மதுரையின் தென்கிழக்கில் 13 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது கீழடி, அங்கே "பள்ளிச்சந்தை திடல்" என்று அழைக்கப்படும் இடத்தில் 2014 ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையின் (Archaeological Survey Of India - ASI) தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் விதமாக சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள், பிராமி கல்வெட்டுகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை 2,600 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் சமூகத்தில் இருந்துள்ளதை உறுதிப்படுத்தியது. முக்கியமாக கீழடியில் மக்கள் கடவுளை வழிபட்டதற்கான எந்த சிலைகளும் கண்டெடுக்கப்படவில்லை. கீழடி மற்றும் தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் குறித்து ராமகிருஷ்ணா பேச ஆரம்பித்ததிலிருந்து அவர் மீது பல்வேறு தாக்குதலைத் தொடுத்து வந்தது பாசிச கும்பல். 2017 ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணாவை எந்தவித முன்னறிவிப்புமின்றி அசாம் மாநிலத்திற்கு மாற்றியது. பின்னர் அதே ஆண்டு இந்தியத் தொல்லியல் துறையைச் சேர்ந்த பி.எஸ் ஸ்ரீராமனின் தலைமையில் மூன்றாம் கட்ட அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. வெறும் 400 சதுர மீட்டர் பரப்பளவில் பெயருக்கு அகழாய்வு மேற்கொண்டு அப்பகுதியில் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என்று கூறி அகழ்வாராய்ச்சியை முடக்கியது. பின்னர் தமிழ்நாடு அரசால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிபதிகள் அகழாய்வு நடைபெற்ற கீழடியைப் பார்வையிட்டனர். பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையையும் இணைத்து அகழாய்வை மேற்கொள்ளுமாறு இந்தியத் தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நான்காம் கட்ட அகழாய்விலிருந்து இந்தியத் தொல்லியல் துறை விலகிக் கொண்டது. நான்காம் கட்ட அகழாய்வு முதல் பத்தாம் கட்டம் வரையிலான அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு தொல்லியல் துறையே மேற்கொண்டது. மண்பானைகள், தந்தத்தால் செய்த தகடுகள் உள்ளிட்ட பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவையனைத்தும் தமிழ்நாடு அரசால் கீழடியில் அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டம் காரணமாக 2021 ஆம் ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணா மீண்டும் சென்னைக்கு மாற்றப்பட்டார். உடனடியாக அவரது தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு கட்ட அகழாய்வுகள் குறித்து 982 பக்க அளவிலான அறிக்கையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியத் தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில் கீழடியில் கிடைத்த பொருட்களைக் கொண்டு கீழடியை மூன்று பண்பாட்டு காலகட்டங்களாகப் பிரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, முதல் காலகட்டம் கி.மு எட்டாம் நூற்றாண்டு முதல் கி.மு ஐந்தாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டமாகும். கி.மு ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.மு முதலாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டம் இரண்டாவது காலகட்டம் ஆகும். மூன்றாவது காலகட்டம் கி.மு முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்கிறது. வைகை நதிக்கரை ஓரம் தோன்றிய நாகரிகம் குறித்து சிலவற்றை மட்டுமே கண்டுபிடித்துள்ளதாகவும் தொடர்ந்து அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார். ஆனால் கீழடிக்கும் சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், தமிழின் தொன்மை குறித்தும் யாரும் அறிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக இரண்டு ஆண்டுகள் வரை அறிக்கையை மோடி அரசு வெளியிடவில்லை. முதலாவது காலகட்டம், கி.மு எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு ஐந்தாம் நூற்றாண்டு வரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறி திடீரென்று 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் இந்தியத் தொல்லியல் துறை அறிக்கையைத் திருப்பி அனுப்பியது. ஆய்வாளர் சமர்ப்பிக்கும் அறிக்கைக்கு அவரே முழு பொறுப்பு. தொல்லியல் துறை அதனை நிராகரிக்கலாம் அல்லது ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தனக்குச் சாதகமாக நடைமுறையை மாற்றியது இக்கும்பல். தனது அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள மறுத்த ராமகிருஷ்ணா "கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை. அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத் திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இறுதி ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கேள்வி எழுப்பப்படுகிறது. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு 800- கி.மு 500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது" என்று கடந்த 2025, மே 23 ஆம் தேதி அன்று இந்தியத் தொல்லியல் துறைக்குப் பதில் அளித்துள்ளார். இச்சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாக ஜூன் 17 அன்று இந்தியத் தொல்லியல் துறை டெல்லியில் பண்டைய கால மற்றும் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் (National Mission on Monuments and Antiquities) இயக்குநராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை நொய்டாவின் தேசிய நினைவுச் சின்னங்கள், தொல்பொருள்கள் அமைப்பின் இயக்குநராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டது. தேசிய நினைவுச்சின்னங்கள் இயக்குநராகவும், தொல்பொருள் பணியின் இயக்குநராகவும் இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா தற்போது தொல்பொருள் பணியின் இயக்குநராக மட்டுமே இருக்கிறார். இது கீழடி அறிக்கையைத் திருத்த மறுத்ததற்காக பாசிச கும்பலால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலாகும். பாசிச கும்பல் ஒரே மொழி, ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரம் என்பதை நிறுவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. கீழடி குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணாவின் அறிக்கை தமிழ் மொழியின் தொன்மை குறித்த ஆதாரங்களைக் கொண்டுள்ளதால் அதைப் புறந்தள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பாசிச கும்பல். அகழ்வாராய்ச்சியாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவின் தமிழ்நாட்டின் நாகரீகத் தொன்மை குறித்த அந்த அறிக்கை உலகுக்கு இந்திய வரலாற்றைப் புதிய வகையில் அறிமுகப்படுத்தக் கூடியது. உலகத் தமிழர்களின் பெருமிதத்திற்குரியது. அதேவேளை, இந்திய வரலாறு பற்றி ஏற்கெனவே பேசப்பட்டு வந்த பார்ப்பன சனாதனிகளின் வேத புராணப் புனை கதைகளுக்குச் செருகப்பட்ட ஆப்பாக அமைந்து விட்டது. கீழடியில், இதுவரை நம்பப்பட்டு வந்ததை விடவும் மிகப் பழமையானதாக இருக்கக் கூடிய, கி.மு. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, நன்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புறக் குடியிருப்புக்கான சான்றுகள் உள்ளிட்டு, குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கிடைத்துள்ளன. அவை, அறிவியல் உண்மைகள் என்பதை அறிந்திருப்பினும் இந்திய தொல்லியல் துறையால் அவற்றை அங்கீகரிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ முடியவில்லை. எனவே கீழடி அறிக்கையை வெளியிடாமல், அதுகுறித்து எந்தக் கருத்தும் கூறாமல் வெறுமனே அமைதி காத்து காலம் கடத்தி வந்தது. பா.ஜ.க. பாசிச கும்பலுக்குக் கீழடி அறிக்கை தொண்டையில் முள்ளாகச் சிக்கிக் கொண்டது. வெளியில் துப்பிவிடவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. கீழடி குறித்த ஆய்வறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிடக் கோரி கடந்த தி.மு.க. அரசு பல கடிதங்களை எழுதியது. அவற்றில் "கீழடி என்பது வெறும் களிமண்ணும் மண்பாண்டங்களும் மட்டுமல்ல; கங்கைச் சமவெளியின் புராணங்களுக்குப் பன்னெடுங்காலத்திற்கு முன்பிருந்தே நகரமயமான, எழுத்தறிவு பெற்ற மற்றும் செழிப்பாக இருந்த 3,000 ஆண்டுகள் பழமையான தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாகக் கீழடி விளங்குகிறது." என்று எடுத்துக்க் கூறி அகழ்வாராய்ச்சி அறிக்கையை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் குறித்துக் கேள்விகளை எழுப்பியது. நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் பலமுறை எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், அதற்கும் ஒன்றிய அரசு எந்தப் பதிலும் சொல்லாமல், மயான அமைதி காத்தது. பின்னர் கடந்த ஆண்டு, கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், கீழடி வாழ்வாராய்ச்சி அறிக்கையை நிராகரிக்கும் கேள்விக்கே இடமில்லை என்று மட்டும் மக்களவையில் கூறியிருந்தார். ஒருவழியாக இந்திய தொல்லியல் துறை, அந்த மூன்று காலகட்டங்களின் பெயர்களில் மாற்றம் தேவை என்றும், கி.மு. 8-ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 5-ஆம் நூற்றாண்டு வரையிலான காலவரம்பு எந்த வகையிலும் நியாயப்படுத்தப்படவில்லை ஆதலால், அறிக்கையில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் தனது முடிவை அறிவித்தது. அறிக்கையில் மேற்சொன்ன முறையிலான திருத்தங்கள் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கோரியது. ஆனால் அவர் தனது காலக் கணிப்பும் முடிவுகளும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையிலானவை என்பதால் தொல்லியல் துறை கேட்கும் மாற்றங்களைச் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில், வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை விரைந்து வெளியிடக் கோரி, 2025 மே மாதத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) தலைமை இயக்குநருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, 2025 ஆகஸ்டில் இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் யதுபீர் சிங் ராவத் அனுப்பியுள்ள கடிதத்தில், "கீழடி அகழ்வாராய்ச்சியின் துல்லியமான கண்டுபிடிப்புகளை வெளியிடுவதில், சட்டப்பூர்வமான மற்றும் அறிவியல் பூர்வமான செயல்முறைகளைப் பின்பற்றுவதில் இந்தியத் தொல்லியல் துறை முழு உறுதியுடன் உள்ளது. எனவே, இது தொடர்பான தரவுகளை நேரடியாகக் களத்திற்கே சென்று மறுபரிசீலனை செய்யத் தொல்லியல் துறையின் உட்குழு (Internal Committee) ஒன்று விரைவில் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார். அவ்வகையில் ராமகிருஷ்ணாவின் கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மதிப்பீடு செய்வதற்காக, இந்திய தொல்லியல் துறை ஐந்து பேர் கொண்ட துறை சார் உட்குழுவை நியமித்துள்ளது. இக்குழுவிற்கு இந்திய தொல்லியல் துறையின் இணை தலைமை இயக்குநரும் செய்தித் தொடர்பாளருமான நந்தினி பட்டாச்சார்ய சாஹு தலைமை தாங்குகிறார். சாஹு தலைமையிலான குழு, ராமகிருஷ்ணாவின் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காகத் தற்போது நேரடியாகக் கீழடிக்குச் சென்று மறுபரிசீலனை செய்ய உள்ளது. ஓர் அகழ்வாராய்ச்சி அறிவியல் அறிஞர் சமர்ப்பித்த ஓர் அறிக்கையை மறுபரிசீலனை செய்வதற்காக, ஒரு குழு அகழ்வாராய்ச்சி தளத்திற்குச் செல்வது இந்திய தொல்லியல் துறையின் (ASI) வரலாற்றில் ஓர் அரிதான நிகழ்வாகும். இம்முயற்சி இந்து மதவெறி பாசிச கும்பலின் சதிச்செயலாகும். எவ்வாறேனும் கீழடி குறித்த வரலாற்று உண்மையை, தமிழர் நாகரிகத்தின் தொன்மையை, மீண்டும் குழி தோண்டிப் புதைத்துவிட வேண்டும் என்கிற நாசகார எண்ணத்தின் விளைவாகும். அறிவியலுக்கு எதிரான இந்தச் சதிச் செயலை முறியடிக்க அறிவியல் உலகத்துடன் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களும் ஜனநாயகவாதிகளும் உரக்கக் குரல் எழுப்ப வேண்டும். இந்திய தொல்லியல் துறையின் உட்குழு கீழடிக்கு வருவதை எதிர்த்துப் போராடி இந்துத்துவ கும்பலின் சதி திட்டத்தைத் தகர்க்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - செப்டம்பர் 15 வள்ளுவர் கோட்டத்தில் கூட தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா மற்றும் தனது நூல் வெளியீட்டு விழா தொடர்பாக தொண்டர்களுக்கு எழுதிய மடல்: அண்ணா பிறந்தநாள் விழா அழைப்பு: செப்டம்பர் 15 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இவ்விழாவில் மலேசிய பினாங்கு முன்னாள் துணை முதல்வர் திரு. ராமசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். நூல் வெளியீட்டு விழா நன்றி: புதுடெல்லியில் அண்மையில் நடைபெற்ற 'நாடாளுமன்றத்தில் வைகோ' (Vaiko in Parliament) நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்றதையும், ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து சிறப்பித்த மதிமுக தொண்டர்களின் எழுச்சியையும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க »





