பேரன்புக்குரிய 'வைகோ' அவர்களுக்கு, இதயம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
தங்களின் மேலான தலைமையில் இயங்கிவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சார ஏடாக முப்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளிவரும் சங்கொலி வார இதழ் இன்னும் பன்னெடுங் காலம் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துகிறோம்.
பத்திரிகைத் துறையில் ஈடுபடுவோர்க்கு அந்தத் துறையில் ஏற்படும் இடைஞ்சல்கள், எதிர்ப்புகள், விரோதங்கள், துரோகங்கள் பற்றியெல்லாம் கூற வேண்டிய தேவை இருப்பதில்லை. காட்டாறுகளையும் நெருப்பாறுகளையும் கடந்துதான் பத்திரிக்கை பிரசுரமாகிறது.
வைகோ அவர்கள் கடந்த முப்பது ஆண்டுகளாக சங்கொலியைத் தொடர்ந்து நடத்தி வருகிறார் என்ற செய்தியே அற்புதமானது. தமிழக அரசியல் அரங்கில் புரட்சிப் புயலாகவும், தெள்ளு தமிழ்த் தென்றலாகவும் சரித்திரம் படைத்திருக்கும் சாதனைச் செம்மலாகவும் திகழ்ந்து வரும் தீரத்தான் வைகோ அவர்கள் ஆவார்.
என் அருமைத் தோழர் மறைந்த தா.பாண்டியன் அவர்கள் ஒருமுறை சொன்னார் "பத்திரிகை என்பது வெறும் காகிதம் அன்று. அது ஜனநாயகத்தையும், சட்டத்தையும் நேர்மையையும் நீதியையும் நிலை நிறுத்துவதற்கு நமக்குக் கிடைத்திருக்கும் ஆயுதம்" என்று அவர் கூறியது என்றும் நினைவில் நிற்கிறது.
அத்தகைய அரிய அற்புதமான ஆயுதத்தை ஏந்தி, திராவிட நாகரிகத்தையும், பண்பாட்டையும் வையகத்தின் முதல் மொழியாகிய தமிழின் செம்மொழிச் சீரையும் சிறப்பையும், அது கற்பித்திருக்கும் மானிட நேயத்தையும் சங்கொலி பரப்பி வருகிறது. அது நாள் இருக்கும் நாள் எல்லாம் தொடர வாழ்த்துவோம்.
பேராசிரியர் காதர் மொய்தீன்
தேசிய தலைவர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்னும் திருமூலர் மந்திரத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முழங்கினார். எல்லோருடைய இதயங்களிலும் அது ஊடுருவியது.
யாதும் ஊரே யாவரும் கேளிர், என்றும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் சங்க இலக்கியப் போதனைகளை முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெருமான் அவர்கள் தொடர்ந்து பரப்புரை செய்து வந்தார். திராவிட மாடல் ஆட்சி எனப் பிரகடனம் செய்து, தமிழ் சமூகம் ஏற்றமுறப் பல நலத் திட்டங்களை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சியில் நடைமுறைப்படுத்தி வந்தார். இதற்கு மேதகு மேன்மக்கள் காட்டிய வழியில் அவர்கள் பயணித்த பாதையில் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றும்.
எல்லோரும் இன்புற்று இருப்பதற்கே அல்லாமல் வேறொன்றும் அறியேன் பராபரமே' என்றும் தனது உன்னதமான லட்சியமாகக் கருதி அதனைத் தமிழ் பூமியில் வெற்றி பெறச் செய்யும் நன்னோக்கத்தில் தமிழக வெற்றி கழகத் தலைவர் மாண்புமிகு மக்கள் முதல்வா சி ஜோசப் விஜய் அவர்கள் பயணித்து வருகிறார்.
இத்தகைய நற்பயணங்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் சங்கு ஒலிக்கட்டும், தேவைப்படும் போது சங்கு இடியாகவும் முழங்கட்டும்.
வாழ்க வைகோ மாமா அவர்கள்! தொடர்க அவர்களின் மக்கள் தொண்டு!
அவரின் எழுத்தோவியங்களைத் தாங்கி வரும் சங்கொலி ஏடு வளர்க! வெல்க!







