நான் 1944 ஆம் ஆண்டு, செப்டம்பர் 22 ஆம் நாள் பிறந்தேன். ஆனால், கல்விக்கூடப் ஆரம்ப பாடசாலையில் என்னைச் சேர்க்கும் போது வயது குறைவாக இருக்கிறது என்று கூறி, நான்கு மாதங்கள் முன்னதாக மே 22 இல் நான் பிறந்தேன் என்று பள்ளி ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டது.
என்னுடைய இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) சான்றிதழிலும் எனது பிறந்த நாள் மே 22 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்கு வாழ்த்துக் கூற விரும்புகிறவர்கள் பல நேரங்களில் மே 22 ஆம் நாள் அன்று வாழ்த்துக் கூறுவார்கள். இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல என்று தெரிவித்துவிடுவேன்.
நம் இயக்கத்தில் யாரும் எனது பிறந்தநாளைக் கொண்டாடக் கூடாது என்று திட்டவட்டமாகக் கூறி வந்தேன். 2002 ஆம் வருடம் மே 22 ஆம் நாள் அன்று காலையில் அன்றைய இந்திய தலைமை அமைச்சர் அடல்பிஹாரி வாஜ்பாய் அவர்கள் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்த இனிய நாள் மீண்டும் மீண்டும் உங்களுக்கு வருவதாக என்று வாழ்த்தினார்.
நான் உடனே அவரிடம், இந்த நாள் எனது பிறந்தநாள் அல்ல. பள்ளியில் சேர்ப்பதற்காக முன்னதாக உள்ள நாளைச் சேர்த்துவிட்டார்கள் என்றேன்.
வாஜ்பாய் அவர்கள் கலைஞர் அல்லவா? கணமும் தயங்காமல் ஒரு வருடத்தில் 365 நாட்கள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு நாள் உங்கள் பிறந்த நாளாகத்தானே இருக்கும்! என்னுடைய வாழ்த்துக்கள் அந்த நாளுக்கு போய்ச் சேரட்டும் என்றார்.
திராவிட இயக்கத் தலைவர்கள் பலர் 40 வயதிலேயே பிறந்தநாள் விழா கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்! நீங்கள் ஏன் இப்படி மறுக்கிறீர்கள்? என்று கூறி வந்தனர். பின்னர் எப்படியோ எனது பிறந்த நாள் செப்டம்பர் 22 என்று அறிந்துகொண்டார்கள்.
எனக்குத் தெரியாமலேயே பல இடங்களில் அந்த நாளைக் கொண்டாடினார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இன்றைய துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் துரை வைகோ அவரிடமும் கூறி, என் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் என்று எனக்குத் தெரியாமலேயே நடத்தி வந்தார்கள்.
இந்தப் பின்னணியில், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு “அண்ணே, இந்த வருடம் நாங்கள் எங்களை ஏமாற்ற விடமாட்டோம். செப்டம்பர் 22ஐ மிகப் பெரிய விழாவாகக் கொண்டாட கழக முன்னணி யினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து முடிவு செய்திருக்கிறோம். நீங்கள் மறுக்கவே கூடாது” என்று பிடிவாதமாக நிர்பந்தித்தார்கள். நான் அரை மனதுடன் அதற்கு இசைவு அளித்தேன்.
உடனே அவர்கள் எழும்பூரில், ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தை பதிவு செய்து, முன்பணமும் செலுத்திவிட்டார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக என் மனதில் இந்த ஏற்பாடு உறுத்தலாகவே இருந்தது.
அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை நமது இயக்கம் தோன்றிய நாள் முதல் மாபெரும் மாநாடுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். அறிஞர் அண்ணாவின் 100 ஆவது பிறந்த நாள் விழாவை செப்டம்பர் 15 இல் தி.மு.க. கொண்டாட வில்லை. மதுரை மாநகரே குலுங்கும் வகையில் நாம் எழுச்சி மாநாடாக நடத்தினோம்.
தி.மு.கழகமும், அண்ணா பிறந்த நாளுக்கு அகில இந்திய தலைவர்களையோ, இந்திய தலைமை அமைச்சரையோ அழைத்து நடத்தவில்லை. அதற்கு மாறாக அந்த ஆண்டில் அவர்கள் செப்டம்பர் 15க்குப் பதிலாக செப்டம்பர் 21 ஆம் நாளில் காஞ்சீபுரத்தில் நடத்தினார்கள்.
"தி.மு.க தலைவர் தனது பிறந்தநாளை ஜூன் 3 ஆம் தேதிக்குப் பதிலாக வேறு நாளில் நடத்துவாரா?" என்று மாநாட்டில் கேட்டேன்.
தி.மு.க ஆட்சியில் இருந்த காலத்திலும், இந்தியாவின் தலைமை அமைச்சரை அழைத்துக் கொண்டு வந்து அண்ணா பிறந்தநாளை நடத்தும் எண்ணமாவது வந்ததா? இல்லை. ஆனால் நாங்கள் 1998 செப்டம்பர் 15 இல் தலைமை அமைச்சர் வாஜ்பாய் அவர்களையும், உள்துறை அமைச்சர் அத்வானி அவர்களையும், காஷ்மீர் முதலமைச்சர் டாக்டர் பரூக் அப்துல்லா அவர்களையும், பஞ்சாப் முதலமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் அவர்களையும், இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும் பங்கேற்கச் செய்து, மெரினா கடற்கரையில் விடியற்காலை இரண்டரை மணி வரை நடத்தினோம்.
இயக்கத்தில் தோழர்கள் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை நடத்திவிட்டு, எனக்கு தெரியாமல் பொருட் செலவு செய்து, எனது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன்.
இந்த ஆண்டு 'வைகோ 83' என்று இலச்சினை தயாரித்திருக்கிறார்கள். அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவை மிகச் சிறப்பாக ஆண்டுதோறும் நடத்துவது மட்டும்தான் கழகத்தின் கடமை ஆகும். எனக்கு பிறந்தநாள் விழா எடுப்பதை நான் முற்றிலும் விரும்பவில்லை.
இந்த ஆண்டு மட்டுமல்ல, நான் வாழும் காலம் வரையிலும் செப்டம்பர் 22 ஆம் நாளை என் பிறந்தநாள் விழாவாக கழகத் தோழர்கள் நடத்தக் கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அந்த நாளில் யாரும் என்னைச் சந்திக்க வரப்பட வேண்டாம். நான் எங்காவது பிறர் அறியாவண்ணம் அமைதியாகக் கழிக்க நினைக்கிறேன்.
என் புகைப்படமிட்ட சுவரொட்டிகளை ஒட்டுவது, பேனர் அடிப்பது போன்ற செயல்களில் கழகத் தோழர்கள் ஈடுபட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்.
‘வைகோ 83' என்ற தலைப்பில் என் பிறந்தநாள் விழாவாகக் கொண்டாட எவரும் முற்பட வேண்டாம் என்பதை மீண்டும் அழுத்தம்திருத்தமாகக் கூறிக் கொள்கிறேன்.
இந்த ஏற்பாட்டில் ஈடுபட்டவர்கள் மனம் காயப்படுவாரானால் என் மன அமைதிக்காக, என் எண்ணத்தைச் செயல்படுத்துமாறு உரிமையுடனும், பங்காத பற்றுடனும் வேண்டிக் கொள்கிறேன்.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் 21.07.2026 அன்று விடுத்துள்ள அறிக்கை.







