீவின் தமிழர் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் இணைத்து நிர்வாக வசதிக்காக ஒரு நாடாகக் கொண்டு வந்தார்கள்.
1948 பிப்ரவரி 4 ஆம் தேதி யூனியன் ஜாக் கொடியை கீழே இறக்கிவிட்டு, பிரிட்டிஷ்காரன் வெளியே சென்றபோது, சிங்களவர்கள் கைகளில் இலங்கைத் தீவின் மொத்த அதிகாரத்தையும் கொடுத்துவிட்டான். அப்படிக் கொடுத்ததன் விளைவாக தமிழர்கள் உரிமை கேட்டார்கள். வஞ்சிக்கப்பட்டார்கள். கல்விக் கூடங்களில் படிக்க இடம் கிடைக்கவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. சிங்களம்தான் ஆட்சி மொழி என்று திணிக்கப்பட்டது.
இதை எதிர்த்து தமிழர்கள் அறவழியில், அமைதி வழியில் போராடினார்கள். அப்படிப் போராடிய தமிழர்கள் மீது சிங்களக் காவல்துறையும், இராணுவமும் பயங்கரமான அடக்குமுறையை ஏவி தமிழ் மக்களின் தலைகளை உடைத்தார்கள். இந்தத் தாக்குதல் தொடர்ந்துகொண்டே வந்தது.
பின்னர் தமிழர்கள் வழிபடுகின்ற கோயில்களையும், கோபுரங்களையும் இடித்தார்கள். அந்தக் கோயில்களுக்கு தேர் செய்த தச்சர்களை நடு வீதிக்கு அழைத்துச் சென்று மணிக்கட்டுகளை துண்டாக வெட்டி எறிந்தார்கள். அவர்கள் இரத்தம் கொட்டி இறந்துபோனார்கள். அதை எல்லாம் விட கொதிக்கும் தார் நெருப்பில் பிஞ்சுக் குழந்தைகளை தூக்கி வீசினார்கள். அந்தக் குழந்தைகள் கருகி மடிந்தன.
மாணவர் சமுதாயத்தைச் சேர்ந்த தங்கைகளே, உலக வரலாறு, பழைய வரலாறு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உங்கள் காலத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தஞ்சையில் இருக்கக்கூடிய மகளிர் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்று பேச வைத்தபோது, இரண்டாயிரம் மாணவிகள் இருந்தார்கள். நான் ஈழத்தின் வரலாற்றைத்தான் பேசினேன்.
வீரம் என்று சொன்னால் இங்கு சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியாரின் வீரத்தைச் சொல்லலாம். பிரிட்டிஷ்காரனை எதிர்த்து ஜான்சிராணி போராடி, போர்க்களத்தில் மாண்டு போனார். ஆனால் வெள்ளைக்காரனை எதிர்த்துப் போர்க்களத்தில் வெற்றி பெற்றது இந்தியாவிலேயே சிவகங்கை அரசு மட்டும்தான். அதன் ஆட்சிப் பொறுப்பில் இருந்த வேலுநாச்சியார்தான். அந்த வரலாற்றையும் நீங்கள் படிக்க வேண்டும்.
தென்னாப்பிரிக்காவில் கருப்பர்களுக்கும், இந்தியர்களுக்கும் உரிமை மறுக்கப்பட்டதை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் போராடிய காலத்தில் அறப்போரில் கலந்து கொண்டவர் உங்கள் மண்ணைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மை. அவர் 16 வயதிலேயே சிறை சென்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில் விடுவிக்கப்பட்டார். அந்த இடத்திற்கு மகாத்மா காந்தி சென்றார். அருகில் சோகத்தோடு அமர்ந்தார். கவலைப்படுகிறாயா? என்று தில்லையாடி வள்ளியம்மையிடம் கேட்டார். இல்லை. நான் சாகப் போகிறேன். மீண்டும் எனக்கு ஒரு பிறவி உண்டாகுமானால் நான் தமிழச்சியாகப் பிறக்க வேண்டும். உங்களுடைய போராட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்றார் தில்லையாடி வள்ளியம்மை. அந்த இடத்திற்கே வந்து காந்தியார் பெருமை சேர்க்கிறார், அந்த வள்ளியம்மை இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான். நான் என் அன்பு மாணவிச் செல்வங்களுக்குச் சொல்வேன். நீங்கள் கல்வி அறிவிலே உயர வேண்டும். ஆனால் உங்களைப் போன்று 16, 17, 18 வயதில் இருக்கக் கூடிய பெண் பிள்ளைகள் மண்ணின் விடுதலைக்காக போர்க் களத்திற்குச் சென்றதைப் பற்றிய ஒரு சம்பவத்தை மட்டும் சொல்லிவிட்டு நான் துளசி ஐயா வாண்டையார் புகழஞ்சலிக்குள் வருகிறேன்.
அங்கயற்கண்ணி என்ற 18 வயது பெண் பிள்ளை. தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு படைக்குத் தலைமை தாங்கியவர். கரும்புலியானவர். கரும்புலி என்றால் உயிரைத் தத்தம் செய்வதற்கு முடிவெடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர் ஒன்றரை வருடம் கழித்துத் தன் தாயைப் பார்க்க வருகிறாள். அதுவரை பார்த்தது இல்லை. தாயார் அவருக்கு சோறு போடுகிறார். அம்மா, இனிமேல் உன்னை நான் பார்க்க முடியாது என்று அங்கயற்கண்ணி கூறுகிறார். ஏனம்மா அப்படிச் சொல்கிறாய்? என்று அவரது தாயார் கேட்கிறார். நான் காற்றோடு சென்றுவிடுவேன். நீ நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழா நடக்கும். அப்போது வெல்லத்தால் செய்த பண்டங்களை கொண்டு போய் அங்கே விற்று பணம் சேர்த்துக் கொள். உன் வீட்டுக்கு நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு ஏதாவது கொடுக்க உன்னிடம் காசு இருக்காது. பொருட்கள் விற்ற காசைக் கொண்டு அவர்களுக்கு உணவு சமைத்துப் போடு என்றார் அங்கயற்கண்ணி.
அடுத்த இதழில்...






