புதன், 15 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்காதீர்! பொதுமக்களைக் கொன்றவர்களை தண்டியுங்கள்! — தூத்துக்குடியில் வைகோ வேண்டுகோள்ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுஅணுக்கனிம சுரங்கம் — ஆபத்துவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.5493 மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு நியமன ஆணை! வைகோ, துரை வைகோ எம்.பி. தொடர் முயற்சி வெற்றிமறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 32 ஆவது பொதுக்குழு தீர்மானங்கள்தமிழக வெற்றிக் கழக தோழமைக் கட்சிகளின் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்பு100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைவள்ளுவர் படத்திற்கு காவித் துணி அணிவித்த ஆளுநர் அர்லேக்கரின் கொடுஞ்செயலைக் கண்டிக்கிறோம்!ஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!

ஆவணப்பட இயக்குநர்களுக்கு வைகோ பாராட்டு கடிதம்

ஆவணப்பட இயக்குநர்களுக்கு வைகோ பாராட்டு கடிதம்

துருக்கி சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான 'பொருநை' ஆவணப்படத்திற்காக ஹிப் ஹாப் ஆதி, இயக்குநர்கள் மற்றும் தமிழன்டா இயக்க இளைஞர்களுக்கு வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழர் தொன்மையையும் வரலாற்றையும் உலக அரங்கில் கொண்டு செல்லும் இந்த முயற்சி பெருமைக்குரியது என்றும் அவர் வாழ்த்தியுள்ளார்.

அன்பான தம்பி 'ஹிப் ஹாப்' ஆதி, ஆவணப்பட இயக்குநர்கள் இளங்கோ, பிரதீப் குமார் மற்றும் 'தமிழன்டா இயக்கம்' சார்ந்த இளைஞர்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

துருக்கியில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Foca International Archaeology & Cultural Heritage Film Festival), நீங்கள் உருவாக்கிய 'பொருநை' ஆவணப்படம் திரையிடத் தேர்வாகியுள்ளது என்ற செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்தப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை என்றாலும், நீங்கள் முன்னெடுத்துள்ள இந்த அறப்பணியைப் பார்க்கும் போது நெஞ்சம் நிறைந்து உங்களை வாழ்த்தத் தோன்றுகிறது. லாப நோக்கமில்லாமல், இந்தச் சிறிய வயதில் தம்பி ஆதியும், மற்ற இளைஞர்களும் இணைந்து செய்துள்ள இந்த வேலை மிகவும் மகத்தானது. உங்கள் உழைப்பும், வரலாற்றுத் தேடலும் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது.

உலகிற்கே நாகரிகத்தையும், பல வாழ்வியல் நெறிகளையும் கற்றுக் கொடுத்த மூத்த குடி தமிழ்க்குடி. ஆனால், நாம் செய்த மாபெரும் தவறு, நமது அரிய வரலாற்றை முறையாக ஆவணப்படுத்தத் தவறியதுதான். அந்த வரலாற்றுப் பிழையைத் தரவுகளோடு திருத்தும் விதமாக இப்படம் எடுத்திருப்பது சாதாரண விஷயமல்ல; இது காலங்காலமாக வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் ஒரு மாபெரும் சாதனை.

"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றி மூத்த குடி" என்று நம் புலவர்கள் பாடியதை, ஒரு காலத்தில் உலகம் வெறும் கவிதை நயம் என்று சுருக்கிப் பார்த்தது. ஆனால், இன்று அகழாய்வுகள் அதை அறிவியல் பூர்வமாக, அகிலத்தின் முகத்தில் அறைந்து நிருபித்துக் கொண்டிருக்கின்றன.

பொன், பொருளைத் தேடி உலகம் அலைந்தபோது, சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழியில் இருந்த 'நெல்மணிகளை' அமெரிக்காவின் பீட்டா அனலிட்டிகல் ஆய்வகத்திற்கு (Beta Analytic) கார்பன் பரிசோதனைக்கு அனுப்பி, தமிழனின் நாகரிகம் 3,200 ஆண்டுகள் (கி.மு. 1155) பழமையானது என்பதை அறிவியல் தரவுகளோடு நிரூபித்துக் காட்டியது நமது தொல்லியல் துறை.

உலகப் புகழ்பெற்ற சிந்துச் சமவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய குறியீடுகளைக் கொண்ட பானையோடுகள் நெல்லை மண்ணில் கிடைத்திருப்பது, இந்தியாவின் வரலாறே தெற்கிலிருந்து தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

ஆதிச்சநல்லூரில் உலகமே வியக்கும் வண்ணம் கண்டுபிடிக்கப்பட்ட இரும்புக் கருவிகளும், தங்க நெற்றிப் பட்டயங்களும், வெண்கலப் பொருட்களும் நம் மூதாதையர்கள் எத்தகைய தொழில்நுட்ப அறிவோடு சிறந்த கைவினைஞர்களாக வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு அழிக்க முடியாத சான்றுகள். இயற்கையோடு இயைந்து, வாழ்வியலை அறத்தோடு கட்டமைத்த சமூகம் நம்முடையது.

கொற்கைத் துறைமுகத்தைப் பற்றி நீங்கள் ஆவணப்படுத்தியிருப்பது மிகவும் முக்கியமானது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும், எகிப்தியர்களோடும் நடுக்கடலில் நங்கூரமிட்டு வணிகம் செய்தவன் தமிழன். கொற்கையின் முத்துக்கு உலகச் சந்தையில் இருந்த மதிப்பும், யவனர்கள் (ரோமானியர்கள்) தங்கக் காசுகளைக் கொடுத்து நம்மிடம் மிளகையும், முத்தையும் வாங்கிச் சென்ற வரலாறும் 'பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரியன் சீ' (Periplus of the Erythraean Sea) போன்ற அயல்நாட்டுப் பயணக் குறிப்புகளில் இருப்பதையே நீங்கள் ஆவணப்படத்தில் பதிவு செய்திருக்கிறீர்கள்.

கீழடியிலும், பொருநையிலும் கிடைத்த அகழாய்வு முடிவுகள் சொல்லும் மிக முக்கியமான செய்தி ஒன்று இருக்கிறது. அங்கு ஆயுதங்களை விட, தாயக்கட்டைகளும், சுடுமண் பொம்மைகளும், நீர் மேலாண்மைக்கான சுடுமண் குழாய்களும்தான் அதிகம் கிடைத்துள்ளன. இதன் மூலம், தமிழன் என்பவன் போரை மட்டும் நேசித்தவன் அல்ல; அவன் கல்வியிலும், கலையிலும், நெசவிலும் சிறந்து விளங்கியவன், அனைவரையும் சமமாகப் பாவித்த ஓர் உன்னத நகர நாகரிகத்தை (Urban Civilization) ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்து காட்டியவன் என்பது நிரூபணமாகிறது.

நான் திருநெல்வேலி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவன் என்பதால், என் மண்ணின் வரலாறும், என் தாய்க்கிழவியாம் பொருநை நதியின் பெருமையும் சர்வதேச அரங்கிற்குச் செல்வதைப் பார்க்கையில் எனக்குள் ஏற்படும் உணர்ச்சிப் பெருக்கிற்கு அளவே இல்லை. தாமிரபரணி எனக்கு வெறும் நதியல்ல; அது என் நரம்புகளில் ஓடும் ரத்தம். அதன் கரையில் புதைந்து கிடக்கும் என் பாட்டனின் பெருமையை நீங்கள் உலகறியச் செய்வது எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் பெருமிதத்தைத் தருகிறது.

எந்தவொரு வணிக லாப உத்தரவாதமும் இல்லாமல், ஒரு பண்பாட்டு இயக்கமாகச் செயல்பட்டு இவ்வளவு பெரிய பொருட்செலவில், அறிவியல் தரவுகளையும், பிரிட்டிஷ் காலத்து ஆவணங்களையும் திரட்டி, அனிமேஷன் தொழில்நுட்பத்தோடு இதைச் சாத்தியப்படுத்திய தம்பி ஹிப் ஹாப் ஆதிக்கும், பல ஆண்டுகள் தங்கள் உழைப்பைக் கொட்டிய இயக்குநர்கள் இளங்கோ, பிரதீப்குமார் மற்றும் தமிழன்டா இயக்க இளைஞர்கள் ஆகியோருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

இளைய தலைமுறைக்குத் தம் வேர்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இதைவிடச் சிறந்த ஆயுதம் இல்லை. உங்கள் பணி தொடரட்டும்! தமிழ் உலகின் தொன்மையை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் இதுபோன்ற பல முன்னெடுப்புகளை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பாராட்டு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.