கழகப் புகைப்படக் கலைஞர் ராஜா அவர்களின் மகள் சினேகா - அபிஷேக் மணவிழா சென்னை, அம்பத்தூரில் 07.06.2026 அன்று நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றியபோது, "எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் ராஜா" என்றார். அவரது உரை வருமாறு:-
"மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு"
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்று மனையறம் குறித்த நெறிகளை வகுத்த வான்புகழ் வள்ளுவப் பெருந்தகை வழங்கிய 1330 அருங்குறட்பாக்களை உள்ளடக்கிய டாக்டர் மு.வ. அவர்கள் தெளிவுரை எழுதிய திருக்குறள் நூல்களை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் கரத்திலும், மணமகள் கரத்திலும் கொடுப்பதை கடந்த 10 ஆண்டுகளாக நான் கடமையாக வைத்திருக்கிறேன். நேரம் வாய்க்கின்ற போது அந்தத் திருக்குறளை நீங்கள் படிக்க வேண்டும்.
முதலில் வைதீகரை வரவழைத்து, வேத மந்திரங்களைக் கூறி, அதன் பிறகு சுயமரியாதை திருமணமாக நடத்தலாம் என்று முடிவு செய்து நம்முடைய அனைவரின் அன்புக்குரிய என் தம்பி கழக புகைப்படக் கலைஞர் புலியூர்குறிச்சி ராஜா அவர்கள் அவரது மகள் திருமண விழாவை நடத்துகிறார். திருமணம் நடந்து முடிந்தவுடன் அனைவரும் அப்படியே கலைந்து சென்றுவிடலாம்.
கோயமுத்தூர்காரர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள். காலை 6 மணிக்கு திருமணத்தை வைத்துவிடுவார்கள். முதல்நாள் நலங்கு வைப்பார்கள். அதற்கும் ஆயிரக்கணக்கானவர்கள் வருவார்கள். நல்ல விருந்து இருக்கும். காலையில் திருமணத்திலும் அருமையான சிற்றுண்டி இருக்கும். அதன்பின் எல்லோரும் கலைந்து சென்றுவிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டினரும், பெண் வீட்டினரும் மதியம் சாப்பிடுவார்கள். இது கொங்கு மண்டல வழக்கம்.
ராஜா காலையிலேயே திருமணத்தை நடத்தி, சிற்றுண்டி வழங்கிவிட்டார். நண்பகல் உணவும் வழங்குகிறார். திருமண அழைப்பிதழில் உள்ள ராஜாவின் சம்மந்தி பெயரை நான் சரியாக வாசித்தேன். பிழை நேர்ந்துவிடவில்லை. இந்த நேரத்தில் எனக்கு பாரக் ஒபாமா நினைவுக்கு வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் முறை பாரக் ஒபாமா போட்டியிட்டார். அவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் 12 சதவிகிதம்தான் கருப்பர்கள் வாழ்கிறார்கள். ஆடு மாடுகளை விட கேவலமாக அவர்கள் விலங்கு பூட்டப்பட்டுக் கிடப்பார்கள். சொன்ன வேலையைச் செய்யாவிட்டால் சவுக்கால் அடிபடுவார்கள். இப்படி கொடுமைகளுக்கு உள்ளான கருப்பர் இனம் கொஞ்சம் கொஞ்சமாக உரிமைகளைப் பெற போராடிக் கொண்டே வந்தது.
ஒரு கட்டத்தில் ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவரானார். கருப்பர்களுக்கு பூட்டப்பட்ட அடிமைச் சட்டங்களில் பாதியை நீக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து, விடுதலைப் பிரகடனமாக ஒரு பிரகடனத்தைச் செய்ய 1863 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஏற்பாடு செய்திருந்தார். அவர் வராண்டாவில் நடந்து வருகிறபோது, ஒரு பெண் எதிரே வந்தார். அந்தப் பெண் லிங்கனைப் பார்த்து வணக்கம் சொன்னார். உன் பெயர் என்ன? என்று ஆபிரகாம் லிங்கன் கேட்டார். ஹாரியட் சீசர் என்று கூறியவுடன், ஓ, நீதான் அந்தப் பெண்ணா! அமெரிக்காவில் உள்நாட்டு யுத்தம் வருவதற்குக் காரணமான புத்தகத்தை எழுதியது நீதானா? என்று கேட்டார். 'அங்கிள் டாம்ஸ் கேபின்' புத்தகத்தைப் படித்தால் கண்ணீர் வந்துவிடும்.
பாஞ்சாலத்தில் படுகொலை செய்யப்பட்ட லாலா லஜபதிராயின் படுகொலைக்கு காரணமான வெள்ளைக்கார துரையைப் பழிவாங்குவதற்காக பகத்சிங்கும், ராஜகுருவும், சுகதேவும் சேர்ந்து சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பி இரயில் வழியாக கல்கத்தாவுக்குச் சென்று தலைமறைவாக இருந்தார்கள். அப்போது பகத் சிங் பார்த்த படம்தான் 'அங்கிள் டாம்ஸ் கேபின்'.
கையெழுத்துப் போடச் செல்கின்ற அடிமைகளுக்கு இனி விலங்குகள் கிடையாது. அவர்கள் சுதந்திரமாக வாழலாம். அதுவரை அவர்கள் மனிதர்களாகக் கருதப்படவில்லை. பொருட்களாக கருதப்பட்டார்கள். பொருட்களை யார் வேண்டுமானாலும் வாங்கலாம், விற்கலாம். அதுபோல அவர்கள் நடத்தப்பட்டார்கள். அப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு உரிமைகள் வழங்குகின்ற பிரகடனத்தைச் செய்வதற்கு பேனாவை கையில் எடுத்தார் லிங்கன். விரல் நடுங்குகிறது. பேனாவை கீழே வைத்துவிட்டார். பத்து நிமிடங்கள் கையெழுத்துப் போடவில்லை.
என் கை சற்று நடுக்கம் ஏற்படுகிறது. என் கையெழுத்தில் நடுக்கத்தின் ரேகை தெரிந்தால், உண்மையிலேயே அடிமைகளுக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆபிரகாம் லிங்கனுக்குக் கிடையாது, அவர் உள்ளத்தில் தடுமாற்றம் இருந்தது, கையெழுத்தும் தடுமாறிவிட்டது என்று கூறுவார்கள் என்று கருதி, அதன்பிறகு அமைதியாக அமர்ந்து கையெழுத்திட்டார்.
அதே அமெரிக்க நாட்டில் 2008 ஆம் வருடம் ஜனாதிபதி தேர்தல் உச்சக்கட்ட பிரச்சாரம் நடைபெற்றது. அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயகக் கட்சியின் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்கு பாரக் ஒபாமாவுக்கு நுழைவுச் சீட்டு வாங்குவதற்கு கையில் பணம் இல்லை. உள்ளே செல்ல முடியாமல் வராண்டாவில் நின்றுவிட்டு திரும்ப வந்துவிட்டார்.
மூன்று வருடம் கழித்து அதே பாரக் ஒபாமா ஜனநாயக கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஜான் ஹெர்ரி தொலைபேசியில் அழைத்தார். "Is it Mr. Barack Obama? நீங்கள்தான் பாரக் ஒபாமாவா?" ஆமாம் என்றார். "இந்த வருட ஜனநாயகக் கட்சி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராக கட்சி உங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறது" என்றார்.
உள்ளே நுழைய முடியாமல், டிக்கெட் வாங்க காசில்லாமல் தவித்த பாரக் ஒபாமா பல இடங்களில் ஆற்றிய உரைகளை ஒலிநாடாவில் போட்டுக் கேட்ட ஜான் ஹெர்ரி, நமது மாநாட்டின் சிறப்புப் பேச்சாளர் பாரக் ஒபாமா என்று முடிவு செய்தார். பாரக் ஒபாமாவை உரையாற்ற அழைத்தார்கள். 17 நிமிடம் பேசினார். அந்த 17 நிமிட உரையை நிலைக் கண்ணாடிக்கு முன்பு நின்று இரண்டு மாதம் ஒத்திகை பார்த்தார். தான் பேசப் போகிற பேச்சை ஒத்திகை பார்த்தார். அந்த 17 நிமிட பேச்சு அமெரிக்காவை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது. அவரது பேச்சைக் கேட்பதற்காக காரை நிறுத்திவிட்டு மக்கள் ஓடி வந்தார்கள். அந்தப் பேச்சு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி தோற்றுப் போனது. ஜான் ஹெர்ரி தோற்றுப் போனார்.
அதற்கு அடுத்தத் தேர்தலுக்கு ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஜனநாயக கட்சியின் பெரிய நிகழ்ச்சியில், வரப்போகின்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக பாரக் ஒபாமா போட்டியிடப் போகிறேன் என்று கூறினார். ஒருவரும் நம்பவில்லை. ஏனென்றால் அவர் கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர். அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்று அறிவிக்கிறாரே? இது நடக்கின்ற செயலா? ஆனால் அறிவித்தார். ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்தார். அவரது உரை உலுக்கி எடுத்துக் கொண்டிருந்தது.
அந்த சமயத்தில் நான் என் மகள் கண்ணகியையும், பெயர்த்திகளையும், மருமகனையும் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அதுதான் எனக்கு கடைசி பயணம். அதன்பிறகு எனக்கு விசா கிடையாது. அப்போது நான் பாரக் ஒபாமாவைப் பற்றி சிறையிலிருந்து ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதை நான் அவரது கையில் கொடுக்க வேண்டும் என்றேன். உள்ளே யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பிட்ட கட்சித் தலைவர்கள் மட்டும்தான் மண்டபத்திற்குள் செல்ல முடியும்.
இரண்டு செனட்டர்களுக்கு நான் எழுதிய புத்தகத்தின் பிரதியை அனுப்பி வைத்தேன். இன்று மாலை 5 மணிக்கு பாரக் ஒபாமா நிதி திரட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி கூற வருகிறார். அந்த இடத்தில் உங்களை அனுமதிப்பதற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். நீங்கள் சரியாக நான்கு மணிக்கு சொட்டன் ஹோட்டலுக்கு வாருங்கள் என்று கூறினார்கள்.
நான் சொட்டன் ஹோட்டலுக்குச் சென்றேன். என் பெயர் இருந்தது. கையெழுத்திடச் சொன்னார்கள். கையெழுத்திட்டேன். ஒரு பெரிய அரங்கத்திற்குள் ஒபாமாவுக்கு நிதி திரட்டிய கோடீசுவரர்கள் வரிசையாக நிற்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கூற வருகிறார் ஒபாமா. தேர்தல் பிரச்சாரத்தின் உச்சக்கட்டம். அந்த அரங்கத்திற்குள் என்னை அழைத்துச் சென்று நிறுத்திவிட்டார்கள்.
அமெரிக்க நாட்டின் உளவுத் துறை தலைவராக இருப்பவர் என்னிடம் வந்து, உன் கையில் என்ன வைத்திருக்கிறாய்? என்று கேட்டார். பாராக் ஒபாமா அவர்களைப் பற்றி நான் எழுதிய புத்தகத்தை வைத்திருந்தேன். "You should not try to talk to Mr. Obama. ஒபாமாவிடம் சென்று பேசுவதற்கு நீங்கள் முயற்சிக்கக் கூடாது. கையில் வைத்திருப்பதை அவரிடம் கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நாங்கள் பிடுங்கிக் கொண்டு சென்றுவிடுவோம்" என்று எச்சரிக்கை செய்துவிட்டுச் சென்றுவிட்டார்.
என்ன செய்வது என்று தெரியாமல் நான் திகைத்துக் கொண்டிருந்தேன். அந்த அரங்கத்தின் பின் பக்கத்திலும் கதவு இருக்கிறது. அது சுவரோடு சுவராக இருக்கிறது. அந்த கதவைத் திறந்து கொண்டு, "Guys I am late by 20 minutes. நான் தாமதமாக வந்திருக்கிறேன். பொறுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, அவருக்கு நிதி கொடுத்த ஒவ்வொருவரையும் கட்டித் தழுவி, நன்றி நன்றி என்று வரிசையாக சொல்லிக் கொண்டே வந்தார். வடிவத்தில் அவர்கள் நின்றிருந்தார்கள். கடைசி நபருக்கு முந்தைய நபராக நான் நிற்கிறேன். யாரிடமும் அவர் பேசவில்லை. எனக்கு முன்பாக இருப்பவர் அருகில் வந்து அவர் கட்டிப் பிடித்து தேங்க் யூ என்று கூறியவுடன், சடாரென்று ஒரு அடி முன் எடுத்து வைத்தேன். அதே வேகத்தில் "I come from the land of Mahatma Gandhi" என்றேன். பாரக் ஒபாமா திகைத்து, "Which part of India? இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். பழமையான நாகரிகத்தின் தொட்டில் பூமியாகிய இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து நான் வந்திருக்கிறேன் என்று கூறிவிட்டு, கருப்பர்களின் விடுதலைக்காக 200 வருடங்களாகப் போராடியவர்களின் பெயர்களை வரிசையாக அடைமொழி கொடுத்து சொல்லிக் கொண்டே வந்து, இவர்கள் அத்தனை பேரின் கனவுகளையும் நனவாக்குகின்ற விதத்தில், நீங்கள் வெள்ளை மாளிகையின் சிம்மாசனத்தை அலங்கரிக்கப் போகிறீர்கள்.
உலகில் எங்கெல்லாம் இப்படி அடிமைத் தளைகளால் பூட்டப்பட்டு, வாட்டி வதைக்கப்படுகிறார்களோ, அவர்களுக்கெல்லாம் உங்களால் ஒரு விடியல் பிறக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். நான் ஈழத்தமிழர்களையும் மனதில் வைத்துக் கொண்டுதான் கூறினேன். ஒரு நிமிடத்திற்குள் இவற்றை எல்லாம் கூறிவிட்டேன். அப்படியே நின்று விட்டார் பாரக் ஒபாமா.
அதோடு நான் நிற்கவில்லை. உங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அதற்கான தலைப்பு 'Yes, We Can', 'ஆம்; நம்மால் முடியும்'. நீங்கள் தேர்தலில் வைத்த முழக்கம்தான் புத்தகத்திற்கான தலைப்பு. "This is the biography of Mr. Barack Obama" என்று புத்தகத்தை அவரிடம் காட்டினேன். அவர் அணிந்திருந்த அதே வண்ணத்திலான சூட், கோட், சிவப்பு வண்ண டை நான் அணிந்திருந்தேன். எனது உயிர் நண்பர் வேலு அவர்கள் இரண்டு நாட்களில் தைத்துக் கொடுத்திருந்தார். ஒபாமா புத்தகத்தைப் புரட்டினார். சால்வை போட்டு ஜிப்பாவோடு இருந்த படத்தைத் தான் முதலில் பதிப்பித்திருந்தேன். அதைப் பார்த்து விட்டு, இவர் யார்? என்று கேட்டார். அது நான்தான் என்று கூறிவிட்டு, இந்தப் புத்தகத்தில் உங்களுடைய கையெழுத்து வேண்டும் என்று என்னுடைய பேனாவை எடுத்துக் கொடுத்தேன். அது கண்ணாடி தாள். அதில் சாதாரண பேனாவால் எழுத முடியாது. எனக்கு அது தெரியவில்லை. அவர் பேனாவை வாங்காமல், தனது உதவியாளரை அழைத்து, மார்க்கர் பேனாவை வாங்கி இடது கையால் வாங்கி, இடது கையாலே தனது கையொப்பத்தை பதிவு செய்தார். அவர் இடது கை பழக்கம் உள்ளவர்.
அடுத்த இடத்தில் அவரது பேச்சைக் கேட்க 20 ஆயிரம் பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு பரபரப்பில், அவ்வளவு அவசரத்தில் "Mr. Vaiko, how do you spell your name? உங்கள் பெயரின் எழுத்துக்கள் என்ன?" என்று கேட்டார். தவறாக எழுதிவிடக் கூடாது என்பதற்காக அப்படிக் கேட்டார். ஒரு தலைவன் என்றால், அரிய குணாதிசயங்கள் இருக்க வேண்டும். நான் தடுமாறிவிட்டேன். VAIKO என்று கூறினேன். "To Mr. Vaiko, Yes We can" என்று எழுதி தனது கையெழுத்தைப் போட்டார். அவரது கையெழுத்து அஜந்தா சித்திரம் போன்று இருந்தது. அதற்கு என்ன பொருள்? நீயும் வெற்றி பெறலாம், நானும் வெற்றி பெறலாம் என்று எடுத்துக் கொள்ளலாம்.
இந்தியாவிலிருந்து சென்று பாரக் ஒபாமாவைச் சந்தித்த ஒரே அரசியல்வாதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒருவர் மட்டும்தான். வேறு யாரும் சந்திக்கவில்லை.
ஒரு நாள் நான் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தேன். பக்கத்து இருக்கையில் ஒரு தம்பி அமர்ந்திருந்தார். யார் அருகில் இருந்தாலும் நான் பேச்சுக் கொடுப்பேன். எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன செய்கிறீர்கள்? என்று கேட்பேன். சில நேரங்களில் மிகவும் நெருங்கிப் பழகிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்படி அன்றைக்கு என்னுடன் வந்தவரிடம் கேட்டபோது, அவர் நாசாவில் பெரிய பதவியில் இருக்கிறார். அவர் என்னைப் பார்த்து, உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் அமெரிக்கா வந்து தற்போது ஜனாதிபதியாக இருக்கக்கூடிய பாரக் ஒபாமாவைச் சந்தித்து, நீங்கள் உங்களது புத்தகத்தில் கையெழுத்து வாங்கிச் சென்றதை எல்லாம் பார்த்திருக்கிறேன் என்றார். அதில் என்ன எழுதியிருந்தார் தெரியுமா? என்று அவரிடம் கேட்டேன். ஆமாம், அதன்பிறகு நான் தெரிந்துகொண்டேன் என்றார். அவரால் முடிந்தது வெள்ளை மாளிகையின் அதிபராகிவிட்டார். என்னால் எதுவும் முடியவில்லை. ஆம்; நம்மால் முடியும் என்ற வாக்கியத்தில் பாதிதான் நிறைவேறி இருக்கிறது. எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. "I haven't achieved anything." அவர் சொன்னது போன்று நடக்கவில்லை என்றேன். ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்? "Yourself you founded a party, yourself with your hard work big citadel of MDMK" கட்சி ஆரம்பித்து, அதை இன்றைக்கு வரைக்கும் நடத்திக் கொண்டு வருகிறீர்கள். நான் எதுவும் சாதிக்கவில்லை என்று ஏன் கூறுகிறீர்கள் நீங்களும் சாதித்திருக்கிறீர்கள். இந்த உலகத்தில் பிரபலமான இரண்டு முக்கியப் பேச்சாளர்களாக பாரக் ஒபாமாவையும், உங்களையும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
ஆனால் மக்களிடம் எனக்கு அங்கீகாரம் கிடையாது என்று நான் கூறினேன். நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் உங்களைப் பற்றி ஆச்சரியத்தோடு வியந்து பார்க்கிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்றார் அவர்.
இதை எதற்காக சொல்கிறேன் என்றால், கையெழுத்துப் போடும்போதுகூட பெயரில் தவறு வந்துவிடக் கூடாது என்று நினைத்து என்னிடம் தெளிவுபடுத்திக் கொண்டு கையெழுத்திட்ட மனிதனை நினைத்து நான் மிகவும் பெருமைப் படுகிறேன். சாதாரண பேச்சாளராக இருந்து அமெரிக்காவுக்கே ஜனாதிபதியாக பாரக் ஒபாமா உயர்ந்துவிட்டார்.
நாள் ஒரு மணி நேரம், ஒன்றரை மணி நேரம், இரண்டு மணி நேரம் இலட்சம் பேருக்கு மத்தியில், இரண்டு இலட்சம் பேருக்கு மத்தியில் நான் பேசியிருக்கிறேன்.
இன்றைய முதலமைச்சர் விஜய்க்கு வந்த கூட்டத்தைப் போல 1994 இல் எழுச்சிப் பேரணியிலும், அதற்கு அடுத்து நடைபெற்ற திருச்சி மாநாட்டிலும் கடல் அலையாக தமிழக மக்கள் இலட்சோப இலட்சம் பேர் வந்தார்கள். அந்தக் கூட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்று போல அன்று சமூக வலைதளங்கள் கிடையாது, தொலைக்காட்சி கிடையாது. நமக்கு இவ்வளவு கூட்டம் கூடியது என்று மற்றவர்களுக்குத் தெரிவிக்கின்ற எந்த வசதியும் நமக்குக் கிடையாது. அன்று வெள்ளமென கூட்டம் வந்தது. அதன்பிறகு தேறாது, வெற்றி பெறாது என்று போய்விட்டார்கள். அவர்கள் நன்றாக இருக்கட்டும். நம்மிடம் பயிற்சி பெற்றவர்கள்தான் பல கட்சிகளில் முக்கியமான பொறுப்புகளில் இருக்கிறார்கள். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
ஏனென்றால், எதுவும் இல்லாமல் உங்களைப் போன்று இலட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள் அல்லவா? அதுதான் சாதனை. கவுன்சிலர் பதவி உள்ளிட்ட எதுவும் கிடையாது. அப்படி நாளை வரும் என்ற நம்பிக்கையும் கிடையாது. ஆனாலும் ஏழு நாட்களுக்குள் மூன்று போராட்டங்களை நடத்திய ஒரே கட்சி மறுமலர்ச்சி தி.மு.க.தான்.
ஜூன் 02 ஆம் தேதி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாட்டுவில் அணை கட்டுவதை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
நேற்றைக்கு முந்தைய நாள், தமிழ்நாட்டு நதி நீர் உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுப்பதற்காகவும், விவசாயப் பயிர்களை நாசமாக்கும் காட்டுப் பன்றிகளை வனவிலங்குகள் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்க வேண்டும் என்றும், அதனை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்பதற்காகவும் வாசுதேவநல்லூரில் சட்டமன்ற உறுப்பினர் என் ஆருயிர் தம்பி தி.மு.இராசேந்திரனும், சுதா பாலசுப்பிரமணியனும் ஏற்பாடு செய்த பிரம்மாண்டமான உண்ணாவிரத அறப்போராட்டத்தை நடத்தினோம். கம்பனுக்கு ஒரு சடையப்ப வள்ளலைப் போன்று வைகோவுக்கு ஒரு தங்கப்பழ நாடார் என்ற வகையில் உண்ணாவிரத பந்தல் மற்றும் உண்ணாவிரதம் முடிந்த பின்பு அனைவருக்கும் உணவையும் அவர் ஏற்பாடு செய்தார். 300 பெண்கள் உட்பட 1300 பேர் அந்த உண்ணா விரத அறப்போராட்டத்தில் பங்கேற்று இருந்தார்கள்.
திருவள்ளுவர் படத்திற்கு காவி துணியை அணிவித்து, திருவள்ளுவர் ஒரு சனாதனி என்று கூறிய தமிழ்நாடு ஆளுநர் அர்லேக்கரைக் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே இருந்து கருப்புச் சட்டைகளுடன் சென்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.
அரை மணி நேரத்திற்குள் பேசி முடித்துவிடுங்கள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஒலிபெருக்கிக்கு முன்பு வந்து நிற்கும்போது, கங்கை, காவிரி பிரவாகமாக உற்பத்தி ஆவதைப் போல எண்ணங்கள், சிந்தனைகள் சொற்களாக வந்து கொண்டே இருக்கும். எவ்வளவு நேரம் பேச வேண்டுமோ, பேசுவேன்.
வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு சென்னை, அண்ணா நகர் விஜயஸ்ரீ மகாலில் நடைபெறுகிறது.
ஜூலை 17 ஆம் தேதி சங்கொலி பத்திரிக்கை 30 ஆம் ஆண்டு நிறைவு விழா.
நாடாளுமன்றத்தில் நான் 30 ஆண்டுகள் ஆற்றிய 1230 உரைகளின் தொகுப்பு ஆகஸ்டு மாதம் டெல்லியில் வெளியிடப்படுகிறது. வாய்ப்பு, வசதி உள்ளவர்கள் டெல்லிக்கு வரலாம். இரயிலில் நான்கு பெட்டிகளில் செல்லும் வகையில் நாம் டிக்கெட் பதிவு செய்வோம். டெல்லியில் தங்குவதற்கும் மண்டபத்தை ஏற்பாடு செய்துவிடுவோம் என்று ஜீவன் கூறினார். செந்திலதிபன், கவி விநாயகம் ஆகியோரின் முயற்சியில் அவைகள் தமிழாக்கம் செய்யப்படுகிறது. அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து தமிழாக்கத்தை சென்னையில் வெளியிடுவோம்.
செப்டம்பர் 15 இல் வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பிறந்தநாள் விழா. அதற்காக வள்ளுவர் கோட்டத்தை நாம் பதிவு செய்துவிட்டோம். அந்தத் துறையின் அமைச்சர் போட்ட முதல் கையெழுத்து, மதிமுக நடத்தும் அண்ணா பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு வள்ளுவர் கோட்டம் ஒதுக்கப்படுகிறது என்பதுதான். அதற்கும் நீங்கள் வருகை தர வேண்டும்.
வரிசையாக நிகழ்ச்சிகள் இருந்து கொண்டே இருக்கிறது. இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. நம்மை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிடுவார்கள். ஒருவரின் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர் அண்ணா திமுகவில் இருந்தார், அதன் பின்பு அங்கிருந்து சென்று திருநாவுக்கரசர் கட்சியில் சிறிது காலம் கதையை ஓட்டினார், தற்போது திமுகவில் சேர்ந்திருக்கிறார். அவர் ஒரு பத்திரிக்கையில் நம்மை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார். தொலைக்காட்சிகளில் மாலை நேர கச்சேரி நடக்கும். அங்கு பேசுகின்ற மேதாவிகள் எல்லாம் நம் கட்சிப் பெயரையும் சொல்ல மாட்டார்கள், என் பெயரையும் சொல்ல மாட்டார்கள். இப்பொழுது ஒரு வாரமாக நம்மை தாக்கிப் பேசுவதற்குப் பயன்படுத்துகிறார்கள்.
நாங்கள் என்ன தவறு செய்தோம்? நாங்கள் என்ன அமைச்சரவையில் சேர்ந்துவிட்டோமா? அமைச்சரவையில் சேர்ந்தவர்களைப் பற்றி நீங்கள் ஏதாவது பேசுங்கள். முஸ்லிம் லீக் சேர்ந்திருக்கிறார்கள், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்திருக்கிறார்கள் நாங்கள் சேரவில்லையே? கருத்துக் கேட்பவர்களுக்கு ஒன்றிரண்டு கருத்துக்கள் சொல்லியிருக்கலாம். மதிமுக என்ன தவறு செய்தது? எங்கள் மீது கணைகளைத் தொடுத்தால், இந்திரஜித் அம்புரா தோணியில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல், அபிமன்யுவின் அம்புரா தோணியில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல், வில்லுக்கு விஜயன் அம்புரா இருந்து புறப்படும் அம்புகளைப் போல், கடையெழு வள்ளல்களில் ஒருவரான மாவீரன் வல்வில் ஓரியின் அம்புரா இருந்து புறப்பட்ட அம்பைப் போல் அம்புகளைத் தொடுக்கும் வல்லமை உள்ள தம்பிகள் என்னோடு இருக்கிறார்கள். அமைதி காக்கிறார்கள். தூற்றுவார் தூற்றட்டும், போற்றுவார் போற்றட்டும்.
நாம் எந்தத் தவறும் இழைக்கவில்லை. 34 தொகுதிகளில் திமுக வெற்றிக்காக அடிவயிற்றிலிருந்து ஒரு மணி நேரம் பேசி 24 தொகுதிகளில் உதயசூரியன் வெற்றி பெற்றிருக்கிறது. அதில் என்னுடைய பங்கும், எங்களுடைய தோழர்கள் பங்கும் இருக்கிறது. மேலப்பாளையத்தில் நான் பேசிய கடைசி கூட்டம் ஐந்தாயிரம் பேரை திரட்டி வந்திருக்கிறது. வெற்றி பெற்ற அப்துல் வகாப் சொல்கிறார், "நான்காயிரம் வாக்குகள் பின்தங்கி இருந்த என்னை மேலே தூக்கி வந்து வெற்றி பெற வைத்தது நீங்கள் கடைசியாக பேசிய மேலப்பாளையம் கூட்டத்தினால்தான் மாமா" என்று கூறினார். அப்படி நாம் இருக்கின்ற இடத்திற்கு விசுவாசமாக பணியாற்றி இருக்கிறோம்.
தோழர்கள் மனதில் வேதனை இருக்கிறது என்பது உண்மை. பல காரணங்களால் அவர்களுக்கு ஆதங்கம், வேதனை. இருக்கக்கூடாதா? மற்றவர்கள் முடிவெடுத்ததைப் போல் நாம் முடிவெடுத்து விட்டோமா? இல்லையே? கருத்தைக்கூடச் சொல்லக் கூடாதா? எங்கள் தோழர்கள் மனம் காயப்பட்டு விட்டது என்று சொல்வதே பாவச் செயலா? உடனே நம் மீது பாய்ந்து கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள்.
இங்கிருந்து விலகிப் போனவர்களுக்கெல்லாம் கதவு திறக்கப்பட்டுவிட்டது வாருங்கள் என பச்சைக் கொடி காட்டப்பட்டு விட்டது என்று இன்றைக்குக் காலை நாளேட்டில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். தாராளமாகப் போகட்டும். நன்றாக இருக்கட்டும். நல்ல பதவிகளுக்கு வரட்டும். என்னுடன் வந்தால் பதவி கிடைக்காது; போராடத்தான் வேண்டும் என்றுதானே 32 வருடங்களாக கட்சி நடத்திக் கொண்டிருக்கிறேன்.
தமிழக வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதற்கு போராடி வெற்றி பெற்றதில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு நிகராக தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் கிடையாது. தராசில் மதிமுக என்ற படிக்கட்டை வைத்தால் அது கீழே போய் நிற்கும், மற்றவர்களுக்கு மேலேதான் போகும். தமிழ்நாட்டு வாழ்வாதாரங்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டைக் காப்பாற்ற, தமிழீழ மக்களுக்குக் குரல் கொடுக்க நாம் போராடி வந்திருக்கின்றோம். தொடர்ந்து போராடுவோம்.
27 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் கண்ணியமான முறையில் கருத்துக்கள் பரிமாறப்படும். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களே? இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று கேள்வி கேட்கலாம். நேற்றைக்கு முந்தைய நாள் தமிழ் முரசு பத்திரிக்கையில், "வைகோ இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் மிரட்டி ராஜினாமா செய்துவிட்டு, த.வெ.க.வில் போய்ச் சேரச் சொல்கிறார். இதனால் மதிமுக நிர்வாகிகள் மிகவும் அதிருப்தியோடு இருக்கிறார்கள்" என்று அரைப் பக்கத்திற்கு எழுதியிருக்கிறார்கள்.
தி.மு.இராசேந்திரனையோ, செந்தில்செல்வனையோ பார்த்து பலத்த குரலில் ஒரு வார்த்தை நான் பேசியது கிடையாதே! பேசவும் மாட்டேனே! இந்த கட்சியில் வெற்றி பெற வேண்டிய நான்கு மாணிக்கக் கட்டிகளில் இரண்டு பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டியது என்னுடைய கடமை என்ற உணர்வை நான் மறக்கவில்லை. அவர்கள் எப்படி செயல்படுவார்கள்? தமிழ்நாடு சட்டமன்ற விதிகளுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார்கள். யாராலும் அவர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது. நான் ஓரளவு சட்டம் படித்தவன், சட்டசபை விதிகளையும் படித்தவன். தி.மு.இராசேந்திரனும், செந்தில்செல்வனும் அரசு எவ்வளவு காலம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் சட்டமன்ற உறுப்பினர்களாகத்தான் அவர்கள் இருப்பார்கள். விவாத மேடைக்கு வருகிறவர்கள் சட்டமன்ற விதிகளில் என்ன இருக்கிறது என்று படித்துப் பாருங்கள். அந்த விதிகளின்படி அவர்கள் நடந்து கொள்வார்கள். அதே நேரத்தில் கட்சி தலைமையின் கருத்தையும், எண்ணத்தையும் மனதில் கொண்டவர்களாக எந்த விவாதத்தில் என்ன கருத்தைச் சொல்ல வேண்டுமோ, அதை அப்பொழுது சொல்வார்கள். நான் அல்லவா பயிற்சி கொடுத்திருக்கிறேன்? ஆயிரம் களங்களைக் கண்ட வைகோ அல்லவா வார்ப்பித்திருக்கிறேன். எங்களை அவ்வளவு எளிதில் எடைபோட்டு விட வேண்டாம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது.
என்னதான் முடிவெடுக்கப் போகிறீர்கள்? அது எனக்கு எப்படித் தெரியும்? பொதுக்குழுவில் கருத்துக்கள் பரிமாறப்படும். அதன்படி நாங்கள் தமிழ்நாட்டுக்கு, திராவிட இயக்கத்திற்கு எந்த விதத்தில் பெரியார், அண்ணாவை நெஞ்சில் நிறுத்திப் பணியாற்ற முடியுமோ? அந்த விதத்தில் நாங்கள் பணியாற்றுவோம்.
நமது புகைப்படக் கலைஞர் ராஜாவை எவரும் எளிதில் ஏமாற்றி விடலாம். இதுவரை அவன் எடுத்திருக்கின்ற படம் ஒரு கோடிக்கு மேல் இருக்கும். 90 இலட்சத்திற்கும் மேற்பட்ட படங்களை எடுத்தவர்கள் அவனுக்கு பணமும் கொடுக்கவில்லை; படத்தையும் வாங்கவில்லை. எடுத்துக் கொண்டே இருப்பான், நான்கு ஐந்து பேர்தான் வாங்குவார்கள். முதலில் நான் வாங்கிக் கொடுத்த கேமரா கூட்டத்திற்குள் இடித்துக் கொண்டு செல்லும்போது கீழே விழுந்து உடைந்து விட்டது. நான் அமெரிக்கா சென்றிருந்தபோது அதைவிட விலை உயர்ந்த கேமராவை வாங்கிக் கொண்டு வந்து ராஜாவிடம் கொடுத்தேன். மின்னலாக வருவான், புகையாக நுழைவான். ஆனால் ஒன்றே ஒன்று இவனை நம்பி எதையும் சொல்லிவிடாதீர்கள். அதை வெளியே சொல்லவில்லை என்றால் அவன் தலை வெடித்துவிடும் என்று அவனுக்கு பெரிய சாபம் இருக்கிறது. அவனை நம்பி இரகசியம் என்று எதையும் சொல்லிவிடாதீர்கள். அடுத்த நிமிடம் என்னிடம் வந்து சொல்லி விடுவான். அவ்வளவு வெள்ளந்தி.
தெற்காட்டு மறவர்கள் ஒரு காலத்தில் அரிவாள் கம்பை தூக்கிக் கொண்டு அலைந்தார்கள். ராஜா அந்த சமூகத்தில் புலியூர்குறிச்சியில் பிறந்தவன். சத்தம் போட்டுப் பேச மாட்டான். யாரிடமும் அவன் சண்டைக்குப் போய் பார்த்தது இல்லை. புலியூர்குறிச்சி, மஞ்சங்குப்பம், மறுகால்குறிச்சி மக்களின் குணம் எதுவுமே இந்தத் தம்பியிடம் கிடையாது. யாரிடமும் சண்டைக்குப் போக மாட்டான். நான் இரண்டு வார்த்தை திட்டினாலும் வாங்கிக் கொள்வான். எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என் தம்பி ராஜா. 32 வருடங்களாக அங்கேயும், இங்கேயுமாக மின்னலாக ஓடிக் கொண்டிருப்பான். நான் நடைபயணம் போகும்போது, ராஜா எங்கே? என்றால் பின்னாலிருந்து ஓடி வருவான். இனிமேல் படம் எடுக்கின்றவர்கள் தயவு செய்து பணத்தைக் கொடுத்துவிடுங்கள். அப்போது இல்லை என்றாலும், நான்கு நாட்களுக்குள்ளாவது பணத்தை அனுப்பி விடுங்கள்.
இந்தத் திருமண விழாவில் மணமக்களுக்கு நான் சொல்வது கருத்து வேற்றுமைக்கு கடுகளவும் இடம் கொடுத்துவிடாமல், கருத்தொருமித்து காதல் வயப்பட்டு, செம்புலப் பெயல் நீர்போல நீங்கள் இணை பிரியாமல், 'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி' என்பது மாதிரி, ஒருவர் கண் கலங்க மற்றவர்கள் அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் உங்கள் பெற்றோருக்குப் பெருமை தேடித் தர வேண்டும். எங்களுக்கு நல்ல மருமகள் கிடைத்தாள் என்று சொல்கின்ற அளவுக்கு உன்னுடைய மாமனார், மாமியாரிடம் நீ நடந்து கொள்ள வேண்டும். அப்படி நடந்து கொண்டால்தான், வீட்டிற்கு வந்த மருமகளால் குடும்பத்திற்கே நல்ல பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று கூறுவார்கள். அது போன்று நீ நடந்து கொள்ள வேண்டும்.
உங்கள் இல்லற வாழ்வில் ஆற்றலும், அறிவும், சுயமரியாதையும், தன்மானமும் கொண்ட நன்மக்களை அளவோடு பெற்று, பெற்றோர் பெருமைப்படும் வகையில் இன்றைக்கு இருக்கும் மகிழ்ச்சியோடு என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்க உங்கள் இல்லற வாழ்வு அமைய வேண்டும். 'குழல் இனிது யாழ் இனிது என்பர்தம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்ற குறள் மொழிக்கு ஒப்ப, இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்க்கும் மயக்குறும் மக்களைப் பெற்று நூறாண்டு கடந்து நீங்கள் வாழ்வாங்கு வாழ்க என மணமக்களை வாழ்த்துகிறேன்.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.






