வெள்ளி, 17 ஜூலை, 2026ஆசிரியர் : வைகோ | மறுமலர்ச்சி தி.மு.க. அதிகாரப்பூர்வ வார ஏடு
தலைவர் வைகோதுரை வைகோ எம்.பி.
முக்கியச் செய்திகள்
ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)ஒலித்தது «சங்கொலி» முழக்கம்! — 30 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கழக வார ஏடுவெளிநாடுகளில் சிக்கித் தவித்த தமிழர்களை மீட்டதோடு அவர்களது இல்லங்களுக்கும் சென்று சந்தித்தேன் — துரை வைகோ எம்.பி.1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!100 நாள் வேலை திட்டம் (VB-G RAM G) - முதல்வர் விஜய் கோரிக்கைஒலித்தது ‘சங்கொலி' முழக்கம்!கழக சட்டதிட்ட விதிகளில் திருத்தம்ஆளுநர் உரையை வரவேற்கிறேன் துரை வைகோ எம்.பி.,04.08.2026 டெல்லியில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களின் நூல் வெளியீட்டு விழா! - கழகத் தோழர்களின் கவனத்திற்குஒலித்தது 'சங்கொலி' முழக்கம்!ஊபா (UAPA) சட்டமும்; உமர் காலித் வழக்கும் உமர் காலித் கைது - பகுதி 6 (மு.செந்திலதிபன், கழகப் பொருளாளர்)

1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!

1993 ஏப்ரல் 14–15: நடந்தது என்ன? 33 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோவின் முழு விளக்கம்!

1993 ஏப்ரல் 14–15 அன்று நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து வைகோ விரிவாக விளக்கமளிக்கிறார். தனது பெயரில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை தானே அகற்றச் செய்ததாகவும், அப்போது கலைஞருக்கு எதிராக எந்த எண்ணமும் இல்லாமல் முழு விசுவாசத்துடனே செயல்பட்டதாகவும் கூறுகிறார்.

வைகோ விளக்கம்

1993 ஏப்ரல் 14, சித்திரைத் திருநாளுக்கு முதல் நாள் அன்று நாகர்கோவிலில் கலைஞர் பொதுக்கூட்டம். என் பெயரையும் சேர்த்துப் போட்டிருக்கிறார்கள். முதல் நாளுக்கு முதல் நாள் ஆற்க்காடு வீராச்சாமி தொலைபேசியில் அழைத்து, “என்னங்க உங்க படம்தான் கன்னியாகுமரி, நாகர்கோவில் முழுவதும் ஒட்டியிருக்கிறார்களாம்! உங்களைப் புகழ்ந்து அதிகமாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்களாமே! அதனால் கலைஞர் கூட்டத்தை ரத்து செய்யச் சொல்லி விட்டார்” என்றார். “எனக்கு தெரியாது அண்ணே. என்னை புகழ்ந்து போஸ்டர் ஒட்டச் சொல்லி நான் தூண்டிவிட்டது இல்லை. ஆட்களை உடனே அனுப்பி அதை நான் கிழித்துப் போடச் சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, இளைஞர் அணிச் செயலாளராக இருந்த ஷேக் தாவூத் மிகப் பெரிய தைரியசாலி. அவருடன் பத்துப் பேரை இரண்டு வண்டிகளில் அனுப்பி, நாகர்கோவில் சுற்றுவட்டாரத்தில் எங்கெல்லாம் என் போஸ்டர் இருக்கிறதோ, அதைக் கிழித்துப் போட்டு வாருங்கள் என்று கூறினேன்.

இவர்கள் போய் கிழித்தவுடன், “வைகோ படத்தை நாங்கள் ஒட்டுகிறோம். நீங்கள் ஏண்டா வந்து கிழிக்கிறீர்கள்?” என்று நாகர்கோவில்காரர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அதையும் மீறி கிழித்துப் போட்டுவிட்டார்கள். என் படம் போட்ட போஸ்டர் எதுவும் கிடையாது. கூட்டத்தில் நான் பத்து நிமிடம் பேசினேன்.

கூட்டம் முடிந்து கலைஞர் கேரளா அரசுக்கு உரிய விருந்தினர் இல்லத்திற்குச் சென்று விட்டார். நான் தமிழ்நாடு அரசு விடுதிக்குச் சென்றேன். நான் அறைக்குச் சென்ற அரை மணி நேரத்திட்றகுள் அன்புச் சகோதரர் திரு துரைமுருகன் அவர்களும், அண்ணன் ஆற்க்காடு வீராச்சாமி அவர்களும் என் அறைக்கு வந்து, “உனக்கு என்னப்பா பிரச்சினை? தலைவர் வருத்தப்படும்படி ஏன் நடந்துகொள்கிறாய்?” என்று கேட்டார்கள். “நான் தலைவருக்கு விசுவாசமாகத்தானே இருக்கிறேன். கட்சியில் நான் பெரிய பதவிக்கு வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேனா? ஒருக்காலும் கிடையாது. தலைவர்தான் என்னை ஒதுக்கி வைக்கப் பார்க்கிறார். நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அவ்விதமே நடந்துகொள்வேன்” என்றேன். “சரி, நீ ஒன்றும் கவலைப்படாதே எல்லாம் சரியாகிப் போய்விடும்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்.

மறுநாள் தூத்துக்குடிக்கு தலைவர் அவர்களோடு நாங்கள் பயணமானோம். தூத்துக்குடியில் முன்னிரவில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம். அக்கூட்டத்தில் பேசும்போது, என் மனம் திறந்து பேசினேன். கம்ப ராமாயணத்தில்,

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில் அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

என் நெஞ்சை பிளந்து பார்த்தால் அங்கு ராமபிரான்தான் இருக்கிறார் என்று அனுமன் கூறியதாக கம்பர் வர்ணித்தார்.

என்னுடைய மார்பை பிளந்து பார்த்தால் அங்கே டாக்டர் கலைஞர்தான் கொலு+வீற்றிருக்கிறார் என்று சொன்ன கணத்தில் கூட்டம் ஆரவாரம் செய்தது. கரவொலி பலமாக எழுந்தது.

நான் என் விசுவாசத்தைச் சுட்டிக் காட்டி இவ்வளவு பேசியபோதிலும், அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்கள் உரையாற்றும்போது, “என் பெயரைச் சொல்லி, தம்பி இங்கே உணர்ச்சிவயப்பட்டுப் பேசினார். மூன்று மாதத்திற்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாமே?” என்றார்.

ஆனால் மூன்று மாதத்திற்கு முன்பு அருப்புக்கோட்டை கூட்டத்தில் இதே விதத்தில்தான் பேசினேன். அதற்குப் பிறகும் என்னிடம் தலைவர் நடந்துகொண்ட விதம் மாறவே இல்லை.

இது நடந்தது 1993, ஏப்ரல் 14, 15 தேதிகளில். ஆனால் 16 வருடம் கழித்து 2009 மார்ச் 29 ஆம் நாள் பிரசுரமான முரசொலி உடன் பிறப்புக்கு எழுதிய கவிதையில், தன் கற்பனை வளத்தை எல்லாம் காட்டி கலைஞர் எழுதியிருந்தார். பராசக்திக்கும், மந்திரகுமாரிக்கும், மனோகராவுக்கும் வசனம் எழுதியவர்தானே! காட்சியை நாடக நிகழ்ச்சி போல காட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இல்லை..

இந்தக் கவிதை கடிதத்தில் நடக்காத ஒன்றை படித்தால் உண்மைதான் என்று நம்புகிற அளவுக்கு ஆற்க்காட்டாரையும், துரைமுருகனையும் குறிப்பிட்டு, அவரது புதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களை பேராசிரியர் பாராட்டியது பற்றி குறிப்பிட்டு,

“கலைஞரே இப்போது உம்மைத்தானே “போர்வாள்” என்று புகழ்கிறார் - போற்றுகிறார் - மாநிலங்களவை உறுப்பினர் பதவியை உமக்கு வழங்கியது போல வேறு யாருக்கு இப்படித் தொடர்ந்து வழங்கியிருக்கிறார்; கவலைப்படாமல் இருந்திடுக! என்றார்கள்.

கலைஞர் அவர்கள் தனக்குப் பிறகு உங்களைத்தான் தலைவராக்குவார் இயக்கத்திற்கு” என்று நம்பிக்கை தெரிவித்து அந்த நள்ளிரவிலும் தமது பேர் சொல்ல விரும்பாத பெருமைமிகு தம்பியின் முகத்தில் ஒளி பிறக்கச் செய்திருக்கிறார்கள்.

புன்னகை தவழ்ந்த அந்தத் தம்பியின் முகத்தில் புதியதோர் சிந்தனை - அது ஒரு கேள்வியாகவும் மாறியது” “ஏன் துரைமுருகன்; நான் கலைஞருக்குப் பிறகு

தலைவனாவேன் என்கிறீர்களே? ஒரு வேளை நமது

கலைஞர், பெரியார் போல - ராஜாஜி போல - தொண்ணூறு வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டால்; நான் தலைவனாவதற்கு எத்தனை வருடம் காத்திருப்பது?" இதைக் கேள்வியாகக் கருதாமல்; மற்ற இரு தம்பியரும் தேன் பிலிற்றும் விஷமாக எண்ணிக் கலங்கி - இருவரும் இரகசியமாக சத்தியம் செய்து கொண்டார்களாம் இந்தச் செய்தியை இருவரும் தலைவரிடம் எப்போதும் சொல்வதில்லையென்று ! ஆனால் - துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி! ஆற்காட்டாரோ - அசல்; கண்ணாடிப் பேழை - எனினும் - ஆண்டுகள் சில பல கடந்த பிறகே; அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின் குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு! குறளின் அமுத மொழியாம்; "செப்பின் புணர்ச்சிபோற் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி"

(செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித் தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகை உள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்!

உடன்பிறப்பே,

“குறளோவியம்” நூல் தொகுப்பில் நான் குறிப்பிடாமல் விட்டுப் போன இந்தக் குறட்பா; இந்த நேரத்தில் நினைவுக்கு வந்ததே; அந்த நினைவுக்கு ஒரு நன்றி!

அன்புள்ள, மு.க. (29.3.2009)

என் மனதில் விசுவரூபம் எடுக்கின்ற கேள்வி யாதெனில்? அண்ணன் ஆற்க்காட்டாரும், சகோதரர் துரைமுருகனும் என்

மீது அடாத பழியைப் போட்டு, கலைஞர் என்னை வெறுக்க வேண்டும் என்று இப்படி பொய் சொன்னார்களா? அல்லது தனக்கே உள்ள கற்பனை ஆற்றல், எழுத்தாற்றலால் இப்படி அப்பட்டமான ஒரு பொய்யை ஒரு காட்சியாக புனைந்து கலைஞர் எழுதினாரா?

இப்பொழுது சங்கரன்கோவில் செயல்வீரர்கள் கூட்டத்தில், நடந்ததை சுட்டிக் காட்டி நான் பேசியதால், இந்த 2026 ஜூலை 11 ஆம் நாள் பிரசுரமான முரசொலியில் 17 ஆண்டுகள் கழித்து முரசொலியில் “அந்த நினைவுக்கு நன்றி” என்று முன்பு அவிழ்த்துவிட்ட கோயபல்ஸ் பொய்யை தி.மு.கழக தோழர்களிடம், நடுநிலையாளர்களிடம், தொலைக்காட்சி செய்தி ஏடுகள் மூலம் 1993 எப்படி கொலைப்பழிக்கு என்னை ஆளாக்கி, தி.மு.கழகத்தை விட்டு நீக்கினாரோ, அதே பாணியில் திமுகவினர், மற்ற அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், பொதுமக்கள், செய்தியாளர்கள், அதிகாரிகள் என்னைக் குறித்து வெறுப்பும், கசப்பும் ஏற்பட வேண்டும் என்பதற்காக 17 வருடம் கழித்து அதே முரசொலியில் வெளியிட்டார்களா? அப்படியானால் 2005 இல் திண்டுக்கல் திமுக மாநாட்டில் என் உரைக்குப் பிறகு கலைஞர் உரையாற்றுகையில், “நீ உரையாற்றும் போது என் முகத்தை நீ கவனித்திருக்க முடியாது. நீ உரையாற்றும்போது என் கண்கள் நீர் பொழிந்துகொண்டிருந்தன. தம்பி, உன்னை நான் இழந்தேனா? என்னை நீ இழந்தாயா?” என்று பேசியது உண்மயா? அல்லது 1993 ஏப்ரலில் நடந்த நிகழ்வை 2009 முரசொலியில் எழுதியதை, இப்போது திரும்ப 2026 ஜூலை 11 இல் கொட்டை எழுத்துக்களில் முரசொலியில் தி.மு.கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறவர்கள் பிரசுரிக்க என்ன காரணம்? தி.மு.கழக கூட்டணியிலிருந்து எமது இயக்கம் வெளியேறியதால் ஏற்பட்ட வெறுப்பில் என்னைக் களங்கப்படுத்துவதற்காக இதை வெளியிட்டார்களா?

எனவே இந்தப் பழி சுமத்தும் கவிதையை இன்றைய திமுக தலைமை திட்டமிட்டு இப்போது இப்படி வெளியிட்டிருக்கிறது என்று நான் உணர்ந்து கொண்டேன்.

பழிச் சொற்களையும், குற்றச்சாட்டுக்களையும் இப்போது பிரசுரிப்பதில் என்ன நோக்கம்?

கொலைப்பழியை என் மீது 1993 இல் திட்டமிட்டு ஏவியது, மீண்டும் அதே பழியை - குற்றச்சாட்டை தற்போதைய தலைமையினர் தொடுத்திருக்கிறார்கள்.

பொய்யும், அபாண்டமான குற்றச்சாட்டும் நிலை நிற்காது. மெய்தான் நிலைத்து நிற்கும்; என்னைக் காக்கும்.

ஆனால் இத்தகைய தாக்குதல்களை எல்லாம் என் இதயம் தாங்கி அனுபவப்பட்டுவிட்டேன். தெளிந்த நீரோடையைப் போல என் மனம் தூய்மையாக இருக்கிறது. பொய்மை தோற்கும்; மெய்மை இறுதியில் வெல்லும்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் மணிவவாசகத்தை எண்ணி நான் இதை எல்லாம் தாங்கி பழக்கப்பட்டுவிட்டேன்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்கள்தான் உங்கள் கட்சிக்கு. அது மறுபேச்சுக்கு இடமில்லை. இதை ஏற்றுக் கொண்டு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தித் திணித்தார்கள்.

கூட்டணியில் இருக்கும்போது நான் அரசையோ, திமுகவையோ விமர்சித்து ஒரு சொல் சொன்னால்கூட அடுத்த கட்டமாக நம் இயக்கத்தை கூட்டணியிலிருந்து அவர்களே விலக்கியிருப்பார்கள்.

என் வாழ்க்கையில் இரண்டு பெருந்தவறுகளைச் செய்துவிட்டேன். ஒன்று 2006 இல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. அன்றைய மதிமுக தலைமை நிர்வாகிகள், முன்னணியினர் என்னை நிர்ப்பந்தப்படுத்தி அதிமுக பொதுச்செயலாளரை சந்திக்க வைத்தார்களே, நான் அந்த நிர்ப்பந்தத்திற்கு உடன்படாமல், அதிமுகவுடன் உடன்பாடு செய்யாமல் இருந்திருந்தால் நமது இயக்கம் வலிவும் பொலிவும் பெற்றிருக்கும்.

2017 இல் பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு கொண்டது இரண்டாவது பெரும் பிழையாகும்.

பொதிகைமலை உறுதியாக இருப்பதைப் போல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எந்தவித கேடும் யாரும் செய்ய முடியாது.

வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் இலட்சோப இலட்சம் பேர் இருக்கிறீர்கள். கிரேக்க புராணத்தில் பீனிக்ஸ் பறவை என்று குறிபிடப்பட்டது கற்பனைதான். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு, ஓங்கி உயர்ந்து தலைநிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்குத் தோல்வி இல்லை. வெற்றித் தேவதை நமக்கு ஆரம் சூட்ட காத்திருக்கிற நிலையை எண்ணி நாம் தடைகளைத் தகர்த்து, நம்மை வீழ்த்த நினைப்போரின் கணைகளை முறித்து செம்மாந்து நடப்போம். ஒளிமயமான எதிர்காலம் நம்மை வரவேற்க காத்திருக்கிறது.

உங்களுக்கு தெளிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம் அல்ல, நடுநிலையாளர்களும், பொதுவாழ்வில் இருப்போரும், பொதுமக்களும், ஊடகத்தில் இருப்போரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே மடலாக சங்கொலியின் வாயிலாக உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.

நிறைந்த நம்பிக்கையோடு பயணத்தைத் தொடர்வோம்.

வைகோ பொதுச் செயலாளர், மறுமலர்ச்சி தி.மு.க., ‘தாயகம்’ சென்னை - 8 17.07.2026