மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் வாளும் கேடயமுமாக விளங்கி வருகிற சங்கொலி 30 ஆம் ஆண்டில் தனது சுவடுகளை அழுத்தமாக எடுத்து வைத்து பயணிக்கத் தொடங்கிவிட்டது.
சங்கொலி முதலாம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் 31.1.1997 ஆசிரியவுரையில், மறுமலர்ச்சி தி.மு.க.வின் அரசியல் பிரகடனம் எதுவோ அதனை நிறைவேற்றுகின்ற படைக் கருவியாக சங்கொலி செயல்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.
சங்கொலி மறுமலர்ச்சி தி.மு.க.வின் படைக்கருவி மட்டுமன்று; அது திராவிட இயக்கத்தை அதன் எதிரிகளிடமிருந்தும், எதிரிகளிடம் சமரசம் செய்து கொள்வோரிடமிருந்தும் காப்பாற்றுகிற சங்கொலியின் ஒவ்வொரு இதழும் நிரூபித்து வருகிறது.
சங்கொலியின் 'உள்ளுறை' திராவிட இயக்க உணர்வாளர்களை, இழந்த மகிழ்ச்சியைப் பெறச் செய்து இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில் கொடுக்க வேண்டியவர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதில் சங்கொலி ஒருபோதும் தயங்கியதில்லை. சங்கொலி கூடாநட்பையும் கொள்கை இழப்பையும் மேற்கொண்டதில்லை.
ஒவ்வொரு வாரமும் சங்கொலி வெளிவருவதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. அது ஒருபுறம் இருந்தாலும், அதன் முழுப்பரிமாணத்தைக் கழகத் தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் தமிழக மக்களுக்கும் வழங்கும் பணியில் மிகத் தீவிரமாக கழகப் பொதுச்செயலாளரும், சங்கொலியின் ஆசிரியருமான வைகோ ஈடுபாடு கொண்டு செயலாற்றி வருவதை நாம் அனைவரும் அறிவோம் என்று எழுதியது.
தொடர்ந்து, பொதுச் செயலாளரின் ஈடுபாடும், பணியும், செயலாற்றும் திறனும் அதற்குரிய பலனைப் பெற வேண்டுமானால் கழகத் தோழர்களின் ஆதரவு சங்கொலிக்கு 'முழுமையாக அளிக்கப்பட வேண்டும். கழகத் தோழர்களின் ஆதரவினையும், அரவனைப்பினையும் நம்பிதான் பிறப்பெடுத்தது என்றும், ஆசிரியர் வைகோ அவர்களோடு துணை நின்றுகொண்டு இந்த ஏட்டினை வாரந்தோறும் நாங்கள், நீங்கள் விரும்புகிற கோணத்தில் எல்லாம் சுவைபட தந்துவிட்டோமா?உங்களை நிறைவடைய செய்துவிட்டோமா? உங்களோடு இணக்கமாக உறவு கொண்டு, வரவேற்று அமைப்பில் கட்டுமானப் பணியில் நாங்கள் பங்கேற்று இருக்கிறோமா?
மறுமலர்ச்சிதி.மு.கவின் தலைமைக்கழகநிர்வாகிகள், மாவட்டம், செயலாளர்கள் விரிவடையும் அனைத்து கழக நிர்வாகிகளின் இதயத்தை நாங்கள் சுண்டி இழுத்து இருக்கிறோமா?
அவர்களது இதயத்தில் இடம் பெற்றிருக்கிற நிலையில் எங்கள் பணி அமைந்திருக்கிறதா?
இவை போன்ற கேள்விகளுக்கு ஆசிரியர் குழுவினரான எங்களுக்கு விடை அளிக்க முடியாது நீங்கள் தான் அவற்றிற்கான விடையளிக்கக் கூடியவர்கள்.
ஆனால், நாங்கள் ஓர் உறுதியை மட்டும் அளிக்க முடியும்.
திராவிட இயக்க அடிப்படையில் கருத்துகளை எடுத்துச் சொல்வதிலும், அரசியல் நிலைப்பாட்டிலும் எதிரிகளை விமர்சிப்பதிலும் சங்கொலியின் முழக்கம் மறுமலர்ச்சி தி.மு.க.வின் முழக்கமாக ஒலிப்பதற்கு நாங்கள் என்றும் துணை நிற்போம் என்கிற உறுதியை இந்தருணத்தில் வழங்குகிறோம் என்று எழுதியதை நினைவு கூர்ந்து இப்போது தொடர்ந்து 29 ஆண்டுகளாக பயணித்து 30 ஆம் ஆண்டில் தனது சுவடுகளை எடுத்து வைக்கிறது.
1994 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் நாள் மறுமலர்ச்சி தி.மு.க.வின் அதிகாரபூர்வ வார ஏடான 'சங்கொலி'யின் வெளியீட்டு விழா சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. விழாத் தொடங்குவதற்கு முன்பாக இனிமையான நாதசுவர இசை தேனாய்க் காதுகளில் வந்து பாய்ந்து மகிழ்வித்தது. விழா மேடையில் அனைவரும் அமர்ந்தவுடன் மறுமலர்ச்சி தி.மு.கவின் மகளிரணிச் செயலாளர் திருமதி. விஜயா தாயன்பன் தமிழ் வாழ்த்துப் பாடினார்.
அப்போதைய பொறுப்பாசிரியர் க.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றியதற்குப் பிறகு, விழாவுக்கு அப்போதைய கழக அவைத்தலைவர் எல்.கணேசன் தலைமையேற்றார். சங்கொலி வார ஏட்டை 'பிரண்ட் லைன்' ஆசிரியர் 'இந்து' ராம் வெளியிட முதல் இதழை கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக் கொண்டார்.
பிரண்ட்லைன் ஆசிரியர் என்.ராம் அவர்கள் 'சங்கொலி' வார ஏட்டை வெளியிட்டு பேசும் போது, ம.தி.மு.க.வின் வார ஏடாக இருந்தாலும் ஜனநாயகம் காக்கும் போராட்டத்தில் சங்கொலி ஓங்கி ஒலிக்கும் என்று நம்புகிறேன்.
இன்று தமிழக மக்களிடம் அரசியல் விழிப்புணர்ச்சி உருவாக வேண்டும். அதற்கு சங்கொலி துணை நிற்க வேண்டும். அதுதான் என் விருப்பம். இங்கு வந்துள்ளோர்களின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும். மத்திய அரசின் உலக மயமாக்கல் கொள்கையும் தாராளமயமாக்கல் கொள்கையும் நம் நாட்டின் பொருளார சுய சார்பை நாசப்படுத்தி வருகிறது. நம் நாட்டுத் தொழில்களை முடக்குகிறது. வறுமையை, வேலையின்மையை அதிகரிக்கிறது. இவைகளை மக்களுக்கு விளக்கிச் சொல்லும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.சங்கொலி அதைச் செய்யும் என்று நம்புகிறேன்.
"தெய்வம் பலச்சொல்லி பகைத் தீயை வளர்ப்பவர் மூடர்" என்று பாரதியார் பாடினார். நம் நாட்டில் மதத்தின் பெயரால் பகைத்தீ விசிறி விடப்படுகிறது. வகுப்பு வாத விஷப்பாம்பு ஆட்சிக் கட்டிலை குறிவைத்து நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை அடித்து விரட்ட வேண்டும். மக்களிடையே வகுப்பு நல்லிணக்கம் மேலோங்க வேண்டும். ஒற்றுமை கீதம் ஒலிக்க வேண்டும். சங்கொலியிலும் அது இரண்டறக் கலந்து வரும் என்று நம்புகிறேன் என்று வாழ்த்தினார்.
மேலும் அவர் தனது உரையில், "ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப் பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த பத்திரிகைப் பெண்ணே" என்ற பாவேந்தர் பாரதிதாசன் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி "விசாலப் பார்வையால் மக்களை இதமாய்ச் சங்கொலி வளர்க! வாழ்க!" என்று வாழ்த்தினார்.
மூத்த பத்திரிகையாளர் எஸ்.எஸ்.மாரிசாமி அவர்கள் பேசுகிறபோது, 'சங்கொலி என்பதுதான் தூய தமிழ்ச் சொல். தாரை, தப்பட்டை என்பதெல்லாம் கடன் வாங்கிய சொற்கள். எனவே, சங்குக்கு முன்னால் எதுவும் நிற்காது, சிதம்பரத்திலே நடராச பெருமானுக்கு ஆராதனை காட்டும் பொழுது ஊதப் படுவது சங்கு-மதுரை சொக்கலிங்கப் பெருமானுக்கு ஆராதனை காட்டும் பொழுது ஊதப்படுவது சங்கு.
இந்தப் பெரிய விழாவுக்கு வருமுன்னர் எனக்குக் களைப்பாக இருந்தது. உடல் நலமில்லை. வயதும் அதிகமாகிவிட்டது. இங்கே வந்து பார்த்த பின்னர் கூடியுள்ள இளைஞர்களையும் அவர்களின் வீரா வேசத்தையும் அவர்கள் காட்டுகிற துடிப்பையும் பார்க்கும்போது மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். பத்து வயது குறைந்து விட்டதாக உணருகின்றேன்' என்று தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசியபோது, 'திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை, திருச்சியிலே பெரும் பகுதி இந்த இடங்களிலெல்லாம் ஒரு காலத்தில் மடத்துப்பட்டி கோபால்சாமி நாயக்கர் என்று ஒருவர் இருந்தார். பிரபல காங்கிரஸ்காரர், கட்டுக் குடுமி. ஆறடி உயரம் இருப்பார். காவிக்கலரில் சட்டையுமில்லாமல் ஜிப்பாவுமில்லாமல் ஒன்றை அணித்திருப்பார். நல்ல திடகாத்திரமாக இருப்பார். இந்த ஐந்து மாவட்டங்களில் அவரை அசைக்க இன்னொரு ஆள் பிறந்துதான் வரவேண்டும். அந்த கோபால்சாமி நாயக்கர் யார் தெரியுமா? கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள், நம்ம வை.கோபால்சாமியின் சொந்தத் தாத்தா. மடத்துப்பட்டி என்கின்ற ஊரில் அவர் உட்கார்ந்து பஞ்சாயத்து பார்த்தால் அந்த ஐந்து மாவட்டங்களும் வந்துவிடும்.
இன்னொரு உண்மையைச் சொல்லுகிறேன். காமராஜர் அவர்கள் முதன் முதலாக தேர்தல் என்று நின்றது விருதுநகர் முனிசிபாலிட்டி கவுன்சிலராக. பின்னர் சட்டமன்றத்திற்கு வந்தார். அதற்கு மேலாக பார்லிமெண்டுக்கு போனார். பார்லிமெண்டுக்கு அவர் போன காலத்தில் கோபால்சாமி நாயக்கர் இல்லை. ஆனால், பாக்கி எல்லா தேர்தல் களத்திலும் அவருக்கு வேண்டிய முத்துசாமி ஆசாரி என்ற தலைவரைக் கூட்டிக் கொண்டு மடத்துப்பட்டிக்குப் போய் கோபால்சாமி நாயக்கரிடம் ஆசி வாங்காமல் காமராசர் வந்ததே கிடையாது.
காமராசர் ஒரு வார்த்தை சொன்னாரென்றால் அதற்கு கோபால்சாமி நாயக்கருடைய ஆதரவு இருக்கின்றதென்று தான் மக்கள் நம்புவார்கள். அப்பேர்ப்பட்ட பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இன்றைய தினம் ம.தி.மு.க தலைவராக இருக்கின்றார். நான் அவரையும் உங்களையும் பார்க்கும்போது, இங்கே குழுமியிருக்கக் கூடிய வாலிபப் பட்டாளத்தையும் பார்க்கும்போது என் மனம் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றது' என்றார்.
மேலும், வைகோ அவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் இத்தனை பெரிய மாபெரும் சக்தியைத் திரட்டுவார் என்று நான் நினைக்கவேயில்லை. அந்தக் கட்சியை இன்றுதான் ஆனந்தமாகப் பார்த்தேன். அதுவும் யாரை எதிர்த்து! பெரிய பெரிய வாரிசுகளை வைத்துக் கொண்டிருப்பவர்களை எதிர்த்து சிங்கக் குகைக்குள்ளே நுழைந்து மல்லுக்கு நிற்கின்றார் என்று சொன்னால் அது மாபெரும் சாதனை. என் மனதிலே பட்டதை சொல்லுகின்றேன். இன்றைக்கு கட்டுக்கோப்பாக இருப்பது வைகோ கட்சிதான். நான் சொன்னால் அது நிச்சயமாக நடக்கும். நான் சொல்லுவது சரியாக இருந்தால் அடுத்து வரும் அமைச்சரவைக்கு வைகோ தான் தலைவர்' என்று பேசினார்.
அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்த தோழர் என்.சங்கரய்யா அவர்கள் வாழ்த்திப் பேசும் போது, திரு. வைகோ அவர்களும், மார்க்சியவாதிகளும் அரசியல்வாதிகள் என்ற முறையில் மட்டும் பழகவில்லை. ஒரு முக்கியமான வித்தியாசம் என்னவென்றால் நான் கடந்த காலங்களிலே தலைவர் அண்ணாதுரையிலிருந்து, கலைஞர் கருணாநிதியிலிருந்து, மறைந்த எம்.ஜி.ஆர் அவரது சகாகளிலிருந்து அதற்கு முன்னால் திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கத் தலைவர்களோடெல்லாம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் திரு.வைகோ அவர்களுக்கும் மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் வெளிப்படையானது. ஒளிவு மறைவில்லாமல் விவாதிக்கக் கூடிய ஒரு தன்மை பெற்றது என்பது இதில் முக்கியமானதாகும்.
எனவே, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரு நல்ல ஆட்சியை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு நமக்கு இருக்கின்றது. அதற்கான ஒரு புனிதப் போராட்டத்திலே நாம் இறங்கியிருக்கின்றோம். அதற்காக திறமையான முறையிலே நாம் செயலாற்ற வேண்டும், மக்களைச் சந்திக்க வேண்டும். இங்கே சங்கொலி பத்திரிகை வெளியிடப்பட்டிருக்கின்றது. தமிழகத்தினுடைய மக்களின் நலன்களைப் பாதுகாத்துக் கொண்டே தமிழ் மொழியை பாதுகாத்துக் கொண்டே தமிழ்மக்களுடைய கலாச்சாரத்தை பாதுகாத்துக் கொண்டே- தமிழ் மக்களுடைய தமிழ் தனித் தேசிய இனத் தன்மையைப் பாதுகாத்துக் கொண்டே இந்திய நாட்டினுடைய ஒற்றுமையைப் பாதுகாப்போம் என்று இரண்டு கட்சிகளும் ஏகமனதாக முடிவுக்கு வந்திருக்கின்றன.
என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இந்தத் தேர்தல் மட்டுமல்ல, தமிழகத்திலேயும் இந்தியாவிலேயும் உழைப்பாளி மக்கள் விவசாய மக்கள் அனைவரும் சுபிட்சமாக வாழக்கூடிய சோசலிச மாறுதல்களை இந்தியாவிலே நிறைவேற்றும் வரை மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் நீண்ட ஒரு ஒற்றுமைப் பாதையிலே போக வேண்டும்.
சீன தேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், சன்யாட் சென்னின் இயக்கமும் தோளோடு தோள் சேர்ந்து கரம் கோர்த்து அணி வகுத்துப் பயணம் நடத்தியது போல மறுமலர்ச்சி தி.மு.க.வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பயணம் நடத்தும்.
திராவிட இயக்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்தத் தமிழகத்திலே சமுதாய சீர்திருத்தத்திற்காக, பெண்கள் விடுதலைக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுடைய முன்னேற்றத்திற்காக, உழைப்பாளி தொழிலாளத் தோழர்களுடைய நன்மைக்காக நீண்ட காலமாக இணைந்து போராடி வந்திருக்கின்றன. அந்த மரபின் பெயரால் இந்த இலட்சியப் பயணம் தொடரும் என்று கூறினார்.
'சுதேசமித்திரன்' ஆசிரியர் நாகராசன் அவர்கள் தனது வாழ்த்துரையில், சங்கொலி துவக்க விழாவிலே முதல் சங்கை எடுத்து சங்கரய்யா சங்கநாதம் செய்திருக்கின்றார். கொள்கை ரீதியாக, அரசியல் ரீதியாக மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கும், மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சிக்கும் பொதுவான கருத்துக்கள் என்ன எந்தக் கொள்கைக்காக நாட்டிலே அவர்கள் ஒன்றுபட்டிருக்கின்றார்கள் என்பதை மிகத் தெளிவாக அவர் உங்களிடத்திலே விளக்கியிருக்கின்றார்.
பத்திரிகை நடத்துவது என்பது சாதாரண விசயமல்ல. ஒரு அரசியல் கட்சியைவிட அதிகப் பொறுப்பாகத்தான் இப்பொழுது பத்திரிகைகளை நடத்த வேண்டும். பத்திரிகைகளென்றால் அவைகளுக்கு ஒரு கொள்கை இருக்க வேண்டும். ஒரு கோட்பாடு இருக்க வேண்டும். ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். பத்திரிகைகள் ஒரு தொழிலாக மாறி விட்ட பிறகு இப்பொழுது இலட்சியப் பத்திரிகை வேண்டுமென்கிறபோதுதான் வைகோ, அவர்கள் சங்கொலியை ஆரம்பித்திருக்கின்றார்கள்.
பத்திரிகைகளைப் பிரித்துப் படிக்கின்ற எம்.பி.க்களில் ஒருவர் வைகோ பிரிக்காமலே கூடையில் போடுகின்றவர்கள் பலர். ஆகவே, அவர் அங்கு பெற்ற பயிற்சி கண்ணியமாகவும் நாணமாகவும் நல்ல தொண்டனாகவும் அரசியலிலே வளர்ந்த வளர்ச்சி அத்தனையும் இப்பொழுது பயன்படுகிறது. அது பயன்தரக்கூடிய காலமும் வந்திருக்கின்றது.
டெல்லிக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களிலே நாள்களையும் காலத்தையும் வீணாகக் கழித்துவிடாமல் 18 ஆண்டுகளிலும் பொன்னாக நேரத்தைக் கழித்தவர் வைகோ. பாராளுமன்றத்திலே இருக்கின்ற உறுப்பினர்களுக்குக் கட்டுக்கட்டாக பாராளுமன்ற நடவடிக்கைகள் வருகின்ற போதெல்லாம் அப்போது நீங்கள் அனைவரும் அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கொள்கை அடிப்படையிலே என்று கேட்டுக் கொண்டு இலட்சியமான அவருடைய சங்கொலி பத்திரிகை தொடர்ந்து வெற்றி பெற்று வார இதழாக மட்டு மல்லாமல் நாளிதழாக மலர்ந்து சிரஞ்சீவியாக வாழ வேண்டுமென்று நான் வாழ்த்துகின்றேன் என்று வாழ்த்தினார்.







